Sunday, September 20, 2009

ஈழத்தில் கப்பத்தால் வாழ்ந்தோரும்... வீழ்ந்தோரும்..!



ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை.

நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர்.

உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்.. புலிகள் கப்பம் அறவிடும் பயங்கரவாதிகள் என்று புலம்பும் வகைக்கு சென்றுவிட்டிருந்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதையே மாற்றுக்கருத்து என்று சொல்லி வந்தவர்களுக்கு குறிப்பாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு வால்பிடிக்கும் சிங்கள அரசின் ஆயுதம் ஏந்திய தமிழ் மற்றும் முஸ்லீம் ஆயுதக் கும்பல்களால் இவை புலிகளுக்கான அடையாள முகவரியாக இனங்காட்டப் பட்டு வந்தன.

இவற்றை எல்லாம்.. தாண்டி தமது நீதி நிர்வாகச் சேவைகளை விஸ்தரிக்க.. போராளிகளின் பராமரிப்புச் செலவை கவனிக்க.. வீரமரணமடைந்த போராளிகளின் குடும்பங்களிற்கு பங்களிக்க.. போரில் உறவுகளை உடமைகளை இழந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உதவி அளிக்க.. போரில் அழிந்த அடிப்படைக் கட்டுமானங்களை மீளமைக்க.. கிராமிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க என்று விடுதலைப்புலிகள் சரியான காரணங்களோடு அந்த வரி அறவிடுதலை தொடர்ந்து செய்தே வந்தனர்.

ஆனால் தமிழர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும்.. மேற்குலக இராஜதந்திரிகளும் தமிழக அரசியல்வாதிகளும் புலி எதிர்ப்பு, மாற்றுக்கருத்து மாணிக்கங்களும்.. புலிகள் கப்பம் வாங்குகிறார்கள் என்று எப்போதும் உச்சரிக்க மறந்ததில்லை.

அதே காலப்பகுதியில்.. விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்குள் இல்லாது சிங்களப் படைகளின் நிர்வாகத்துக்குள் இருந்த தமிழ் மக்கள் இரட்டை வரி செலுத்தினர். ஒன்று சிங்கள அரசுக்கான வரி. இரண்டாவது அதன் பினாமி தமிழ் - முஸ்லீம் ஆயுதக் கும்பல்களுக்கான கப்பம். இவற்றை எவரும் கண்டு கொண்டதும் இல்லை.. அதனைக் காட்டி அவர்களைப் பயங்கரவாதிகள்.. துரோகிகள் என்று திட்டியதும் இல்லை. தமிழர்களே சொல்ல மறந்தனர்.. அல்லது மறுத்தனர் என்றால் பாருங்களேன். அந்தளவுக்கு அரச கட்டுப்பாட்டுக்குள் அவர்களுக்கு ஜனநாயக உரிமை பூத்துக் குலுக்கியது.

ஒரு கட்டத்தில்.. விடுதலைப்புலிகளின் நிர்வாக நடைமுறையில் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களின் குடிபெயர்வு குடிவரவை கட்டுப்படுத்த சில "pass" நடைமுறைகளை அறிமுகம் செய்தனர். அது அன்றைய காலக்கட்டத்தில் தமிழர்கள் விடுதலைப்புலிகள் மீது அதீத வெறுப்பை காட்ட வகை செய்தது என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் அந்தப் பாஸ் நடைமுறை விடுதலைப் போராட்டத்தை சாட்டு வைத்து வெளிநாடுகளுக்குப் போய் அகதி அந்தஸ்து வாங்க விழுந்தடித்த அநேக தமிழர்களின் சுதந்திர வெளியேற்றத்துக்கு தடையாக இருந்தது. விடுதலைப்புலிகளின் பாஸ் நடைமுறை மட்டுமல்ல அதே காலத்தில் சிங்கள இராணுவமும் வவுனியா தாண்டிக்குளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதோடு அங்கும் பாஸ் நடைமுறைகளை.. அமுல் படுத்தியது... ஆனால் அவற்றை எல்லாம் கண்டு தமிழர்கள் அஞ்சவில்லை. ஏனெனில் அவர்களை பணத்தால் சரிக்கட்டி விடலாம் என்று தமிழர்கள் நன்றாக அறிந்திருந்தனர். விடுதலைப்புலிகளிடம் அது வாய்க்காது என்பதால் அவர்களின் பாஸ் நடைமுறையை இட்டு முணுமுணுக்காத தமிழர்கள் கிடையாது எனலாம்.

