Tuesday, September 16, 2014

ஐஸ் கிறீம் கனவுகள்...!!என்னடி நிஷா நட்டு நடுராத்திரில எழும்பி இருந்து அழுகிறா... என்று.. தனது 6 வயதேயான.. மகளை வெறித்துக் கொண்டிருந்தார்.. அம்மா தனம்.

தனமும் குடும்பமும்.. ஜேர்மனிக்கு அகதி என்று போய்..15 வருசம் கழித்து இப்ப தான் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலையில்.. வந்த அன்றே நடுநிசியில்.. நிஷாவின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அம்மா தனம்.. காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தாள்.

சொல்லண்டி.. என்ன வேணும். உடம்புக்கு ஏதேனும் செய்யுதே. வாயத் திறந்து சொல்லண்டி.. சொன்னா தானே தெரியும். என்ன.. வெக்கையாக் கிடக்கே. அம்மா னேய்.. அங்கை இருந்து அனுப்பின காசுகளை என்னன செய்தனீ. உந்த வீட்டுக்கு கரண்டும் போட்டு.. ஒரு பானும் வாங்கி வைக்க முடியாமலோன இருந்தனீ.. என்று மகள் மீதான ஆத்திரத்தை தனது வயதான ஊரோடு தங்கிவிட்டிருந்த தாய் மீது திசைமாற்றினால் தனம்.

வந்ததும் வராததுமாய் மகள் தனம்.. தன் மீது ஏறிப் பாய்வதை.. பக்கத்தில் மூலைகள் கிழிந்த ஓலைப்பாயில் சுருண்டு படுத்திருந்த அம்மா கேட்டிட்டு.. பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டிட்டு.. மனசுக்க... "அனுப்பிற காசு.. காணில கிடக்கிற பத்தையளை வெட்டிற கூலிக்கே காணாது. இதில வீடத் திருத்தி.. கரண்டும் எடுத்து.. பானும் வேண்டி வைக்காத குறைதான்...! அங்க வெளிநாட்டில இருந்திட்டு... இஞ்ச எல்லாம் வெளிநாட்டில இருக்கிறது போல இருக்கு என்ற நினைப்போட வெளிக்கிட்டு வாறது. இஞ்ச வந்த உடன..நிலைமை தலைகீழ் என்றதும்... எங்களைப் போட்டுத் திட்டிறது" என்று நினைத்துக் கொண்டவர்... தொடர்ந்து மனசு பொறுக்காமல்..

பிள்ள தனம்.. என்னைத் திட்டி என்ன பயன். கொப்பரும் தானே இஞ்ச கூட இருந்தவர். அவரைக் கேளன். அவர் வெளில கோலுக்க.. ஈச்சாரில படுத்துக் கிடந்து.. நல்ல குறட்டை விடுறார். உன்ர மகள்.. வெக்கை என்று அழுகிறாள் என்றால் அதில.. ஓலை விசிறி கிடக்கு எடுத்து விசிறி விடு. நான் உனக்கு வரமுதலே சொன்னான் தானே.. இஞ்ச நிலைமை கஸ்டம். வந்தா கொட்டலில நில்லுங்கோ என்று. இல்லை ஊரில சொந்த மண்ணில தான்.. நிற்கப் போறன் என்று அடம்பிடிச்சு வந்து போட்டு..இப்ப எங்களைத் திட்டி என்ன பிரயோசனம்.

உங்களோட கதைச்சால் எனக்கு விசர் தான் வரும் அம்மா. அங்க இருந்து இவ்வளவு காசு அனுப்பியும்.. சரி.. உதுகளை விடுங்கோம்மா. ஏண்டி நிஷா ஏன்ரி இன்னும் அழுகிறாய்.. என்ன வேணும் எண்டு சொல்லித் தொலையேண்டி... என்று தனம் தாய் மீது வந்த ஆத்திரத்தை மகள் மீது காட்டி.. எரிந்துவிழுந்து கொண்டிருக்க... தாயைப் பார்த்து மகள் நிஷா...

ஐஸ் கிறீம் வேணும்.. மம்மி என்றாள்.... சற்றே அழுவதை நிறுத்தி.

