Monday, October 01, 2007

உலக வெப்பமுறுதலின் விளைவுகள்- 2



தொற்றுநோய்கள் அடிப்படையில் உயிரற்ற கூறுகள் மூலமும் உயிர்க் கூறுகள் மூலமும் (vectors) பரப்பப்படுகின்றன. அதாவது நோயை உருவாக்கும் நோய்க் கிருமிகள் காற்று நீர் உணவு போன்ற காரணிகளூடு பரவுவது மட்டுமன்றி மனிதன் பூச்சிகள் விலங்குகள் பறவைகள் மூலமும் மனிதனுக்கு மனிதன் காவப்படுகின்றன..!

அதுசரி..சூழல் வெப்ப அதிகரிப்பால் எப்படி நோய் அதிகரிக்கும் என்று கேட்பது தெரிகிறது..

அதிகரிக்கும்.. காரணம் வெப்ப வலயத்தில் வாழுகின்ற நுளம்பு, உண்ணி, மைற் போன்ற பூச்சிகள் சூழல் வெப்ப அதிகரிப்பால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் உள்ளடங்க உலகில் உள்ள இடைவெப்ப வலய நாடுகளுக்கு அவை பரவி மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவச் செய்யப்படும். இது ஏலவே மத்திய ஆசிய நாடுகளை அண்டிய நாடுகளான Azerbaijan, Tajikistan மற்றும் Turkey போன்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்து அவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா எச்சரிக்கை வலய நாடுகளுக்குள் இடப்பட்டும் ஆயிற்று.

இவை தவிர நோயாக்கும் நுண்கிருமிகளில் வெப்பவலயத்துக்குரிய ஆபத்தான கிருமிகள் இடைவெப்ப வலயத்துக்குள் பரவி தாக்கங்களை ஏற்படுத்தும் போது இடைவெப்ப வலயத்துக்குள் வாழ இசைவாக்கப்பட்ட மக்கள் கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது போதுமானதாக இல்லாத நிலையில் கொடிய தொற்றுநோய் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அதுமட்டுமன்றி இடைவெப்ப வலய நுண்கிருமிகளே வெப்ப மாற்றத்துக்கு ஏற்ப மாறல்களை உருவாக்கின் அவை தற்போதுள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அல்லது தற்போது வழங்கப்படும் நிர்பீடனங்களுக்கு கட்டுப்படாத நிலை ஏற்படும். இவை உலக அளவில் நோய்கள் (Pandemic) பெருகவும் தொற்றுக்கள் அதிகரிக்கவும் வகை செய்யும்..! நோயாக்கும் நுண்ணங்கிகள் குறுகிய கால வாழ்க்கை வட்டம் கொண்டவை. ஆகையால் அவை விரைவாக சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவை..! மனிதர்களில் இவை நீண்ட கால அளவில் ஏற்படுபவை..!

யாழ் இணையம்

பதிந்தது <-குருவிகள்-> at 3:45 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க