Sunday, August 09, 2009

80% யாழ்ப்பாண நகர மக்கள் திணிக்கப்பட்ட தேர்தலை புறக்கணித்தனர்.பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும்.

இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது.

இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் சாட்டை அடி கொடுத்திருப்பதுடன்.. உலகிற்கும் தெளிவான ஒரு செய்தியைக் கூறியுள்ளனர்.

சிறீலங்காவின் ஜனநாயக நடைமுறையில் தமக்கு நாட்டமில்லை என்பதை யாழ் மாநகர மக்கள் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில் அந்த மக்களின் மன கிடக்கைகளுக்கு இந்த உலகம் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வவுனியா நகரத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு மற்றும்.. தமிழ் தேசியம் போன்றவற்றை வெளிப்படையாக ஆதரிக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் இத்தேர்தலில் தமிழீழத்தை முன்மொழிந்த தந்தை செல்வாவின் கருத்தியல்களோடு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ILANKAI TAMIL ARASU KADCHI (ITAK)) என்ற பெயரில் போட்டியிட்டனர்.

அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவான புளொட் என்ற அமைக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஆசனங்கள் கிடைத்துள்ளன. முன்னைய தேர்தல்களில் புளொட்டுக்கு கிடைத்த ஜனநாயக விரோத வாக்குகளோடு ஒப்பிடும் போது இம்முறை அதற்குக் கிடைத்த மொத்த வாக்குகள் குறைவாகும். அதுமட்டுமன்றி வவுனியாவிலும் 48% மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களும் இருப்பதால் சிங்கள வாக்காளர்களின் வாக்களிப்பால் மொத்த வாக்களிப்புச் சதவீதம் 52% ஆக இருக்கிறது.

என்ன தான் ஜனநாயகம் பேசும் உலகமும் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளும் அதன் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும் மக்கள் மீது தேர்தலை இராணுவ அதிகாரங்களின் கீழ் இராணுவக் குவிப்பின் கீழ் திணித்திருந்தாலும்.. யாழ் மாநகர மக்களும்.. வவுனியா நகர மக்களும் மேற்படி தேர்தல்களை புறக்கணிப்பது என்ற முடிவை மெளனமாக இருந்து தீர்மானித்து சாதித்துள்ளனர்.

40,000 சிங்களப் படைகள் நிரந்தரமாக குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதன் மாநகர சபைக்கு இத்தேர்தல் நடத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. வவுனியாவிலும் சுமார் 20,000 சிங்களப் படைகள் நிரந்தரமாக நிலை கொண்டுள்ள நிலையில் இத்தேர்தல் நடந்துள்ளது.

ஜனநாயகம் பேசும் மேற்குலக மற்றும் அமெரிக்க ஜனநாயகவாதிகள் லண்டனிலும்.. வார்சிங்கடனிலும்... ஈரான் இராணுவத்திடம் குறிப்பிட்ட நகரங்களை கையளித்துவிட்டு தமது மக்களுக்கான தேர்தலை அந்த இராணுவ அதிகாரிகளின் அதிகாரங்களின் கீழ் நடத்துவார்களா..??! அல்லது நடத்த அனுமதிப்பார்களா..??! செய்தாலும் செய்வார்கள்.. அவர்களின்.. ஜனநாயகம், ஜனநாயகம் என்று உச்சரிப்பதற்கு மட்டும் தானே. மக்களின் உரிமைகள் தொடர்பில் இல்லையே..!

இப்போ 80% மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பதியப்பட்ட 20% வாக்குகளில் கிட்டத்தட்ட 12% வாக்குகள் பெற்ற சிலர் 80% வாக்காளர்களை அவர்களின் எண்ணங்களுக்கு எதிராக அவர்களை ஆளப்போவதுதான் ஜனநாயகமாக இருக்கப் போகிறது. இது எந்த வகையில் நியாயமானதோ தெரியவில்லை.

எதுஎப்படி இருப்பினும் இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாண மாநகர மக்கள் சிங்கள அரசிற்கும் அதன் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களுக்கும் மற்றும் ஜனநாயகம் பேசும் சர்வதேச, பிராந்திய சக்திகளுக்கும் நல்ல செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்.

ஜனநாயகம் என்ற போர்வையில் மக்கள் மீது இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமான இராணுவ நிர்வாகத் திணிப்பை செய்வதும்.. அதன் கீழ் தேர்தல் நடத்துவதும் ஈராக், ஆப்கானிஸ்தான் முதற்கொண்டு யாழ்ப்பாணம் வரை நடத்தப்படுகின்ற ஜனநாயக கேலிக்கூத்துக்களாக இருக்கின்றன என்பதை அம்மக்கள் தெளிவாக உலகிற்கு கூறியுள்ளதன் வெளிப்பாடே இத்தேர்தல் புறக்கணிப்பாகும்.

அதுவும் இத்தனை இராணுவ அச்சுறுத்தல்கள் ஒட்டுக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்கள் கப்ப அச்சுறுத்தல்கள்.. செய்தியாளர்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியா நகர மக்கள் துணிச்சலுடன் இச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

நன்றி யாழ் மாநகர மற்றும் வவுனியா நகர வாக்காளர்களே..!

செய்தி ஆதாரம்: 1

செய்தி ஆதாரம்: 2

image:bbc.co.uk

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:27 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க