Sunday, August 30, 2009

ஒரு கவிஞனின் டயறி.



இத்தாலிய சியாமா செட்டி குண்டு வீச்சு விமானங்கள் குத்தியடிச்சு குண்டு போட்ட காலமெல்லாம்.. போய் ரஷ்சிய மிக்-27 லேசர் வழி பாதை காட்ட உயர இருந்தபடி குண்டு வீசும் காலமெல்லாம் கண்ட அந்தக் கவிஞனின் ரங்குப்பெட்டியும் முள்ளிவாய்க்கால் மணல்களிடை அநாதை பிணங்களோடு பிணமாய்க் கிடந்திருக்க வேண்டும். அதற்குச் சாட்சியாய் இரத்தக் கறைகளோடு கறள் கட்டி இருந்தது அது.

காலில் தட்டுப்பட்டதற்காய் அதன் கவனம் என்னைக் கவர... திறந்து பார்த்தேன்.. செக் குடியரசின் மல்ரி பரல்கள் வீசிய எரிகுண்டுகளின் கந்தக வாசம் மூக்கை எரித்தது. இத்தாலிய தயாரிப்பில் ராஜீவின் ஊழலில் கிடைத்த போர்பஸ் பீரங்கிகள் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வெடித்துத் தள்ளிய எறிகணைகளின் சிதறல்கள் பட்டு ஏற்பட்டிருந்த துவாரங்கள் வழி மாலைச் சூரியக் கதிர் பட்டுத் தெறித்தன அந்த DIARY என்ற பொன் எழுத்துக்கள்.

தூசி மண்டிக் கிடந்த அதனை எடுத்து தொடையில் தட்டிவிட்டு பக்கங்களைப் புரட்டிய படி முள்ளிவாய்க்காலின் அந்த இறுதி நிமிடங்களின் ரணங்களை எண்ணியபடி வெறும் வெண்மணற் தரையில் அமர முற்பட்ட எனக்கு.. குருதி உறைந்த சிறுமி ஒருத்தியின் சட்டை ஒன்று பகுதி மணலில் புதைந்து.. காற்றி பறந்தபடி இருந்தது கண்ணில் பட்டது. அதனைப் பிடிங்கி எடுத்து..தரையில் விரித்துக் கொண்டே அமர்ந்தேன்.

அப்படி என்ன தான் எழுதி இருப்பான்.. இறுதி விநாடிகளில் ஏதேனும் செய்தி எழுதி இருப்பானோ என்ற ஏக்கம் உருப்பெற டயரின் பக்கங்களை கடற்காற்று முட்டித்தள்ளி அகதியாய் ஓடிய என் மக்களை சிங்கள இராணுவம் விடாமல் குண்டு போட்டு விரட்டியது போல.. விரட்டப் பார்க்க அதனை விரல்களால் கட்டுப்படுத்திக் கொண்டு.. சரி முதலில் இருந்தே போவோமே என்று ஆரம்ப பக்கத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன்..!

டயறியின் முதற் பக்கம்.. சொல்கிறது..

1948.. யாழ்ப்பாணத்தில் இருந்து போயிலைச் சிற்பத்தோடு (புகையிலையை சொல்கிறார் போல) கொழும்பு கறுவாத்தோட்டம் போனேன்.

காலி முகத்திடலில்.. பல்லக்கில் சேர் பொன்கள் பவனி வரக் கண்டேன்.

1952.. ரயர் புகை மண்ட.. மயிரிழையில் தப்பினேன். சிங்களக் கும்பல் ஒன்று விரோதத்தில் பத்த வைத்தது போயிலைச் சிற்பங்களை. கொழும்பில் கடை வைத்திருந்த.. தமிழர்களின் சிந்தனையையும் தான்.

1954.. என் திருமணம். சிங்களப் பெண்ணான அவள்... சிந்தனையில் களங்கமில்லாதவள் என்பதற்காய் திருமணம் செய்தேன்.

1956.. தனி..

