வைகாசி-18
கோலமயில் தோகையிழந்தது
கூவும் குயில் குரல்வளை அறுந்தது
பாடும் மீன் ஓசையிழந்தது
தவளும் நண்டு கால்கள் முறிந்தது
முள்ளிவாய்க்காலில் இது நடந்தது.
காயமே ஆகாயம் என்றானது
காணாமல் போவது கணக்கில்லாமலானது
நம்பியவர்கள் கைவிட
நம்பியார்கள் கையோங்கியது.
பார்த்திருந்த ஆகாய மூன் கலங்கியது
பாங்கி மூன் ஜெனிவாவில் தூங்கியது
டெல்லியில் சொக்கத்தங்கம் மின்னியது
சென்னையில் கட்டுமரம் அதைத் துலக்கியது.
ஆறாறு ஆண்டுகள் சீறிப் பாய்ந்தது
அடிபட்டு மூச்சிழந்தது
முறம்கொண்டு புலி விரட்டிய ஆச்சியது
பேரக்குஞ்சுகள் போரினில் சிதைந்தது.
ஓரிருவரா
ஆறுநான்கு உலகத்தார் ஒருங்கிணைந்து
தாக்கி அழிக்க
தாங்கி நிற்க
அதென்ன வெறும் வன்னிக்காடா
தசையும் இழையமும் பின்னிய மானுடம் தானே.
உள்ளத்தில் உரிமை வேட்கை
உடலினில் வேகம்
உடனிருந்தும்
கருவிகள் அங்கே கைவிட
சிங்கமேவிய போலிப்புனைவின் பிறப்புகள்
எதிரிகளாகி ஆங்கோர் கொடூரம் புரிந்தது
அடங்கியது தமிழ் ஈழ உயிர் மூச்சு.
அன்றில் இருந்து இன்றுவரை
ஆயிரம் சோகங்கள்
அடிமை வாழ்வில்
அடங்கி வாழ்வதே அழகாகிப் போனது.
எழும்பி நிற்க
கால்கள் இல்லை
பிடித்து நிற்க
கரங்கள் இல்லை
இருந்தும்...
உள்ளே ஒரு ஏக்கம்
உறங்கித்தான் கிடக்கிறது..!!
ஆக்கம்: நான் (17.05.2020)
Labels: may18, mullivaikkal, poem, sri lanka, Sri Lanka's war crime and genocide of Tamils, tamil genocide


0 மறுமொழி: