Tuesday, August 04, 2009

போர் முடிஞ்சு போச்சு.. புலி அழிஞ்சு போச்சு.. இனப்பிரச்சனைக்கு தீர்வு தான் எங்கே..??!ஈழத்தில் கடந்த 2006 இல் இருந்து சிங்கள பேரினவாத ஆட்சியாளன் மகிந்த ராஜபக்ச உலக நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முன்னெடுத்திருந்தார்.

அந்தப் போர் பேரழிவுகளுடன் கடந்த மே 20ம் நாள் வாக்கில் முடிவுக்கு வந்துவிட்டதாக போரை ஆரம்பித்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்திய விசேட தூதுவர்களும் ஜப்பானிய விசேட தூதுவர்களும் சீன, பாகிஸ்தான், ரஷ்சிய விசேட தூதுவர்களும் மேற்குலக நாடுகளின் விசேட தூதுவர்களும் இராணுவ வல்லுனர்களும் சிறீலங்காவுக்கு வந்து சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகளோடும் இராணுவத் தலைமைகளோடும் அவர்களோடு கூட்டு வைத்துச் செயற்பட்ட அரசியல் தெளிவற்ற ஸ்திரமற்ற தமிழ் ஆயுதக் கும்பல்களுடன் பேச்சுகளாகப் பேசினர். அப்போதெல்லாம் அவர்களுக்கு ராஜபக்ச குடும்பம் அளித்த வாக்குறுதி இதுதான்.

" நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுத்திருக்கின்றோம். இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. அதனை நசுக்குவதன் மூலமே இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்கு நீங்கள் எல்லோரும் எமக்கு உதவ வேண்டும். இனப்பிரச்சனைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது. பயங்கரவாதிகளுடனான போர் முடிந்தவுடன் இனப்பிரச்சனைக்கு அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வை முன்வைப்போம்." என்பதே.

சிங்களப் பேரினவாத அரசு விரும்பியது போன்று அது தான் விரும்பிய வடிவில் நடாத்த எண்ணிய தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு சர்வதேச உதவிகளும் ஒத்துழைப்புக்களும் கிடைத்தன. அவர்கள் விரும்பிய வடிவத்தில் தமிழின அழிப்போடு போரும் ஓய்ந்து பயங்கரவாதமும் அழிந்துவிட்டது. அதனை அவர்களே பிரகடனமும் படுத்தி விட்டனர்.

ஆனால் எங்கே போனது இனப்பிரச்சனைக்கான தீர்வு..??! இன்று வரை எவரும் அதைப் பற்றி மூச்சும் விடுவதாக இல்லை. போரின் மூலம் பயங்கரவாதத்தை அழிக்க முன்னின்று உழைத்த எந்த நாடுகளும் சிறீலங்காவை அது அளித்த உறுதி மொழி தொடர்பில் கேள்வி கேட்பதில்லை. இந்திய விசேட தூதுவர் சிவசங்கர் மேனனும் டெல்லியில் அரச அதிகார பீடத்தில் இருந்து பதவியை காலி செய்துவிட்டார். ஆனால் எவருமே இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து சிறீலங்கா அரசை காத்திரமான தொனியில் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை.

இன்று இந்தியா, சிறீலங்காவைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சனை கண்ணிவெடிகள் மட்டுமே.

3 இலட்சம் மக்கள் போரினால் திட்டமிட்டு அகதிகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 1995 இல் சிறீலங்கா சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போது போரின் அழிவிற்குப் பயந்து வன்னிக்கு இடம்பெயர்ந்தவர்கள். அந்த வகையில் அந்த வன்னி மக்களுக்கு யாழ்ப்பாணத்தோடு வவுனியாவோடு நெருங்கிய தொடர்புண்டு.

அதேபோல் வன்னியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களில் 1990 இல் பிரேமதாச அரசு முன்னெடுத்த கிழக்கிற்கான போரில் போருக்குப் பயந்து இலங்கையின் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களும் வசித்து வந்தனர். மலையகத்தில் இருந்து தொழில் மற்றும் விவசாய நிமித்தம் வந்து குடியமர்ந்த தமிழ் மக்களும் வசித்து வந்தனர். ஏனையோர் வன்னியை தாய் நிலமாகக் கொண்ட மக்கள்.