ஏதோ..எழுத ஆரம்பித்துவிட்டு முடிக்காமலே விட்டிருக்கிறார். அப்போதும்.. பிரச்சனைக்குப் பயந்து சிங்களப் பொண்டாட்டியையும் கூட்டிக் கொண்டு.. ஓடி இருப்பாரோ.. என்று எண்ணிய படியே பக்கங்களைப் புரட்டுகிறேன்.. ஆனால் அதற்கு அப்பால்.. சில பக்கங்களை தனித் தனியே.. பிரிக்க முடியவில்லை. குருதி உறைந்து மழைத் தண்ணி பட்டு குழைந்து.. பக்கங்கள் ஒட்டிப் போய் இருந்தன. கஸ்டப்பட்டு ஒவ்வொன்றாய்.. பக்கங்களைப் பிரிக்கப் பார்த்தேன்..

அப்போதே சொன்னார் தந்தை செல்வா.. தனியப் போங்கடா.. இவங்களோட சிங்களக் காடைகளோட சகவாசம் வேண்டாம் என்று.. என்ற வார்த்தைகளைத் தவிர என்னால் வேறு எதனையும் படிக்க முடியவில்லை.

கொத்தாக.. ஒட்டி இருந்த அந்த சில பழைய கதை பேசும் பக்கங்களை.. ஒரேயடியாகப் புரட்டித்தள்ளிவிட்டு.. மிகுதியை தனித்தனியே பிரித்துப் படிக்க முயன்றேன். அப்போது.. குட்டிக் கரப்பான் பூச்சி ஒன்று.. அகதியாகி செல்லட்டிக்குப் பயந்து பங்கருக்குள் ஒளித்திருந்துவிட்டு வெளியே வருவது போல.. தாள்கள் இடையில் பதுங்கி இருந்து விட்டு.. வெளிச்சத்தில் விடியலைக் கண்ட மகிழ்ச்சியோ என்னவோ.. ஓடி மடியில் விழ கைகளால் தட்டி அந்தச் சிற்றுயிரை.. சுடுமணலில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக அதனை அதன் வழி போக அனுமதித்து விட்டு பக்கங்களைப் புரட்டுவதில் மீண்டும் கவனத்தை திருப்பினேன்.

சில பக்கங்கள் தாண்டியதும்.. மீண்டும் படிக்கக் கூடிய தெளிவோடு இருந்த வரிகள் கண்டு.. படிக்க ஆரம்பித்தேன்..

1972.. சிறிமா.. பிறிமா மாவுக்கு கியுவில் கிடக்கவிட்டார்.

1977.. தமிழீழமே இறுதி முடிவு. என் கைகளை பிளேட்டால் கிழித்து இரத்தத் திலகமிட்டு சத்தியம் செய்தேன். என் மனைவியோடு மீண்டும் யாழ்ப்பாணம் வந்த முதற் தடவையும் அது தான். "சிங்களத்தியை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்" என்று திட்டிய திட்டுக்களையும் காதில் வாங்காமல் இருக்கவில்லை அப்போது. இருந்தாலும் என்னோடு சேர்ந்து அவளும் இரத்தத் திலகமிட்டாள். தமிழீழமே தமிழருக்கும் தமிழனோடு வாழும் தனக்கும் தீர்வு என்பது போல.

1981.. மீண்டும் ரயர்.. தீ

1983.. கொழும்பை விட்டு ஒரேயடியா மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு கப்பலில் காங்கேசந்துறை வந்து சேர்ந்தேன். மனைவியால் உயிர் பிழைத்தேன்.

1985.. சிங்களத்தியை கலியாணம் கட்டி இருக்கிறீர் கவனமா இரும். நாங்கள் தமிழீழம் பெற போராட வெளிக்கிட்டிருக்கும் ஆயுதம் தாங்கிய இளைஞர்கள். சரியே. மிரட்டல் வந்த நேரம் பயந்து போனேன். மீண்டும் கொழும்புக்கு ஓடுவமோ என்று நினைச்சனான். மனிசி தான் தடுத்தவள். என்ர உடன்பிறப்புகளான சிங்கள ஆக்களை விட இந்தப் பொடியள் பறுவாயில்லை இங்கையே இருப்பம் என்றவள் அவள் தான்.

1987.. இந்திய அமைதிப் படைக்கு பூமாலை போட்டேன். கைலாகு கொடுத்தேன். அப்ப மணத்த சப்பாத்தி எண்ணெய் இப்பவும் மணக்குது.

1989.. இந்தியப் படை சுட்டு தோள்பட்டையில் காயப்பட்டு 6 மாதம் ஆஸ்பத்தியில் கிடந்தேன்.