அதுமட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் அமுல்படுத்திய பாஸ் நடைமுறைகள் மட்டுமே மக்களின் சுதந்திர நடமாட்டத்தை மறுப்பதாக மாற்றுக்கருத்து மாணிக்கங்களால் ஜனநாயக விரோதமாகக் காட்டப்பட்டது. ஆனே இதே மாற்றுக்கருத்துக் கும்பல்கள் வவுனியாவில் சிங்கள இராணுவத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டு அங்கு வைத்து மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுத்து கப்பம் வாங்கி அவர்களை வெளியேற அனுமதித்த போது அது எவரின் கண்ணிலும் படவில்லை..! ஏன் தமிழர்கள் கூட அதனை பெரிது படுத்தியதில்லை. சர்வதேச தொண்டு அமைப்புக்களுக்கு, இராஜதந்திரிகளுக்கு அவை தெரிந்த விடயங்களாக இருந்தும் கூட மன்னித்து மறக்கப்பட்டுவிட்டன.

என்ன மாயமோ தெரியல்ல.. சிறீலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் அரச பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகள், சர்வதேச தொண்டு அமைப்புக்களுக்கு.. சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எப்போதும் ஜனநாயமாகவே தோற்றமளிக்கும். விடுதலைப்புலிகள் செய்யும் சிறு சம்பவங்கள் கூட பூதாகரமான பயங்கரவாதமாக இனங்காட்டப்படும்.

இவையெல்லாம் கடந்த கால நிகழ்வுகள். தற்போதைய நிகழ்வைப் பார்த்தீர்கள் என்றால்..

சிங்கள அரச அறிவித்தல்படி விடுதலைப்புலிகள் போரில் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களிடம் இருந்த நிலங்கள் எல்லாம் பறித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் மற்றும் சிங்கள அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

ஆனால் தமிழர்கள் தமது சொந்த நிலத்திலேயே இன்னும் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு சுதந்திரமாகச் செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகள் அப்படியே உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்ல பாஸ் எடுக்க வேண்டும். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்ல அது அவசியம் இல்லை. ஆனால் வீதிச் சோதனைகள் இருக்கின்றன. கொழும்பு செல்லும் தமிழர்கள் அங்கு தம்மை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் இன்றும் எந்த மாற்றங்களும் இன்றி அப்படியே உள்ளன.

வன்னியில் இருந்த மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு அவர்களின் முற்றுமுழுதான சுதந்திர நடமாட்டம் பறிக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது.

இவற்றுக்கு அந்த மக்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க எவரும் மாற்றுக்கருத்துப் பேசியதில்லை. பேசுவதும் இல்லை.

அதுமட்டுமன்றி இப்போ சிறை பிடிக்கப்பட்டுள்ள 3 இலட்சம் வன்னி மக்களை வைத்து பல இலட்சம் பணம் அறவிடும் வேலைகளை மாற்றுக்கருத்து தமிழ் ஆயுதக் கும்பல்களும் சிறீலங்கா அரச அமைச்சு மற்றும் அதன் இராணுவத்தைச் சேர்ந்த ஆட்களும் செய்து வருகின்றனர்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் என்றழைக்கப்படும் வதை முகாம்களில் இருந்து ஒரு தலையை வெளியில் கொண்டு வர 10 தொடக்கம் 5 இலட்சம் இலங்கை ரூபாய்கள் கேட்கப்படுகின்றன. அப்படி பெருந்தொகை பணம் செலுத்தி வெளியே கொண்டு வரப்பட்டாலும் கொண்டு வரப்படும் நபர் தொடர்ந்து வெளியில் இருக்க எந்த பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எனவே அவர் உடனடியாக வெளிநாடு ஒன்றுக்கு போய் ஆக வேண்டும் அல்லது தமிழகத்துக்கு ஓட வேண்டும். அதற்கும் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அரசாங்கத்தோடு மாற்றுக்கருத்து தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்தவர்கள் தான்.

இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. வவுனியா முகாமில் உள்ளவர்களில் விடுதலைப்புலிச் சந்தேக நபர் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவரை வெளியில் எடுக்க 20 தொடக்கம் 25 இலட்சங்கள் இந்த அரசாங்க மற்றும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவை எவையும் அரச அதிகாரங்களின் கீழ் பரிமாறப்படும் பணம் அல்ல. எல்லாம் சட்ட விரோத பண பரிமாற்றங்கள்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பல சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் கண்முன்னே சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெரியவே செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எவரும் இதனை கப்பம் என்று சொல்லவோ.. கண்டிக்கவோ முன்வரவில்லை. புலிகள் கப்பம் வாங்கியதை தமிழக முதல்வர் கருணாநிதி கூட ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார். அந்த பழுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்குக் கூட இந்தக் கப்பம் கண்ணில் படவில்லை..! அத்தனை சாதுரியமான கப்பம் இது.

இதில் வேடிக்கையும் வேதனையுமான விடயம் என்னவென்றால்.. இந்த அறவிடல்கள் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் வசதியாக இருந்து கொண்டு புலிகள் கப்பம் அறவிடுகிறார்கள்.. போற வழியில் காசு பறிக்கிறார்கள் என்று கூக்குரலிட்ட தமிழர்களும் மாற்றுக்கருத்து ஜனநாயக விபச்சாரிகளும் மெளனம் காத்து இக்கப்ப அறவிடல்களுக்கு பூரண ஒத்துழைப்பும் சம்மதமும் வழங்கியுள்ளதுடன் கப்ப அறிவிடுதலை ஊக்குவிக்கும் முகமாக கருத்துக்களை பரப்பி வருவதும் செயற்பட்டு வருவதும் தான்.

இதையே விடுதலைப்புலிகள் செய்திருந்தால்.. இந்த உலகம் அவர்கள் மீது இன்னொரு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடுத்திருக்கும்..!

இந்த கப்ப அறவிடல்களை ஊக்குவிப்பவர்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மாறி இருப்பதுடன் அவர்களே அதற்கான தொகைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஒரு தலைக்கான கப்பத் தொகை நாளுக்கு நாள் இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டு போக.. வன்னி மக்கள் இன்று அரசியல் விளையாட்டுப் பொருட்களாக மட்டுமன்றி நல்ல வருவாய்க்கான இலவச முதலீடுகளும் ஆகியுள்ளனர்.

இதில் பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால்.. வெளிநாடுகளில் எந்த உறவினரையும் கொண்டிராத ஏழை எளிய மக்களின் வவுனியா வதை முகாம்களில் இருந்தான வெளியேற்றம் என்பது இந்தக் கப்ப வியாபாரத்தால் ஒரு கனவாகவே மாறிவிட்டுள்ளமையும்.. அவர்களின் வெளியேற்றம் பற்றி தமிழர்களே சிந்திக்காது சுத்தச் சுயநலத்துடன் செயற்பட்டு வருவதும் தான்.

இந்த முகாம்களில் இருந்து கப்பம் கொடுத்து வெளியில் வருபவர்களில் அநேகர் வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்களை அல்லது உறவினர்களைக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். அதில் அநேகர் வெளிநாடுகளுக்கு அகதி அந்தஸ்துப் பெற வாய்ப்பை தேடி வருபவர்களாகவும் உள்ளனர். இவர்களில் அநேகர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து சிங்கள இராணுவத்துக்கு அஞ்சி வன்னிக்கு இடம்பெயர்ந்தவர்கள்.