கேள்வி என்னவென்றால்.. 3 இலட்சம் தமிழ் மக்களும் வதைமுகாம்களில் அடைத்து வைக்க இந்திய, சிறீலங்கா அரசுகளால் சொல்லப்படும் காரணம் வன்னியில் கண்ணிவெடி நிறைந்திருப்பதாகும்.ஆனால் உண்மையில் அந்த மக்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கக் கூடிய வசதிகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் கிழக்கிலங்கையில் இருக்கின்றன. அவர்களின் சொந்த நிலங்கள் இருக்கின்றன. உறவினர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் கண்ணிவெடிகள் கிடையாது. அப்போ ஏன் அந்த மக்களை அவர்கள் விரும்பும் இடங்களில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை..??!

உண்மையில் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானத்தை நிலை நாட்ட விரும்பின்.. இடம்பெயர்ந்த அந்த மக்கள் மீது அக்கறை இருப்பின்.. அவர்களை அவர்கள் விரும்பும் இடங்களில் குடியமர அல்லது வாழ அனுமதித்துவிட்டு இனப்பிரச்சனை தீர்வுக்கான யோசனைகளை முன்வைத்து பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்டித் தந்துவிட்டு கண்ணிவெடிகளை எக்காலத்துக்கும் எனி விதைக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டு அகற்றலாமே.

2002 இல் சமாதானப் பேச்சு புலிகளின் இராணுவ பலத்தின் காரணமாக வந்த போது கண்ணிவெடிகள் முன்னிற்கவில்லை. உடன்படிக்கைகளும் கையெழுத்துகளுமே முன்னின்றன. அப்போது போர் நிறுத்த சமாதான நிலை ஒன்று ஏற்பட்ட பிந்தானே.. மக்கள் குடியமர்ந்த பிந்தானே, சர்வதேச கண்ணிவெடி அகற்றும் குழுவினரின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. வெண்புறா போன்ற நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள இராணுவம் புதைத்த ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றினர். அப்போதெல்லாம் கண்ணிவெடிகள் மக்களின் குடியமர்வுக்கு சமாதானத்தை போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு தடையாக இருக்கவில்லையே..!

1987 இல் இந்திய இராணுவம் வந்தது. புலிகளோடு போர் செய்தது. ஆயுதக் களைவு செய்தது. அமைதி வழி என்றது. அன்பு வழி என்றது. கண்ணிவெடிகளை அகற்றியது. ஆனால் இனப்பிரச்சனையை தீர்க்க மறந்தது. இறுதில் என்னவாயிற்று இந்தியாவின் வரட்டுக் கெளரவம்.. மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஈழத்தில் வழி செய்தது. அப்படி ஒரு நிலையை இன்றும் உருவாக்கி வைத்துக் கொண்டு கண்ணிவெடிகளை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சனையை அதற்கான தீர்வை மறைப்பது அல்லது மறக்கச் செய்வதற்கான செயற்பாடுகளே திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

உண்மையில் 3 இலட்சம் மக்களையும் அடைத்து வைத்து அதன் மூலம் உள்ளூர் அரசியலை சிறீலங்காவும் பிராந்திய அரசியலை இந்தியாவும் செய்யும் நிலையே தொடர்கிறது.

கண்ணிவெடிகள் உள்ளதாகச் சொல்லப்பட்டும் வன்னியில் இந்திய முதலீடுகளுடன் பெற்றோல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கேணி மற்றும் மணலாறு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. மடு தேவாலயத் திருவிழா பெரும் ஆடம்பரமாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்களை மட்டும் குடியமர்த்த கண்ணிவெடிகள் தடையாக இருக்கிறனவாம்.

இவர்கள் கண்ணிவெடிகளின் பெயரால் யாரை ஏமாற்ற விளைகின்றனர்.

