Wednesday, September 26, 2007

பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது



பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது

பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஒரு புத்தபிக்குகள் குழுவினர் கடுமையாக தாக்கப்பட்டு, அவர்களது மழிக்கப்பட்ட தலைகளிலிருந்து இரத்தம் கொட்டியதைக் காண முடிந்தது.

மற்றுமொரு குழுவினர், இராணுவ ட்ரக்குகளுக்குள், இழுத்துச் செல்லப்பட்டனர்.

சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட், பாங்காக்கிலிருந்து அனுப்பிய செய்தி ஒன்றில் கூறுகிறார்.

இந்தக் கைதுகளையும் மீறி, புத்த பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து, தடியடி நடத்தியபோதும், இந்தக் காவி நிற உடுப்பணிந்த பிக்குகள் ரங்கூனின் மையத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தனர்.

இந்தத் தாக்குதல்களில் ஷ்வெடகோன் பகோடா என்ற புத்த விகாரத்திற்கு அருகே நடந்த மோதல்களில் குறைந்தது 100 பிக்குகள் தாக்க்பட்டு கைது செய்யப்பட்டதாக ரங்கூனில் உள்ள பிரிட்டிஷ் தூதரக வட்டாரங்கள் எமது பிபிசியின் பர்மிய சேவைக்கு தெரிவித்தன

ஆறு புத்த மடாலயங்கள் படையினரால் சூழப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து மேலும் புத்த பிக்குகள் வெளியேறி ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சேர்வதைத் தடுக்கும் பொருட்டே இந்த் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ரங்கூனில் உள்ள புத்தபிக்குகளூக்காக பேசவல்ல ஒருவர் , பிபிசியின் பர்மிய சேவையிடம் பேசும் போது, அரசு தங்களிடம் பேச ஒப்புக்கொள்ளும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும், அதிகரிக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே, கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்தும் மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ரங்கூனில் உள்ள மருத்துவமனையிலிருந்து வந்த தகவல்படி குறைந்தது ஒருவர் இந்த மோதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டாலும், நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவிலிருந்து இயங்கும் தொலைக்காட்சி நிலையமான பர்மிய ஜனநாயகக்குரல் என்ற தொலைக்காட்சி நிலைய துணை இயக்குநர், கின் மாங் வின், பிபிசியிடம் கூறும்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தமக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

செய்தியின் மூலம் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:46 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க