வன்னி மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு ஏழை எளிய மக்களின் வெளிநாட்டுத் தொடர்பற்ற மக்களின் எண்ணிக்கை என்பது யாழ்ப்பாணம் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இதர தமிழ் மாவட்டங்களோடு ஒப்பிடும் போது அதிகம். 3 இலட்சம் வதை முகாம் மக்களில் இந்த மக்களின் எண்ணிக்கை என்பதும் அதிகம்.

அந்த ஏழை மக்களின் வதை முகாம் வாழ்க்கையில் இருந்தான விடுதலைக்கு இந்த கப்பம் செலுத்தி வசதி உள்ளவர்களை வெளியில் எடுத்துவிடும் வியாபாரம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கப்ப வியாபாரிகள் ஏழை எளிய மக்கள் என்று நோக்குவதில்லை. தமக்கு எவ்வளவு இலட்சங்கள் கிடைக்கும் என்றே நோக்குகின்றனர்.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கி நிரந்தரக் குடிகளாகிவிட்ட தமிழர்களும் தமது உறவினர்களுக்கு மட்டுமே கப்பம் செலுத்துவதை ஊக்குவித்து வருகின்றனர். விடுதலைப் போராட்டத்தின் இயக்க சக்தியாக இருந்த அந்த ஏழை மக்களின் வாழ்வைப் பற்றி விடுதலையைப் பற்றி எவரும் அக்கறை செலுத்துவதாக இல்லை.

மாற்றுக்கருத்துப் பேசியோரும்.. புலி எதிர்ப்பு ஜனநாயகம் பேசியோரும்.. காட்டிக்கொடுத்துப் பிழைப்போரும்.. புலிப் பாசிசம் என்று பேசிப் பேசி.. மொத்த பாசிசத்தையும் தாமே செய்து வளர்த்து விட்டோர் எல்லாம்.. இன்று பெரும் பண முதலைகளாகி விட்டார்கள். ஆனால்.. வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களின் நிலைப்பாடு தான் இவர்களால், சிங்கள அரசின் பயங்கரவாதச் செயல்களால், அதனைக் கண்மூடி ஆதரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளால் பரிதாபத்துக்குரியதாகி உள்ளது.

இதனை எவரிடம்.. சொல்லி முறையிடுவது.. நீதி கேட்பது..??! புலிகள் தான் இல்லை என்ற நிலையில்.. அந்த ஏழை மக்களுக்கு இப்போதைக்கு விடிவில்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

கப்பம் கொடுக்கக் கூடிய நிலையில் இருப்போரால்.. அவதிப்படும் ஏழை மக்களின் சார்பாக இந்த பதிவை சமர்ப்பிக்கின்றோம்.

சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்தித்து.. செயற்பட்டு.. அந்த ஏழை மக்களின் விடுதலைக்கும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும்.

இதுவே நியாயத்தைத் தேடும் மக்களின் பார்வை..!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:30 AM

2 மறுமொழி:

Anonymous Vikram Loman செப்பியவை...

ஏராளமான கருத்துக்களுடனும் தகவல்களுடனும் கூடிய பதிவாக இருக்கிறது. ஆம் “கப்பம்” என்ற இந்த நான்கெழுத்துச் சொல்லால் தான் இன்று நேற்றென்று இல்லாது கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களாக இலங்கைத் தீவு கிட்டத்தட்ட தொடர்ந்து அமைதியற்ற நிலையிலிருந்து வருகின்றது என்று சொன்னால் அது மிகையாகி விடாது. இன்னமுமே தலைநகர் உட்பட தீவின் பல பாகங்கள் இந் நடைமுறையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டு வருவதாக செய்திக் குறிப்புக்கள் பலவற்றின் மூலமும் தெரிந்து கொண்டுள்ளோம்.

உங்களின் பதிவுக்குப் பாராட்டுக்கள். இது போன்ற மேலும் பல பதிவுகளை இடுங்கள்.

Thu Sep 24, 11:40:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி விக்ரம்.! :)

Thu Sep 24, 04:18:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க