இந்த சாமத்துக்க எங்கடி போறது ஐஸ் கிறீமுக்கு. இதென்ன ஜேர்மனியே பிரிச்சை திறந்து நினைச்ச நேரத்துக்கு ஐஸ் கிறீம் குடிக்க. இது யாழ்ப்பாணமடி. அதுவும் இங்க வீட்டுக்கு கரண்ட் கூட இல்லை. இவை இப்படி இருப்பினம் என்று நான் கனவிலும் நினைக்கல்ல. நீ வேற.. ஐஸ் கிறீம் கேட்டு.. கொதியைக் கிளப்பாத. விடிய யாழ்ப்பாணம் ரவுனுக்கு போய் கூல் பாரில ஐஸ் கிறீம் குடிப்பம்.. இப்ப படடி செல்லம்.. என்று மகளுக்கு விளங்கின.. விளங்காத விளக்கங்கள் எல்லாம் சொல்லி.. தனம் அவளை சாந்தப்படுத்த.. அவளும் அழுத களைப்போடு அயர்ந்தே தூக்கி விட்டாள்.

மறுநாள்...

காலையில் எழுந்ததும் எழாததுமாக.. நிஷா ஐஸ் கிறீம்.. கூல் பார் நினைப்போடு தாயை நச்சரிங்க.. தனம் கணவனை பார்த்து.. ஏங்க.. அந்த வான்காரப் பொடியனை கூப்பிட்டுச் சொல்லுங்க. ரவுனுக்கு போகனுமாம்.. கெதியா வரச்சொல்லி.

அவரும் மனைவி சொற்படி நடக்க... வானும்.. வந்து சேர.. தனமும் குடும்பமும்.. யாழ்ப்பாணம் ரவுனை நோக்கி பயணமாகினர்.

பயணம் முழுவதும்... மகள் நிஷாவின் ஐஸ் கிறீம் நச்சரிப்பு தாங்க முடியாமல்.. தனம்.. வானை லிங்கம் கூல் பார் வாசலில் நிறுத்தச் சொல்லி நிற்பாட்டி.. இறங்கிக் கொள்ள.. மகள் நிஷா ஓடிப்போய் கூல் பாருக்குள் அமர்ந்து கொண்டாள். மகளின் மகிழ்ச்சியான அந்த தருணத்தை ரசித்தவளாய் தனம்.. பார்த்தியளே இப்ப தான் ஜேர்மனில இருந்த கப்பி அவளுக்கு என்று கணவனைப் பார்த்து சொல்ல.. அவரும் அதற்கு ஒத்திசைவாக தலையை ஆட்டிக் கொண்டார்.

மூவரும்.. லிங்கம் கூல் பாரில் வகை வகையான குளிர்பானங்கள் அருந்திவிட்டு.. வெளியே வரும் போது.. ஒரு 5 தே வயதான சிறுமி.. அழுக்கான உடைகளோடு.. நிஷாவிடம் வந்து..  அக்கா.. பிச்சை போடுங்க என்று கையை நீட்ட.. நிஷா.. நிதானித்து நின்று.. தாயைப் பார்த்தாள். தாய் கண்ணால்.. தள்ளி நில் என்று சைகை செய்ய.. நிஷா புரிந்தும் புரியாதவளுமாய்.. சுற்றிமுற்றிப் பார்த்தாள். அந்தச் சிறுமியின் தாயும்..அவளைப் போலவே அழுக்கான கிழிந்து தொங்கும் சேலை ஒன்றை உடுத்தவராய்.... பித்துப் பிடித்தவர்.. போல..இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வந்ததும் வராததுமாய்.. அந்தச் சிறுமியின் தாய்.. தனத்தைப் பார்த்து.. அம்மா.. நாங்கள் வன்னியில இருந்து வந்து கஸ்டப்படுறம். இவள் என்ர மகள் தான். என்ர அவர் அடிபாட்டில போய்ட்டார். அதுக்கு அப்புறம்.. வன்னி அடிபாட்டுக்க சிக்கி.. சரியா கஸ்டப்பட்டு இங்க வந்து இப்படி வாழ்க்கை வாழ வேண்டியதாக் கிடக்கு..பிள்ளைக்கு படிப்பும் இல்லை.. என்று சொல்லி.. தனத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முனைந்தார்.

