Thursday, October 11, 2007

கருணை மனு.



கண்ணின் மணியாய்
கனிந்தவளே
கனக்குதடி இதயம்
காணத் துடிக்குதடி
கண்ணோடு கண் கொண்டு
கதைகள் பேசி
கணங்கள் மறந்து
களித்திருந்த நினைவுகள்..!

கனவுகள் கூட
கணமும் காட்டுதடி உன்னை
கனக்கும் பிரிவுக்குள்
கண்கள் சிவக்குதடி தினமும்.
கண்ணீரின் நிறையது
கடல் தாண்டிப் போனதடி
கனக்கும் சோகம்
கட்டிலில் நோயோடு
கட்டியதடி என்னை.

கனவாகிப் போனதுவே
காளையிவன் களிப்பு..!
கணமும் ஏங்குதடி
கண்ணில் உன் விம்பம் நாடி.
கதறுகிறேன் இன்று தனிமையில்..
கனிந்த உன் நினைவுகள்
கனக்குதடி மனசெங்கும்..
கழுத்தில் ஒரு சுருக்கு
களிப்புடன் தா
கனவில் உன்னைக் கண்டபடி
கழற்றி விட என் உயிரை
கழன்று விடுகிறேன் உலகை விட்டே
கண்களால் நீ என்றும் என்னைக்
காணாதிருக்க.

காத்திருந்த பொழுதுகள்
காட்சிகளாய் விரியுதடி
கண்கள் முன் ஓடி
கள்ளி நீ
கண்ணாமூஞ்சி ஆடுகிறாய்.
கரங்கள் தொட்ட நினைவுகள்
காய மறுக்கின்றன
காயப்பட்ட நினைவுகளால்
கறுக்குதடி என் இதயம்.

காட்டினாய் வீராப்பு
கனிந்தது சோகம்
கணமும் உன்னை
காண ஏங்குது என் நினைவு
கனவில் தானும்
கண்டிலையோ என் சோகம்..?!
கனவிலும் எனை வெறுத்தனையோ..??!
கன்றிழந்த தாயாகி
கண்ணீர் தான் மிஞ்சுகிறது
கவியின் வரிகள் கூட
கண்ணீரால் குளிக்கிறது.

காட்டிய கோபம் போதும்
கன்னியே தணிந்து வாராயோ..??!
களித்திருக்க
கருணை தான் காட்டாயோ..??!
கற்பனையில்...
கரங்கள் தன்னை பற்றி
சரணடைகிறேன் உன்னை
கருணை மனு சமர்ப்பித்தே.!


தனிமையே கதியென்று தனித்து விடப்பட்ட அந்தக் குருவியின் சோகத்துக்காய்.. இந்தக் குருவிகளின்.. குரல்... சோகம் என்றால் எங்கும் ஒன்றுதானே.. மனிதனென்ன குருவியென்ன..!

பதிந்தது <-குருவிகள்-> at 7:06 AM