Sunday, May 17, 2020

வைகாசி-18

கோலமயில் தோகையிழந்தது
கூவும் குயில் குரல்வளை அறுந்தது
பாடும் மீன் ஓசையிழந்தது
தவளும் நண்டு கால்கள் முறிந்தது
முள்ளிவாய்க்காலில் இது நடந்தது.

காயமே ஆகாயம் என்றானது
காணாமல் போவது கணக்கில்லாமலானது
நம்பியவர்கள் கைவிட
நம்பியார்கள் கையோங்கியது.

பார்த்திருந்த ஆகாய மூன் கலங்கியது
பாங்கி மூன் ஜெனிவாவில் தூங்கியது
டெல்லியில் சொக்கத்தங்கம் மின்னியது
சென்னையில் கட்டுமரம் அதைத் துலக்கியது.

ஆறாறு ஆண்டுகள் சீறிப் பாய்ந்தது
அடிபட்டு மூச்சிழந்தது 
முறம்கொண்டு புலி விரட்டிய ஆச்சியது
பேரக்குஞ்சுகள் போரினில் சிதைந்தது.

ஓரிருவரா
ஆறுநான்கு உலகத்தார் ஒருங்கிணைந்து
தாக்கி அழிக்க
தாங்கி நிற்க
அதென்ன வெறும் வன்னிக்காடா
தசையும் இழையமும் பின்னிய மானுடம் தானே.

உள்ளத்தில் உரிமை வேட்கை
உடலினில் வேகம்
உடனிருந்தும்
கருவிகள் அங்கே கைவிட
சிங்கமேவிய போலிப்புனைவின் பிறப்புகள்
எதிரிகளாகி ஆங்கோர் கொடூரம் புரிந்தது
அடங்கியது தமிழ் ஈழ உயிர் மூச்சு.

அன்றில் இருந்து இன்றுவரை
ஆயிரம் சோகங்கள்
அடிமை வாழ்வில்
அடங்கி வாழ்வதே அழகாகிப் போனது.

எழும்பி நிற்க
கால்கள் இல்லை
பிடித்து நிற்க 
கரங்கள் இல்லை
இருந்தும்...
உள்ளே ஒரு ஏக்கம்
உறங்கித்தான் கிடக்கிறது..!!


ஆக்கம்: நான் (17.05.2020)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:41 AM | 0மறுமொழிகள் | Back to Main

Sunday, July 30, 2017

சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?!

நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை.

இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.
ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப் போராட்டமும் இல்லை.

ஆக இருப்பது அமைதி வழியில் நடத்தப்பட வேண்டிய இராஜதந்திரப் போராட்டமே.
1985/6 களில் ஹிந்தியா தமிழ் போராளிகளுக்கு நேரடியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில்.. அப்போதைய சர்வதேச ஒழுங்கில்.. இருந்த பனிப்போர் சூழலில்.. ஜே ஆர் ஜெயவர்த்தன.. அமெரிக்காவுக்கு நுரைச்சோலையில்.. வொய் ஒவ் அமெரிக்கா என்ற வானலை மையத்தை நிறுவ குத்தகைக்கு காணி விட்டுக் கொண்டிருந்தார். அது  அமெரிக்காவின் உளவு நடவடிகையின் நுழைவாகவே சோவியத் ஆதரவு ஹிந்தியாவால் பார்க்கப்பட்டது.

இன்று... இன்னொரு சூழல் எழுந்துள்ளது...

சீனாவின் ஆதிக்கம். அது பொருண்மிய ரீதியிலும் சரி.. இராணுவ ரீதியிலும் சரி.. விரைந்து வளர்ந்து வருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியம்.. பசுபி பிராந்தியம்.. அரபிக் கடல் பிராந்தியம் என்று சீனா அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்குப் போட்டியாக.. அமெரிக்க தலைமை நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது.

இப்போ.. ஹிந்தியா அமெரிக்காவின் பக்கம் நிற்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.. காரணம்.. சீனாவும் ரஷ்சியாவும் காட்டும் நெருக்கம் என்பது.. சீனா பாகிஸ்தானுடன் காட்டும் நெருக்கமென்பது.. சீனாவின் பல்வேறு பொருண்மிய.. இராணுவ நோக்கங்களைக் கொண்டது. ஆகவே சீனா அதனைப் பலப்படுத்துமே தவிர பலவீனமாக்காது. இந்த நிலையில்..ஹிந்தியா பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ள நிலையில்.. அது அமெரிக்காவை நோக்கி சார வேண்டிய நிலை உருவாகி இருக்கும் சந்தர்ப்பத்தில்..