நிஷாவோ அந்தத் தாய் சொல்வதை முழுசா விளங்கிக் கொள்ள முடியாமல்.. அம்மா.. அந்தத் தங்கச்சிக்கும் ஒரு ஐஸ் கிறீம்.. வேண்டிக் கொண்டுங்களேன்... என்று கேட்க.. பேசாமல் இரடி.. என்று தாய் தனம் காதுக்குள் வெருட்ட.. நிஷா மெளனமானாள்.

என்னங்க.. ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா தாங்களன். வன்னில இருந்து வந்து கஸ்டப்படுகுதுகளாம்.. என்று.. தனம்.. கணவனைப் பார்த்துக் கேட்க.. அவரோ.. நிலைமையை உணர்ந்த கணவராய்... என்னட்ட மாத்தின காசில்லையேடியப்பா என்று சமாளிக்க..

தனம் அந்த ஏழைத் தாயைப் பார்த்து.... பிறகு இஞ்சாளப் பக்கம் வரேக்க மாத்தின காசிருந்தா தாறம்.. என்று சொல்லி அந்தத் தாயிடம் இருந்து காய்வெட்ட.. நிஷா தாயையும் தகப்பனையும்.. அந்தச் சிறுமையையும் தாயையும் மாறி மாறி பார்த்தவளாய்.. பக்கத்து வீதியில் நின்று கொண்டிருந்த அவர்கள் வந்த வானில் ஏற நடக்கும் பெற்றோரை பின் தொடர்ந்தாள்.. பல வினாக்கள் மனதில் எழ..!!!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:34 PM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு | Back to Main

Saturday, August 16, 2014

புலிப்பார்வை மீதான மாணவர்களின் போராட்டமும்.. சண்டையும் : எமது பார்வை.எமது பார்வை: இந்தப் பிரச்சனைக்கு மாணவர்களிடமும் புலிப்பார்வை குழுவினரிடமும் உள்ள விரிசல் தான் காரணம் எனலாம்.

சீமானின் நிலைப்பாடு இதில் தெளிவானது. புலிப்பார்வை படமும் அண்மையில் வெளியாகிய பல ஈழத்தமிழர் விரோத திரைப்படங்கள் போல வெளியாகாமல்.. அதனை நெறிப்படுத்தி வெளியிடச் செய்வதே சீமானின் நோக்கமாக உள்ளது. இதற்காக அவரைப் பாராட்டலாம். எல்லாரும் வெளியில்.. இருந்து.. போராடிக் கொண்டிருந்தால்.. படத்தை வெளியிடுபவர்கள் வேறு மார்க்கங்களை அணுகி முற்றிலும் எமக்கு பாதகமான படமாக இதனை வெளியிட முடியும். அந்த வகையில்.. சீமானின்.. இந்த அணுகுமுறையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. முற்றிலும் எமக்கு பாதகமாக படம் வெளியிடப்படுவதை தடுப்பதே சீமானின் நோக்கமாக இருக்க முடியும்.

முன்னரும்.. ஹிந்தியர்களாலும்.. மலையாளிகளாலும் உருவாக்கப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பை காட்டிய போதும் அவை தமிழகம் தவிர வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. ஈழத்தமிழர்கள் எமக்கு விரோதமாக எமது நியாயங்களை பலவீனப்படுத்துவனவாக அவை அமைந்திருந்தன. இந்த நிலையை புலிப்பார்வையிலும் உருவாக்க சீமான் விரும்பி இருக்காமல் இருக்கலாம்.

மாணவர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால்.. அவர்கள் இதனை சீமானுக்கு எதிராக அன்றி.. புலிப்பார்வைக்கு எதிராக மட்டும் வைத்திருப்பதோடு.. இந்தப் போராட்ட சூழலை மையப்படுத்தி.. காரணம்காட்டி.. புலிப்பார்வை படக்குழுவினர் மீது சீமான் போன்ற தலைவர்களின் உதவியுடன் ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க பாவித்திருக்கலாம். அடிதடி.. என்று போய் இருக்கத் தேவையில்லை.

தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க காத்திருக்கும் சக்திகளுக்கே இதனால் இலாபமாகும். அத்தோடு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் இப்படியான உணர்ச்சிச் செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகின்றன.

