Thursday, September 17, 2009

ரொயாட்டாவில் வந்த மாப்பிள்ளை...!



வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று..

வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன்.

வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன்.

அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?!

இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப் போல..!

அட இந்தா தம்பி வந்திடார். வாங்கோ தம்பி.. நான் பிள்ளை தினேசிகாவை கூப்பிடுறன்.

அதெல்லாம் வேண்டாம் அங்கிள். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள். ஆன்ரி எப்படி இருக்கிறா..??!

நாங்கள் எல்லாரும் நல்ல சுகம் தம்பி. இந்தக் கலியாண வீட்டை சிறப்பா முடிச்சால் தான் எனக்கு நிம்மதி... அது மட்டும் எனக்கு நிம்மதியில்ல.

டோண்ட் வொறி அங்கிள்.. அவாவை நான் தானே கலியாணம் கட்டப் போறன். பிறகென்ன கவலை உங்களுக்கு.

இல்ல தம்பி அவளுக்கும் உங்களோட நேரில கதைக்க விருப்பம் இருக்குமெல்லோ அதுதான் சொன்னேன்.

அவாட தானே நான் எனி தினமும் கதைக்கப் போறன். பிறகென்ன. அவாவோட ஆறுதலா கதைப்பம். இப்ப நீங்கள் சொல்லுங்கோ அங்கிள்..!

தம்பி நல்ல புத்திசாலியாத்தான் இருக்கிறீங்க. அதுசரி தம்பி கனடாவில நீங்கள் எந்த கம்பனில சொப்ட்வெயார் இஞ்சினியரா இருக்கிறீங்கள்..?!

அங்கிள் எங்கட கம்பனி கனடாவிலேயே பெரிய சொப்ட்வெயார் கம்பனி. மைக்குரோ சொப்டிண்ட பாட்னர் கம்பனி.

அப்படியே. அப்ப நீங்கள் பில் கேட்சின்ர கூட்டாளிகள் என்றுங்கோ.

அப்படியும் சொல்லலாம் அங்கிள்.

எனக்கும் பெருமையா இருக்கு என்ர பிள்ளை வாழப் போற இடம் பெரிய பெருமைக்குரிய இடம் என்றதில.

இவ்வாறு மாப்பிள்ளையும் மாமனும் தமக்குள் உரையாடிக் கொண்டிருக்கையில்..

டாட்.. நான் கொஞ்சம் அபினேஷ் கூட கதைக்கனும் என்று கொண்டு வந்தாள் தினேசிகா.

அட.. வா பிள்ளை.. உன்னைத் தான் தேடிக் கொண்டிருந்தன். என்ன விசயம் பிள்ளை கதைக்கனும். தப்பி இப்பதான் வந்திருக்குது.

அது தெரியும் டாட். முக்கிய விசயம் ஒன்று கதைக்கனும் டாட்.

டோண்ட் வொறி தினேசிகா. பேரன்ஸ் முன்னாலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கோ. ஐ டோண்ட் மைட்.

மீ ரூ. நானும் எல்லாரையும் வைச்சுக் கொண்டு தான் கதைக்கனும் என்று நினைச்சனான்.

அப்பா அம்மாக்கள் பொம்பிளையிட மாப்பிள்ளையிட சாட், போட்டோ, படிப்பு, வேலை.. தகுதி, அந்தஸ்து.. சாதி... அதுஇதென்று எல்லாப் பொருத்தமும் பார்த்து பொருத்திட்டினம். பேப்பரில எழுதி வைச்சதுகளுக்கு சுகமா பொருத்தம் பார்த்திட்டினம். ஆனால்.. என் மனசில உள்ள சிலவற்றிற்கு பொருத்தம் பார்க்கல்ல. அதுதான் நான் சிலவற்றை எல்லார் முன்னிலையிலும் சொல்லலாம் என்றிருக்கிறன். யாரும் தப்பா நினைக்கக் கூடாது.

நான் சின்னனில இருந்து பசுமை காப்பு இயக்கத்தில (Green peace) மெம்பரா இருந்து கொண்டிருக்கிறன். நாங்களும் மக்களுக்கு பல வழிகளில சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பில ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறம். ஆனால் அநேக மக்கள் அதில கவனம் செலுத்திறதா தெரியல்ல. எங்கட வீட்டில கூட யாரும் அதில கவனம் எடுக்கிறதா தெரியல்ல.

என்னைப் பொறுத்த வரை எனக்கு வாறவர் என்றாலும்.. சுற்றுச்சூழலை பாதுகாக்கிற செயற்பாடுகளில் அக்கறை காட்டிறவரா இருக்க வேணும். அபினேஷின் செயற்பாடுகளைப் பார்த்தா அப்படியா தெரியல்ல. ஆடம்பரமா கார்களில வாறதில இருந்து.. அவரிட்ட தான் ஒரு மணமகன் என்ற தோறணை இருக்கே தவிர.. வேற எதிலும் அக்கறை இருக்கிறதா தெரியல்ல. இப்படியே அவர் இருப்பார் என்றால்.. என்னால அவரோடு ஒத்துழைச்சுப் போறது என்றது கஸ்டமாத்தான் இருக்கும். இதைத்தான் நான் முக்கியமா சொல்ல வந்தனான்.