சிங்களம்.. சீனாவை.. கூடிய அளவு அரவணைப்பதானது..  தமிழர்களுக்கு ஒரு ராஜதந்திர நகர்வுக்கான வெளியை உருவாக்கும்.

அந்த வெளியில்.. மேற்குலக தலையீடுகளுக்கான பலமான சூழலை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொடுப்பின்.. நிச்சயம் மேற்குலகத் தலையீட்டை ஹிந்தியா.. ஒரு தலைப்பட்சமாக எதிர்த்து நிற்க முடியாது.  இந்தச் சூழல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதிருந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
ஆனாலும்.. தமிழர் தரப்பு எப்படி.. மேற்குலக தலையீட்டுக்கான களங்களை அமைக்கும் என்பதில் தான் மற்றைய விடயங்கள் உள்ளன.

 நிச்சயம் தமிழர் தரப்பு மேற்குலக தலையீட்டுக்கு என்று திட்டங்களை வகுக்காமல்.. தமிழர் தரப்பின் நியாயங்களை அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை சான்றுகளாக்கி.. அதனூடு தமது நியாயங்களுக்கான எதிர்பார்ப்புக்களையும்... தீர்வுகளையும் திடமாக முன் வைத்து நிற்கும் போது.. நிச்சயம்.. அது சீன அணியின் கவனத்தையும் இழுக்கும்.. அமெரிக்க அணியின் கவனத்தையும் இழுக்கும்.

இதில்.. தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை.. போர்க்குற்றங்கள்.. நீதிக்கான விசாரணைகள் என்று சர்வதேசம் முன்மொழித்தவற்றோடு எமது திடமான நிலைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து.. நாம் எமக்குச் சாதகமான தலையீடுகளை நோக்கி ஒரு சூழலை எமது மண்ணில் உருவாக்கும் போது.. எமது மண்ணில் எமது அரசியலுக்கான ஆணித்திரத்தினை எமது மக்கள் வாக்கு பலத்தினூடு நிறுவி நிற்கும் போது.. இந்த உலகில் நிலை எடுத்திருக்கும் இரண்டு போட்டி அணிகளும் எம்மை அணுகியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கின்.. அதுவே ராஜதந்திர வெற்றியாக தமிழர்களுக்கு அமைய முடியும்.

புலிகள் அழிக்கப்பாட்டர்கள் என்று வெட்டிப் புளகாங்கிதம் அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. அது எதிரிக்கு தான் சார்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மாறாக விடுதலைப் புலிகள் இருந்தாலோ இல்லையோ.. தமிழர்களின்  சுயநிர்ணய சுயாட்சிக்கான.. அரசியல் கோரிக்கையுடன் கூடிய ஒற்றுமையான அரசியல் முன்னெடுக்கப்படின்.... தமிழர்களின் நில எல்லைகளும் காத்திரமாகப் பேணப்படின்..  எமக்கு சார்ப்பான சூழல்களை உலக அரங்கில் ஏற்படுத்தலாம்.

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பலமும்.. தமிழ் நாடு உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் பலமும்.. குரலும் ஒன்றிணைக்கப்பட்டால்.. நிச்சயம்... தமிழர்களால்.. சிங்களவர்களை விட.. உலகில் இன்று தோன்றி இருக்கும் இரண்டு போட்டி அணிகளையும் வைத்து தமக்குச் சாதகமான நன்மைகளை பெற அதிகம் முயற்சிக்க முடியும்.

அதனை விடுத்து.. மாவீரர்களை பயங்கரவாதிகள் ஆக்குவதாலும்.. புலிகளை இகழ்ந்து பேசுவதாலும்... நிலத்தை.. எமது மக்களின் தமிழர் தாயக அபிலாசைகளை கைவிடுவதாலும்.. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள்.. இனச்சுத்திகரிப்புக்கள்.. போர்க்குற்றங்களை மன்னிப்போம்.. மறப்போம் என்பதாலும்.. சிங்கள - இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களுக்கு எமது நிலத்தை எமது எல்லைகளை இழப்பதாலும்.. நாம் நிச்சயமாக.. இந்தப் பிராந்தியத்தில் எமது வலுவான இருப்பை உலகுக்கு நினைவுறுத்தவோ.. உறுத்திப்படுத்தவோ முடியாத சூழலே தோன்றும்.