சீமான் போன்ற தலைவர்கள் படக்குழுவினர் மற்றும் மாணவர்களுக்கிடையே தொடர்பாளர்களாக இருப்பதை விட்டு.. பிரச்சனைகள் பெரிதாக அனுமதிப்பது நல்லதல்ல. அது நாம் தமிழர் கட்சி கொண்ட கொள்கைக்கு உதவுமாப் போலும் இல்லை..!

ஆகவே எதிர்காலத்தில்.. இவ்வாறான உணர்ச்சிமிகு வேளைகளில் தலைவர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்ட இதர தரப்புக்களும் பொறுமையோடும்.. தொலைநோக்கோடும்.. ஒற்றுமையோடும் செயற்பட முன்னுரிமை அளிக்க வேண்டும்.. என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அதுவே பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இருக்க முடியும்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:11 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு | Back to Main

Sunday, July 27, 2014

சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!!

புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!!

மடல்::::(புலிப்பார்வை படக் காட்சி)

இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன் வெளியில் தான் வெளிப்படையாக சொல்லுவாரா..??! மாட்டார். ஈழத்தில்.. பிள்ளை பிடியின் ஆரம்பமே இதுவாகத்தான் இருக்க முடியும்...!


(சிறீலங்கா சிங்கள இராணுவ சிறுவர் படையணி அணிவகுப்பு - காலி)

விடுதலைப்புலிகளிடம் மட்டுமல்ல.. இஸ்ரேலிடமும் சிரார் படையணி உள்ளது. சுவிஸிடமும் உள்ளது. சிங்கப்பூரிடம் உள்ளது. இப்போது சிறீலங்கா இராணுவமும்.. கடேட் (cadet) என்ற பெயரில்... வைத்திருக்கிறது. பிரிட்டனிடமும்.. நிறைய கடேட் என்ற பெயரில்.. சிறுவர்கள் சீருடை அணிந்திருக்கின்றனர்..கடின பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கனரக ஆயுதங்களை பாவிக்க பழக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சிறுவர் போராளிகளாக காட்ட நினைத்தால் காட்டலாம். விடுதலைப்புலிகளிடம்.. கடேட் இருந்தன. அவர்கள் சண்டைக்கு அனுப்பப்படுவதில்லை. பெரும்பாலும் அணிவகுப்புகளில் ஈடுபடுவார்கள். களப் பின்பணிகளில் ஈடுபடுவதுண்டு. அவர்கள்.. இந்தியா ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்து செய்தது போல.. பிள்ளைகளை பிடித்து.. ஆயுதம் வழங்கி.. வீதியில் விட்டு ஒட்டுக்குழுக்களை பாதுகாக்க அடிபட விடவில்லை..!

இந்த உண்மையையும் பேசுங்கள். தேனி.. நெருப்பு இவற்றை பேசாது. ஏனென்றால் அவை ஒட்டுக்குழுக்களின் எல்லா அராஜகங்களையும் நியாயம் என்று போதிக்கும்.. ஒரு கொரூர எண்ணத்தில் வளர்ந்த இணைய பார்த்தீனச் செடிகள்..!!!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:06 PM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு | Back to Main

Saturday, July 26, 2014

புலிப்பார்வை: சும்மா டோப்பு.. டூப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்..விலை மதிக்க முடியாத தியாகங்களை இரண்டு தரப்பு.. தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு.. கொச்சைப்படுத்திக் கொண்டு திரிகிறார்கள். இந்த இரு தரப்பினர் குறித்தும் மக்கள் மிக விழிப்போடு இருக்க வேண்டிய காலம் இது.!!!!!

1. முன்னாள் இயக்கம்.. இயக்க ஆட்கள்.. (ஒட்டுக்குழுக்களை சார்ந்தோரும்) என்று சொல்லிக் கொண்டு எமக்குள் உள்ள ஒரு குறூப்.

2. சினிமா உலகத்தினர். அது.. சிங்கள சினிமாவா இருக்கட்டும்.. மலையாளமாக இருக்கட்டும்.. ஹிந்தியா இருக்கட்டும்.. ஆங்கிலமாக இருகட்டும்.. தமிழாக இருக்கட்டும்...தென்னிந்திய தமிழ் சினிமா உலகம்.. இன்னும் எமது போராட்டத்தை மக்களின் உணர்வுகளை சரியாக இனங்காணவும் இல்லை.. இனங்காட்டவும் அதுக்கு திராணி இல்லை.. என்பதை தான் இப்படம் இனங்காட்டுகிறது.

