Monday, July 27, 2009

குட்டிமணி கண்ட தமிழீழம் - சிறுகதை.



அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான்.

"அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர்.

"இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேடிவந்த முகமூடிகளின் பார்வையில் வீழ்ந்தான்.

குட்டிமணியை இனங்கண்டு விட்ட கும்பல்.. ஆத்திரம் மேலிட குட்டிமணி இருந்த செல் (cell) கதவை உடைத்துத் தள்ளிவிட்டு அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவன் "அடோ எங்க ஆமி யாப்பனயல செத்தது. நீ இங்க சுகமா இருக்கிறது" என்று கொச்சைத் தமிழில் திட்டிக் கொண்டே குட்டிமணியைத் தாக்கத் தொடங்கினான். குட்டிமணிக்கு ஆத்திரமும் கோபமும் தலைக்கேற.. முரட்டுப் பார்வையோடு தாக்கியவனை எதிர்க்க முயற்சிக்க ஒரு கும்பலே அவனைத் தாக்கத் தொடங்கியது.தனது பதில் தாக்குதலை இவர்கள் மீது காட்டினால் இன்னும் ஆபத்து என்று அடங்கிப் போக எண்ணினான் குட்டிமணி. ஆனால் முகமூடிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தாக்கிக் கொண்டே இருந்தனர். அவன் முகமூடிகளால் தாக்கப்படுவதை சிறை அதிகாரிகளும் காவலாளிகளும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களில் அநேகர் சிங்களவர்களாக இருந்ததால் அவர்கள் குட்டிமணி தாக்கப்படுவதற்காக வருத்தப்படவும் இல்லை. தடுக்கவும் முன்வரவில்லை.

முகமூடிக் கும்பலோ ஆத்திரம் தீர தொடர்ந்து குட்டிமணியைத் தாக்கிக் கொண்டே இருந்தது. அதற்கிடையே அருகில் இருந்த செல்களும் முகமூடிகள் சிலரால் திறக்கப்பட சக சிறைக்கைதிகளும் குட்டிமணியை காணவும் தாக்கவும் என்று அவனைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதில் ஒருவன் முகமூடிகளில் ஒருவனிடம் காதில் ஏதோ ரகசியம் பேசியதும்... முகமூடிகள் குட்டிமணியைத் தாக்குவதை நிறுத்திவிட்டு அப்பால் சென்றுவிட்டனர்.

ஆனால் அதன்பின் சக சிறைக்கைதிகள் குட்டிமணியை தாக்கும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்கள் குட்டிமணியை கொலை வெறியோடு தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் ஒருவன் சொன்னான். உனக்கு சாவு நெருங்குகிறது. உனது இறுதி ஆசை என்ன என்று சொல்ல தீர்த்து வைக்கிறோம் என்று.

அப்போதுதான் குட்டிமணி உணர்ந்தான்.. தன்னைக் கொல்லத்தான் இவர்கள் திட்டுமிட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று. இவர்களிடம் இருந்து எனித் தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அவன் தனது முழுத் துணிச்சலையும் வரவழைத்துக் கொண்டு உரத்துக் கத்தினான்.. "எனது இறுதி ஆசை இந்தக் கண்களால் தமிழீழத்தைக் காண்பதே. என்னைக் கொன்ற பின் இந்தக் கண்களை யாருக்காவது தானமாக வழங்குங்கள் என்று."

அடுத்த கணமே ஒரு சிங்களக் காடைக் கைதியின் கைகளில் இருந்த கூரிய கத்தி குட்டிமணியைப் பதம்பார்க்க அவன் சரிந்து வீழ்ந்தான். அவனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு அவனின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்துக் கொண்டே கத்தினான் அந்தச் சிங்களக் கைதி... "தமிழீழம் தெரிகிறதா பார் குட்டிமணி" என்று.

இதுதாண்டா மகன் குட்டிமணி அங்கிளின் அந்தக் கோரக் கதை என்று கறுப்பு யூலை பற்றிக் கேட்ட தன் பிள்ளை சுகிந்தனுக்கு சொல்லிவிட்டு.. நான் சொப்பிங் போகனும்.. சிட்னி முருகனட்டையும் போகனும் என்று எழுந்து நகர முற்பட்டாள் அம்மா.