நாம் யுத்தம் ஒன்றில்.. சர்வதேசத்தின் நலன்களை புறக்கணித்து எமது சொந்த மண்ணின் மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு நின்றதால்.. தோற்றோம். அதில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு.. எமது மண் மக்கள் சார்ந்து சோரம்போகாத வகைக்கு... அவை சார்ந்த அரசியலை வலுப்படுத்திக் கொண்டு.. சர்வதேசத்தின் நலன்களிலும் எமக்குச் சாதகமான தலையீடுகளுக்கு வழிவகுத்துச் செல்வதன் ஊடாகவே சர்வதேசத் தலையீட்டை நாம் உள்வாங்க முடியும். அன்றில். அது சாதாரணமாக அமையாது. இதில்.. மீண்டும்.. ஹிந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்து அது ஏதாவது செய்யும் என்று வாழாதிருந்தோம் என்றால்.. அதுபோல் முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால்.. புதிய உலகச் சூழலுக்குரிய.. நல்ல ஒரு தொடக்கத்தை எமக்கு வழங்கிச் சென்றிருக்கிறது. அங்கு சிந்தப்பட்ட இரத்தமும் இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கனவும் ஈடோறோனும் என்றால்.. நாம்.. பரந்து.. ஒற்றுமையாக.. எமது மண் மக்களின் நலனில் உண்மையான அக்கறையோடு சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.

இந்தச் சூழலை சிலர் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் இன்னும் குழம்பி அல்லது குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இதனை நோக்கி கொண்டு வர வேண்டும். ஆனால் குறுக்கால போவர்களை பற்றி அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல்..  எம்  மக்கள் பற்றிய சிந்தனையில் ஒரு நேச எண்ணங்களைக் கொண்டவர்கள் எல்லோரும் நெருங்கிச் செயற்படுதல் என்பதே இன்றைய தேவையாகும்.. அது தாயகம்.. புலம்பெயர் தேசங்கள்.. தமிழ்நாடு.. மற்றும் இதர உலகமாக இருக்காலம்.

தமிழ் நாட்டில்.. தமிழர் ஆட்சி அமைவதும்.. இதுக்கு வலுச் சேர்க்கும்... அல்லது தமிழர் ஆட்சி அமைய இடம் கொடுத்திருவோமோ என்று திராவிட ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யக் கூடிய சூழலை வலுப்படுத்த வேண்டும். அதனையும் நாம் சமாந்திரமாக நகர்த்திச் செல்ல வேண்டும். tw_blush:

நன்றி: நெடுக்காலபோவன் (யாழ்)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:07 PM | 0மறுமொழிகள் | Back to Main

Friday, May 27, 2016

சமந்தா புட்டு - Samantha puddu - செய்முறை

இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது.

புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.)
கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும்.

அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும்.

பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும்.

பின் நீத்துப் பெட்டிக்குள்  கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும்.

பின்.. தண்ணீர் கொதிக்கும்.. பானையில் வைத்து.. மூடி.. சமந்தா புட்டை.. நீராவியில் அவித்து எடுக்கவும்...

சமந்தா புட்டு ரெடி... பட் இன்னும் அது முழுமையான சமந்தா புட்டு ஆகல்ல. 
+
சமந்தா புட்டை எப்படிச் சாப்பிடுவது என்று நீங்கள் இப்ப நினைப்பீங்கன்னு தெரியும்..
உங்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சு தந்தால் தான் சாப்பிடுவீங்க என்பது நமக்கும் நல்லாத் தெரியும் என்பதால்...

கடையில் கனிந்த.. புள்ளி விழாத.. வாழைப்பழத்தை  வாங்கி.. உரிச்சு.. புட்டில் சேர்த்து பிசையவும்...

பிசையும் போது கவனிக்க வேண்டியது...........

இதில முக்கியமா சமந்தா புட்டு விசேசம் என்ன என்றால்.. வாழைப்பழம் மட்டும் போட்டு பிசையக் கூடாது.. + தேவையான அளவு சீனி (சீனி சாப்பிட தடை உள்ளவை.. பனங்கட்டி.. அல்லது சக்கரை சாப்பிடலாம்.. அல்லது சுவீட்னர் அட் பண்ணலாம்.).. அட் பண்ணி பிசைந்து உருண்டைகளாக்கி உண்ணவும்.