தமிழக சினிமா மோக மக்களிடம் மாயை உணர்ச்சிகளை கிளறிவிட்டு.. காசு பார்ப்பது எல்லாம் வரலாற்றுப் பதிவைச் செய்வதாகி விடாது.

இப்படத்துக்கு.. வை.கோ.. நெடுமாறன் ஐயா.. சீமான்.. போன்றவர்களிடம் ஆலோசனை பெறப்படுவதாக நக்கீரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. உண்மையில் ஆலோசனைகள் பெறப்படுகின்றனவா.. அல்லது அப்படிச் சொல்லி.. இந்தப் படத்தை புரமோட் பண்ணுகிறார்களா..???!

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு இனத்தின் தேச விடுதலைக்காக போராடிய அமைப்பு. காந்தி தாத்தா தலைமையிலான.. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான ஒன்று. ஏன் அதைவிட அதிக தியாகங்களை வழிகாட்டுதலை மக்களின் விடுதலைக்காக வழங்கிய ஒரு அமைப்பு.

அதனை.. எதிரியின்.. ஒரு போர்க்குற்ற நிகழ்வை மக்களுக்கு காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு... சினிமா.. ஹீரோ வில்லத்தனமாக.. சித்தரிப்பது.. போர்க்குற்றங்கள் தொடர்பிலான மதிப்பீட்டை தமிழ் சினிமா உலகம் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றே அடையாளப்படுத்துகிறது.

மேலும் தேசிய தலைவரை.. யாரும் பிரதியீடு செய்ய முடியாது. அது சினிமாவிலும் கூட. பிரபாகரன் துப்பாக்கி எடுத்து சும்மா.. சுட்டுக்கொண்டு திரிந்த மனிதர் அல்ல. ஒவ்வொரு ரவைக்கும்.. பாவனைக்கும்.. காரணம்.. கணக்குத் தேடும்.. ஒரு விடுதலை அமைப்பின் தலைவர்.  பாலச்சந்திரன் தேசிய தலைவரின் மகனாக இருந்த போதும்.. சாதாரண பள்ளி மாணவனாகவே இறக்கும் வரை வளர்ந்துள்ளார்... வளர்க்கப்பட்டுள்ளார்.தென்னிந்திய சினிமா உலகத்தவர்களே. உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.  ஆனால்.. தவறான தரவுகள் அடங்கிய படங்களை தயாரித்து சர்ச்சைகளையும்.. வாதப் பிரதிவாதங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பதிலும்.. தயவுசெய்து உங்களால் முடிந்தால்... திறமை இருந்தால்.. சனல் 4 போல் ஆவணங்களை வெளியிடுங்கள். உலகிற்கு தமிழ் மக்களின் நிஜமான உணர்வுகளை பிரதிபலித்து நில்லுங்கள். இனப்படுகொலையாளனை தண்டிக்கத்தக்க... நிஜமான உண்மைகளை திரையில் காட்டி.. உங்களை ஆற்றலையும்.. திறமையையும் உலகம்.. உதாரணமாக்கிக் கொள்ள.. அது எமது இன மக்களின் துன்பங்களை நீக்கி.. விடுதலைக்கு உதவ பக்க பலமாக இருங்கள்..!

வை.கோ.. நெடுமாறன்.. சீமான்.. இவர்களை மட்டுமல்ல.. வெளிநாடுகளில்.. எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்கள்.. போர்க்களத்தில் வாழ்ந்த..நிஜ சாட்சியங்களாக உள்ளனர். அவர்களை அணுகுங்கள்.. அவர்களின் உணர்வுகளை.. சாட்சியங்களை பதிவு செய்யுங்கள். ஈழக் களத்தில் இருந்தான எத்தனையோ நிஜ காட்சிகள் பதிவுகள் உள்ளன. அவற்றை பெறுங்கள்... ஒருங்கிணையுங்கள்.. திரைக்கு மட்டுமல்ல.. உலகின் முன் ஒரு ஆதார ஆவணமாக்கிப் போடுங்கள். அது தான் இன்றைய தேவை. நாளைய சந்ததிக்கும் நிஜத்தை காட்ட உதவும்.

சும்மா டோப்பு.. டூப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..! அதுவே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்..!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:19 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு | Back to Main