ஆனால் சுகிந்தன் தாயை நகர விடுவதாக இல்லை. இருங்கோ மம். எங்க போறீங்க. சொப்பிங்குக்குப் பிறகு டாட் வரவிட்டுப் போகலாம். அப்படியே வாற வழில கோயிலுக்கும் போயிட்டு வரலாம். அது சரி மம்.. அப்ப குட்டிமணி அங்கிள் கேட்ட அந்த தமிழீழம் கடைசியில கிடைச்சுதா மம்.. என்று இன்னொரு கேள்வியை தூக்கிப் போட்டான் சுகிந்தன்.

சுகிந்தனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்..குற்ற உணர்வும் மேலிட தவித்தாள் அம்மா. அது வந்து மகன்.. இன்னும் கிடைக்கல்ல. குட்டிமணி அங்கிளோட கூட போராட வாறம் என்று சொன்னவையே இப்ப அந்தப் பாதையை விட்டு விலகிப் போயிட்டினம். தமிழீழம் என்றால் என்னென்று உன்னைப் போல கேட்கிற அளவுக்குத்தான் அவை இப்ப வெளிநாடுகளுக்குப் போய் வசதியா வாழ்ந்து கொண்டிருக்கினம். ஆனால் குட்டிமணி அங்கிள் மற்றது தங்கத்துரை அங்கிள் என்ற இன்னொரு அங்கிளின்ர பெயர்களைச் சொல்லி சும்மா வீரமக்கள் தினங்கள் அது இதென்று மட்டும் கொண்டாடி தங்கட பொஞ்சாதிமாருக்கு, பிள்ளைகளுக்கு நடப்புக் காட்டிக் கொண்டு (பெருமை பேசிக் கொண்டு) திரியினம்.

எங்கட தமிழ் ஆக்களட்ட சரியான முயற்சி இல்லாததால, ஒற்றுமை இல்லாததால இன்னும், தமிழீழம் கிடைக்கல்லையப்பு. உவையள் தமிழீழத்தை குட்டிமணி அங்கிளின்ர கொள்கைகளை, விருப்பங்களை, இறுதி ஆசைகளை மறந்திருந்தாலும் வேறொரு தலைமைக்குள்ளால வளர்ந்த புலி அண்ணாமார், அக்காமார் இறுதிவரை அதற்காகப் போராடினவைதான். இறுதியில அவையையும் இவைதான் காட்டிக் கொடுத்து அழிச்சுப் போட்டினம். அதனால குட்டிமணி அங்கிள் கண்ட தமிழீழம்.. இன்னும் கனவாத்தான் இருக்குது மகன்.

என்ர ஆசை மகன்.. நீயாவது பெரியவனா வளர்ந்து அந்த தமிழீழத்தை மீட்டுக் கொடுக்கனும் எண்டதுதான். என்ர பிள்ளை இதைச் செய்ய வேணும் என்றதுக்காகத்தானே குட்டிமணி அங்கிளைப் பற்றி சொல்லித் தந்திருக்கிறன். குட்டிமணி அங்கிள் மட்டுமல்ல அவரைப் போல பல்லாயிரம் பேர் தங்கட உயிரிலும் மேலா தமிழீழத்தை மதிச்சு அதற்காகவே வாழ்க்கையை உயிரை அர்ப்பணிச்சிருக்கினம். அவையின்ர கனவை நனவாக்கிறதைத் தான் இந்த உலகத்தில என்ர பிள்ளை மனிசனா, தமிழனா பிறந்து.. வாழ்ந்து.. சாதிச்சுது என்றதை வரலாற்றில பதிய வைக்க வேணும். செய்வியா மகன்..??!

நிச்சயமா மம். குட்டிமணி அங்கிளுக்காக செய்வன். அவர் தமிழீழத்துக்காக தன்ர உயிர் கண் என்று எல்லாத்தையும் இழந்திருக்கிறார் எனும் போது.. நாங்கள் தமிழாக்கள் இங்க சிட்னில இருந்து என்ன மம் செய்யுறம். நினைச்சாவே வெட்கமா இருக்குது மம்.

நீ.. இப்ப சின்னப் பிள்ளை படிச்சுப் பெரியாளா வந்து உதுகளைச் செய்யத் தொடங்கலாம். இப்ப அப்பா வாற நேரமாகுது வெளிக்கிடு சொப்பிங் போவம்.

ஓக்கே மம். போய் வெளிக்கிட்டு வந்திடுறனே. நீங்களும் ரெடியாகுங்கோ.

--------

படம்: இணையத்தில் கிடைத்தது.

கதை சொன்னவர்: குருவிகள்.

--------

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:47 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க