இதுவே சமந்தா புட்டு ஆகும். tw_blush:


பொறுப்புத் துறப்பு: (இதில டபிள்.. ரிபிள்.. மீனிங்ஸ் எதுவும் இல்லை. நேரிடையாக சமையல் குறிப்பு தான் உள்ளது. டபிள்ஸ்.. ரிபிள்ஸ் போறதற்கு நாம் பொறுப்பல்ல. நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால்.. சமந்தா புட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்ல.. இன்சுலினை ஏற்றிட்டு சாப்பிடவும்... எதுக்கும் வைத்திய ஆலோசனை செய்து சாப்பிடவும். எந்த பின்.. பக்க.. விளைவுகளுக்கும் நாம் பொறுப்பல்ல.)tw_blush:

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:01 AM | 0மறுமொழிகள் | Back to Main

Sunday, May 15, 2016

காட்டிக்கொடுப்பு

மீன்பிடிப்படகு நீர்கொழும்பில் இருந்து புறப்படுகிறது. உடப்பைச் சேர்ந்த தமிழ்.. முஸ்லீம் இளைஞர்களும்.. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும்.. தென்பகுதியையைச் சேர்ந்த சிங்கள..இளைஞர்களுமாக.. மொத்தம் 30 பேர் வரை அதில் பயணிக்கிறார்கள்.

எல்லாரும் குடும்பக் கஸ்டம் காரனமாக.. கடனை உடனை வாங்கி கப்பல் ஏறியவர்கள் தாம். எல்லாருக்கும் கனவு இத்தாலியைச் சென்றடைவதும்.. பின் அங்கு செல்வம் சேர்ப்பதும்.. பின் குடும்பம் குழந்தை என்று.. பெருகி அந்த நாட்டில் நிரந்தரக் குடிகளாகி.. வாழ்வதும்.. வெறும் பந்தாவுக்கு ஊருக்கு ஹொலிடே போவதும் தான்.
ஆரம்பத்தில் படகுப் பயணம் உற்சாகமாக இருந்தாலும்.. போகப் போக.. அச்சம் கலக்க.. படகும் எங்கெங்கோ எல்லாம் திக்கு திசை மாறிப் போய் 40 நாட்கள் முடிவில் இத்தாலிக் கரையை அடைகிறது. இடுப்பளவு தண்ணியில்.. எல்லோரும் இறக்கிவிடப்படுகிறார்கள்.

படகில் பயணிக்கும் போது தமிழ்.. முஸ்லீம்.. சிங்களம் என்று எந்த வேறு பாடுமின்றிய இயங்கிய இளைஞர்கள்.. திடீர் என்று.. நீ தமிழ் பேசிறனி.. நான் சிங்களம் பேசுறனான்.. நாங்க ஒரு குழுவா எங்க பாட்டில போறம்.. நீங்க உங்க பாட்டில போங்க என்று இத்தாலிக் கரையைக் கண்ட சந்தோசத்தில் சிங்களவர்கள் ஒரு குழுவாகவும்.. தமிழ் பேசும்.. (தமிழர்களும் முஸ்லீம்களும்) ஒரு குழுவாகவும் புறப்பட்டு விடுகிறார்கள்.

தமிழ் பேசிற குழு.. ஒரு பெற்றோல் ஸ்ரேசனை அடைகிறது. வைத்திருந்த அமெரிக்க டாலர்களை யூரோ ஆக்கிக் கொண்டு.. பொதுத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொள்கிறது. அந்த நேரமாகப் பார்த்து யாரோ கொடுத்த தகவலுக்கு அமைய இத்தாலி பொலிஸ் இவர்களைச் சுற்றிவளைக்கிறது. 

சுற்றிவளைத்து எல்லோரையும் கைது செய்து ஒரு பொது தடுப்பிடத்திற்கு கொண்டு போகிறது. அங்கே போனால்.. அந்தச் சிங்களக் குழுவும் படகோட்டி முதல் அனைவரும் ஏலவே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும்.. இந்த இளைஞர்களுக்கு விளங்கிவிட்டது.. தங்களை அவர்கள் தான் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் என்று. 

இரண்டு நாள் நல்ல கவனிப்புடனான தடுத்து வைப்பின் பின்.. மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள்.. இத்தாலிய அதிகாரிகள்.