தம்பி.. தினேசிகா சொல்ல வந்ததைச் சொல்லிட்டா. இப்ப சுற்றுச்சூழல் என்றது எங்கட எதிர்கால சந்ததிகளின் வாழ்வைத் தீர்மானிக்கிற முக்கியமான விடயமாப் போச்சு. அதனை பாதுகாக்க பராமரிக்க அதில அக்கறை எடுக்கத் தெரிஞ்சிருக்க வேணும் என்ற தினேசிகாவின் விருப்பத்தில தவறிருக்கிறதா தெரியல்ல. சம்பந்தி நீங்கள் இதைபற்றி என்ன சொல்லுறீங்கள்..??!

எனக்கும் பிள்ளை சொன்னதில தப்பிருக்கிறதா தெரியல்ல. தம்பி நீ என்ன சொல்லுறா..??!

டாட்.. எனக்கு தினேசிகா விட பசுமைக் காப்புக் கொள்கை பிடிச்சிருக்குது. ஆனால் அவா போல என்னால சுற்றுச்சூழல் பற்றி கவனம் எடுத்து செயற்பாடுகளைச் செய்யுற அளவுக்கு பொறுமையில்ல. இதில நான் அவாவுக்கு பெரிசா உதவ முடியும் என்று நினைக்கல்ல.

என்ன தம்பி இப்படிச் சொல்லீட்டீங்கள்.

அங்கிள் நான் எனது மனசில உள்ளதை உள்ளபடி சொல்லிட்டன். அதன்படி தான் நான் நடந்து கொள்ள முடியும்.

அபினேஷ்.. நீங்க உங்க நிலைப்பாட்டை தெளிவா உள்ளதை உள்ளபடி சொல்லிட்டீங்க. அதை வரவேற்கிறன். ஆனால்.. அடிப்படையில நாங்க இருவரும் கருத்தொருமித்து செயற்படக் கூடிய சோடிகளாத் தெரியல்ல. அந்த வகையில எனக்கு இந்த திருமணத்தில அவ்வளவு ஈடுபாடில்லை. இப்படிச் சொல்லிட்டன் என்பதற்காக நீங்க ஆத்திரப்படவோ ஆவேசப்படவோ வேண்டியதில்லை. இப்ப போல நாங்க நல்ல நண்பர்களா இருந்து கொள்வம். எங்க பெற்றோரும் அப்படியே இருந்து கொள்ளட்டும்.

இதைக் கேட்டுவிட்டு...

என்ன பிள்ளையள் நீங்கள் ஆளுக்கொரு கருத்தோட இப்படி எங்களை தர்மசங்கடத்தில தள்ளி விட்டிட்டுயள் என்றார் சுந்தரேசன் வருத்தத்தோடு..!

அங்கிள் உங்களுக்காக நாங்கள் பொய் சொல்லிட்டு அப்புறம் எங்கட வாழ்க்கையில பொய்யா வாழ்ந்து கொண்டிருக்கிறதில அர்த்தமில்ல. அதுதான் நான் உள்ளதை உள்ள படி சொன்னன்.. என்னில கோவிக்காதைக்கு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான் அபினேஷ்.

அப்பா நானும் எனது மனசில உள்ளதையே சொன்னன். அவருக்கு என்ர கருத்தோட ஒத்துவர முடியாது எனும் போது அவரோட எனக்கும் மனசளவிலும் ஒரு இயைபு ஏற்படப் போறதில்ல. அப்படியான ஒரு வாழ்வு எங்களுக்கு அவசியமா சொல்லுங்க என்றாள் தினேசிகா தெளிவோடு.

சரி பிள்ளையள் நீங்கள் உங்கட உங்கட விருப்பப்படி முடிவுகளை எடுத்திடீங்க. இதில நாங்கள் இதுக்கு மேல தலைப்போட விரும்பல்ல. எங்களுக்கு இதால எந்த வருத்தமும் இல்ல. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க தீர்மானிச்சிட்டம் என்றதை மட்டும் நான் சுந்தரேசனுக்கு சொல்லுவன் என்றார் சந்திரகாசன்.

உங்களைப் போலவே தான் நானும் நினைக்கிறன் சந்திரகாசன்.

சரி அது போகட்டும்.. இப்ப எல்லாரும் வாங்கோ டினருக்குப் போவம் என்று கொஞ்சம் கவலையோடு விருந்தாளிகளை அழைத்துக் கொண்டு சென்றார்.. எதிர்பார்ப்பு ஈடேறாத சோகத்தை வெளியில் காட்டிக் கொள்ளாது சுந்தரேசன்.

ஆக்கம்: தேசப்பிரியன்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:40 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க