விடுதலைப் புலிகளுடனான போரை சிங்கள அரசு மேற்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதாகச் சொல்லிக் கொண்டு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களின் தலைமைகள் தமிழ் மக்களுக்குச் சொல்லி வந்தவை.. " நாங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுக் கொடுப்போம். ஆனால் புலிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என்று." இன்று தானே அந்தத் தடை இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதே. எங்கே தமிழ் மக்களுக்கு நீங்கள் காட்டும் விடிவு என்று கேட்டால்.. அவர்கள் காட்டுவதோ..

சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் இணைவதும்.. தமிழ் தேசிய.. தமிழீழ கனவுகளைச் சிதைப்பதும் தான் என்கின்றனர். இதுதானா நீங்கள் தமிழ் மக்களுக்கு தேடிக் கொடுக்கும் உரிமை, விடிவு.. விடுதலை..!

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை மற்றும் அனைத்துலக விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எவரும் தமிழ் மக்களின் பிரச்சனை மற்றும் உரிமை பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்க முன்வந்துள்ளது.

அனைத்துலக விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழ்மக்களும் கூட்டிணைந்து நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் வெல்லப்படுவதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் போன்ற பெரிய கட்சிகளின் தலைவர்கள் அயலில் இருந்து வந்த பெரிய தலையிடி நீங்கியது என்பது போல ராஜபக்சவுடன் சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழீழத்தை உச்சரித்ததோடு சரி. தேர்தல் தோல்வி ஏற்படுத்திய நடுக்கத்தில் அவர் தான் உச்சரித்த வார்த்தைகளையே மறந்து விட்டார்.

நெடுமாறன்.. வைகோ போன்றவர்கள் பிரபாகரனைப் பற்றிப் பேசுவதிலேயே நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரபாகரன் எதிர்பார்த்த தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல எவரும் அடுத்த கட்டத்துக்கு நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகத் தெரியவில்லை. தொல். திருமாவளவன் மற்றும் சீமான் போன்ற ஒரு சிலரே இன்னும் தமிழீழம் மற்றும் ஈழத்தில் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பில் பேசி வருகின்றனர். அவர்களின் குரல்கள் இணையத்தளங்களில் செல்வாக்குச் செய்யலாம். ஆனால் தமிழக அரசியல் தளத்தில் அவ்வளவாக செல்வாக்குச் செய்யும் நிலையில் இல்லை.

ஆக.. மிழ் மக்களின் அரசியல், வாழ்வுரிமை என்பதும் விடுதலைப்புலிகளின் அழிவோடு மறுக்கப்படும் நிலையே இன்று தோன்றி இருக்கிறது. இதைத்தான் அன்று விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரே தரப்பு. அவர்களுடனேயே பேசித் தீர்வு காண வேண்டும் என்று. இதை அன்று எல்லோரும் ஆதரித்து இருப்பின் இன்று விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்டி உலகின் முழு ஆதரவோடு ஒரு இன அழிப்பை சிங்கள மற்றும் இந்திய கூட்டு ஆதிக்க சக்திகள் செய்ய முனைந்திருப்பரா..??!

2002 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுடனான சாமாதான நடவடிக்கைகளை அடுத்து சமாதானம் பேச அமைக்கப்பட்ட சிறீலங்காவின் சமாதானச் செயலகம் எந்த சலசலப்பும் இன்றி அமைதியாக கலைக்கப்பட்டு விட்டது. ஆக எனி தமிழர்களோடு அவர்களின் உரிமைப் பிரச்சனை தொடர்பில் சமாதானம் பேச வேண்டிய அவசியமே இல்லை என்று சிங்களப் பேரினவாதிகள் திடமாக முடிவெடுத்து விட்டதையும் விடுதலைப்புலிகளைத் தவிர வேறெவருடனும் இனப்பிரச்சனை தொடர்பில் சமாதானம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் தமக்கு இல்லை என்பதையும் சிங்கள அரசு இந்தச் செயற்பாட்டின் மூலம் தெளிவாகச் சொல்லிவிட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

அப்போ எனி எவர் தான் இனப்பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை எட்டித்தரப் போகின்றனர்..?! புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்த அரசியல் விற்பன்னர்கள்.. சாணக்கியர்கள்.. ஜனநாயகவாதிகள் எங்கே..??! நாடுகள் எங்கே...??!

விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதித்துவத்துக்குள் ஜனநாயகம் இல்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்கள்.. இப்போ தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க எதுவும் பேசாமல் இருப்பது ஏன்..??! தமிழ் மக்கள் தமக்கு ஜனநாயகம், உள்ளூராட்சித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் வேண்டும் என்றா 35 வருடம் இத்தனை இழப்புகளையும் சந்தித்து போராடினர். அல்லது வீதிகளில் சிறீலங்கா போக்குவரத்து சபை பஸ்கள் கேட்டும் யாழ் தேவி இரயில் கேட்டும், இந்திய பெற்றோல் நிலையங்களும் கேட்டுமா ஆயுதம் தூக்கினர்..??!

1972 இல் பிரபாகரன் உட்பட்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போது.. இருந்த அரசியல் பலம் கூட இன்று தமிழர்களிடம் இல்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழர்கள் ஜனநாயகம்.. உள்ளூராட்சி மற்றும் உப்புச்சப்பற்ற மாகாண சபைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவார்கள் என்றால் அதை விட முட்டாள் தனம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

சிங்கள இனவாதிகளே மாகாண சபைகள் அதிகாரமற்ற வெற்று அமைப்புக்கள் அவற்றின் இருப்பு அவசியமில்லை என்று குரல்கொடுக்கும் இன்றைய நிலையில் இந்தியா போன்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகள் தாம் கொண்டு வந்த மாகாண சபைகளே தமிழர்களுக்கு அனைத்தையும் பெற்றுக் கொடுக்கக் கூடியன என்று சாதிக்க விளைகின்றனர். இந்தியாவின் நடப்பு மாநில அதிகாரங்களே காணாது என்று காஷ்மீருக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க எத்தனிக்கும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உப்புச்சப்பற்றது என்று நிரூபிக்கப்பட்ட மாகாண சபைகளூடு அவர்களின் உரிமைக் குரலை இராணுவ வல்லாதிக்கத்தை நிறுவி சரிக்கட்டி விடலாம் என்று கனவு காண்கிறது.

பஞ்சாப்பில் மேற்கொண்ட அதே பாணியிலான உரிமைப் போராட்ட அடக்குமுறையை இந்தியா ஈழத்திலும் செயற்படுத்த முனைகிறது. அதற்கான விளைவை இந்திய தேசியம் இந்த உலகில் சந்திக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்திய தேசியம் என்று சுக்கு நூறாகிறதோ அன்றே ஈழத்தில் தமிழர்களுக்கு தமிழ் தேசியத்தின் வெளிப்பாட்டுடன் தமிழீழம் மலரும். தமிழக தமிழ் மக்களுக்கு இழந்து போன அவர்களின் நாடும் கிட்டும். அதுவரை ஈழத்தில் தமிழ் மக்களுக்குள்ள இனப்பிரச்சனைக்கு எவருமே நியாயமான தீர்வை எட்டித்தரப் போவதில்லை என்பதே யதார்த்தம்..!

அதுவரை.. தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ் மக்கள் பலமாக இருக்கும் போது அவர்களுக்கு சார்பாக குரல் கொடுப்பது போலவும் பலவீனமாக இருக்கும் போது அவர்களை வேரறுக்க விளைவதுமே நடக்கும்.

வீழ்ந்தாலும்.. எழுந்தாலும்.. வெல்லும் வரை நாம் தான் நமக்காக நம் உரிமைக்காகப் போராட வேண்டும். அடுத்தவனில் தங்கி இருந்து கொண்டு நாம் எமது உரிமைகளைப் பெற்றிட முடியாது என்பதே ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இந்த உலகால் எழுதப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பு.

வெல்லும் வரை போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்..!

படம்: யாழ் இணையம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:58 AM

2 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

nallaayirukku.....thodarnthu ezhuthungo..!-raavan

Tue Aug 04, 10:22:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றிகள் raavan.

குருவிகள்.

Tue Aug 04, 11:19:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க