தமிழ் பேசுறவர்கள் எல்லாம்.. தமிழர்களா என்று அறிந்து சொல்லுமாறு.. இத்தாலிய அதிகாரிகள்.. பணிக்க..மொழிபெயர்ப்பாளர் பெயர்களைக் கேட்கிறார்கள். முஸ்லீம்களும் தமிழ் பெயர்களையே மாற்றிச் சொல்கிறார்கள். மொழிபெயர்பாளருக்கு பேசும் தமிழில் உள்ள வேறுபாடு புரிந்துவிடுகிறது. அவர் அதனை அதிகாரிகளுக்கு விளக்குகிறார். அதிகாரிகள் தமிழ் யார் முஸ்லீம் யார் என்று எப்படியாவது கண்டுபிடியுங்கள் என்று சொல்ல.. மொழிபெயர்பாளர் ஒரு உக்தியை கையாள்கிறார். தமிழ் தெரிந்தவர்கள்.. ஆளாளுக்கு ஒரு தேவாரம் பாடு என்று கேட்கிறார்.

முஸ்லீம் இளைஞர்கள் மனதில் அப்ப தான் பள்ளிக்கூட நினைப்பு வருகிறது. தமிழ் சகோதர்களோடு சேர்ந்து படித்த போது அவர்கள் பாடிய தேவாரங்கள் காதில் வீழ்ந்த நினைவுகளை புரட்டிப்போட்டுப் பார்க்கிறார்கள். வாழ்வா சாவா போராட்டம். போட்ட கடனை அடைக்கனும். கண்ட கனவை நனவாக்கனும். எப்படியாவது தேடிப்பிடித்து நாலு தேவார வரியைப் பாடிடனும் என்ற படபடப்புக்கு மத்தியில்... ஒருவாறு தேவாரங்களை அரையும்குறையுமாகப் பாடி முடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளருக்கு உண்மை விளங்கினாலும் அவர் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. எல்லாம் தமிழ் தான் என்று சொல்லி.. எல்லோரையும் அகதிகளாகப் பதியச் சம்மதிக்கிறார்கள் அதிகாரிகள்.

சில நாள்...தடுத்து வைப்பு 40 நாட்கள் நீண்ட பின்.. எல்லா அகதி விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு.. தமிழ் என்று பதிந்தோர் எல்லோருக்கும்.. 5 ஆண்டு விசாவும்.. 400 யூரோவும் கொடுத்து ஆட்களை வெளியில் விடுகிறார்கள். 

வெளியில் வந்தந்தும்.. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று நிற்கும் மாடுகள் சிலவற்ரின் அறிமுகம் வேறு கிடைக்கிறது. இத்தாலியில் நின்று என்ன செய்யப் போறீங்கள். மொழி தெரியாமல். அதுபோக இங்க வேலை எடுப்பதும் கஸ்டம்.. பாத்திருப்பயள் தானே ஒரு சிகரட் பக்கெட்டுக்கு படுக்கையை பரிமாறும் அளவுக்கு இந்த நாட்டுப் பெண்களே வறுமையில் கிடக்குதுங்க.. நீங்கள் என்ன செய்யப் போறியள்..

மனதுக்குள் கண்ட கனவுகள் மீண்டும் நினைவில் வந்து அலைமோதுகின்றன. கையில உள்ள காசை வைச்சுக் கொண்டு.. எப்படியாவது.. அடுத்த கட்டப் பயணத்தை பார்ப்பம் என்று ஆசை மனசு தூண்டி விட அத்தனை தமிழ் பேசுறவையும்.. இங்கிலாந்து போவது என்று தீர்மானிக்கிறார்கள்.

அதன் முதற்கட்டமாக பிரான்சை அடைகிறார்கள். அங்கோ.. ஊரில் தட்டிவானுக்கு ஆள் சேர்ப்பது போல.. லண்டன் டோவருக்கு.. ஆள் சேர்க்கிறது கூட்டம். ஆளுக்கு இவ்வளவு தான்.. கொண்டு போய் விடுறம்.. பகிரங்கப் பேரங்கள் வேற.

சரி இங்கிலாந்து போவது என்று தீர்மானிச்சாச்சு.. கிடக்கிறதை வித்துத் தொலைச்சு உள்ளதையும் போட்டுப் போய் சேருவம் என்று ஒரு 8 தமிழ் பேசும் இளைஞர்கள் நாலு கன்ரெய்னர்களில்.. ஒன்றுக்கு இருவராய்.. டோவரை நோக்கி பயணிக்கச் செய்யப்படுகிறார்கள். 

கன்ரெய்னர்கள்.. இங்கிலாந்து எல்லையை அடைகிறது. பரிசோதனைகள் ஆரம்பமாகின்றன. ஒரு கன்ரெய்னரில்.. ஒளிந்திருந்த ஒரு முஸ்லீம் தமிழ் பேசும் இளைஞன் இங்கிலாந்து அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விடுகிறான். அவனுக்கு விளங்கியது.. இது தான் போக வேண்டிய இடமல்ல. அதற்கு முதலே பிடிபட்டிட்டன் என்று.

உடனே அந்த அதிகாரிகளிடம் உள்ள இன்னொருத்தரும் இருக்கிறார் என்று காட்டிக்கொடுக்கிறான். அந்த நேரத்தில்... அவன் மனசு அவனைக் குடைய ஆரம்பித்துள்ளது.... என்னைப் பிடிச்சு திருப்பி அனுப்பினால்.. நான் ஊரில போய் கஸ்டப்பட.. மற்றவன்.. இங்கிலாந்து போய் அசைலம் அடிச்சு.. பின் ஊருக்கு ஹொலிடேன்னு வந்து நக்கல் அடிச்சான் என்றால்.. என் நிலைமை என்னாவது.. என்ற அக்கறையில் தான் அந்த அதி உன்னத காட்டிக்கொடுப்புச் சிந்தனை.. பிறந்திருக்குது. அதன் பெறுபேறாக காட்டிக் கொடுத்திட்டான்.

அதிகாரிகளும் கன்ரயினரை முழுமையாக சோதனை செய்து அங்கு ஒளிந்திருந்த அந்த இரண்டாம் இளைஞனை கண்டுபிடித்து அழைத்து வர... அவன்.. இவனைப் பார்த்து முறாய்ந்துக் கொண்டு போயிருக்கிறான். படுபாவி.. தான் தான் மாட்டினது என்றில்லாமல் என்னையும் மாட்டிட்டானே என்று... அவன் மனம் உளறுவது இவனுக்கு அவன் கண்ணில் பட்டது.

இறுதியில்.. இருவரும்.. இங்கிலாந்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு.. குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மிச்ச இளைஞர்கள் எந்த கன்ரெயினரில் வருவார்கள் என்பது தெரியாததால்.. அவர்களைக் காட்டிக்கொடுக்க முடியவில்லை. அந்தக் கவலையோடு தடுப்பு முகாமில் இருக்க.. இவர்களில் காட்டிக்கொடுத்தவரை அழைத்து அதிகாரிகள் விசாரித்துவிட்டு... அவருக்கு தற்காலிக வதிவிட அட்டை வழங்கி முதலில் வெளியே விடுகிறார்கள்.

வெளியே வந்த அந்த முஸ்லீம் இளைஞருக்கோ மகா சந்தோசம். ஒருவேளை தான் காட்டிக்கொடுத்ததால் தான் தன்னை கெதியா விசா தந்து விட்டிட்டாங்கள் போல என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்காத குறையாக மனதில் சந்தோசம் வளர்த்திருக்க.. கொஞ்ச நேரத்தின் பின் மற்றைய தமிழ் இளைஞனும் அதே அட்டை வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான்.

+++++

காலம் வழமை போலக் கடந்து ஒட.. 14 ஆண்டுகளின் பின்னும்....
அந்த முஸ்லீம் இளைஞன் man bag ஐ தோளில்.. மாட்டிக்கிட்டு இலண்டன் வீதிகளில்.. அலைகிறான். இன்னும் ஊருக்கு ஹாலிடே போகும் கனவு பலிக்கவே இல்லை என்ற கவலை மட்டுமல்ல... கல்யாணம் கூட ஆகல்லை என்ற கவலையும்.. கையில.. நினைச்ச அளவுக்கு காசும் இல்லை என்ற அளவில்.. அந்த தமிழ் இளைஞன் நடத்தும் உணவகத்தில்.. உணவருந்தியபடி. 

(கதை உண்மைச் சம்பவம் ஒன்றை 99% தழுவியது.)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:32 AM | 0மறுமொழிகள் | Back to Main