1990.. மீண்டும் புலிகள் வந்தார்கள். எனது மனைவியிடம் சிங்களம் கற்றார்கள். அன்பாகப் பிள்ளைகள் போல பழகினார்கள். அவர்களோடு பழகிய பின்.. தனக்கு பிள்ளைகளில்லாத குறையை இப்போது தான் உணரவில்லை என்று என் மனைவி சொன்னது இப்பவும் ஞாபகத்தில் நிற்கிறது.

1995.. யாழ்ப்பாணத்தை விட்டு அனுரத்த ரத்வத்தையால் அடித்து விரட்டப்பட்டோம். வன்னியில் அடைக்கலம் தேடினோம். கிளாலியூடு கடற்புலிகள் பாதுகாப்பு வழங்க பயமின்றி இருந்தது அந்தப் பயணம். ஆனையிறவு செல்லுக்குத் தவிர எனக்கு வேறு எந்தப் பயமும் இல்லை என்றாள் என் மனைவி அப்போது.

1996.. முல்லைத்தீவுத் தாக்குதல். விடிய விடிய கேட்ட முழக்கத்தோடு ஒரு விடியல் பொழுதின் உதயம் ஆரம்பமானது. இருந்தாலும்.. மனதில் சில கேள்விகள்.. இரு பக்கமும் மாண்டது மனிதர்கள் தானே. ஏனுந்த யுத்தம். பேசி தீர்க்கலாம் தானே.

1998.. புலிகளோடு பேச்சுக்கே இடமில்லை. ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே பேச்சு. கதிர்காமர் முழங்கித்தள்ள.. மனசுக்குள் சலனம் இன்றி ஒரு தெளிவு பிறந்தது.

1999.. ஓயாத அலைகளில்.. பின் களப் பணி தேசிய துணைப்படை வீரனாய்.. நானும் வீராங்கணையாய் என் மனைவியும்.. செயற்பட்டோம்.

2001.. வன்னி எங்கும் சமாதானம் என்று வெள்ளைப் புறாக்கள் பறந்தடித்தன. சந்தோசத்தோடு சந்தேகமும் கூடவே இருந்தது.

2004.. துரோகத்தின் புதிய அத்தியாயத்தைப் படித்தோம்.

2005.. சுனாமி தந்த வடுக்களை சுமந்தோம்.

2006.. மீண்டும்.. முழக்கங்கள். நாங்களும் தயாரானோம். இறுதியில் இரண்டில் ஒன்றிற்காய்.

2008.. ஒப்புக்கு சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் போட்ட சதி வலை எம்மைச் சூழ்ந்து பிடிக்க.. ஒப்பந்தம் கிழிந்து காற்றில் பறந்தது.. வழமை போலவே.

2009 ஜனவரி.. இறுதி நகரையும் இழந்தோம். நம்பிக்கை இருக்கிறது. விடுதலைக்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையோடு பின் தள்ளிப் போனோம்.

2009 மார்ச்.. நம்பினோர் எல்லாம் கைவிட அனாதைகளாய்.. பிணங்களாய் சரிய ஆரம்பித்தோம். அப்போதும் இறுதி வரை போராட வேண்டும் என்ற துணிவை இழக்கவில்லை.

2009 ஏப்ரல்.. ஆட்லறி செல்லுக்கு என் மனைவி இரையானாள். வாழ்க்கையில் நான் சந்தித்த கடும் சோகம். இருந்தும் தேசிய துணைப்படை வீரனாய் என் பணி தொடர்ந்தது.

2009 மே.. முடிவை நெருங்கி விட்டோம் என்பதை உணர்ந்தேன். ஆனால் விடிவின் கனவை இழக்கவில்லை. என் மனைவியின் பாதையில்.. பயணிக்க காத்திருக்கிறேன். நிச்சயமா சரணடைய மாட்டேன். இங்கு இறந்து கிடக்கும் பிஞ்சுகளின் நடுவே இருந்து இந்த கடைசி வரிகளை எழுதுகிறேன். எனி இந்த டயரியில் எழுத எனக்கும் தெம்பில்லை.. பக்கமும் இல்லை. சுருங்க என் சுயசரிதையை எழுத வேண்டும் என்பதற்காக இதனை எழுதி வைத்துவிட்டுச் செல்கிறேன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

... இப்படியாய் எழுதி முடிக்கப்படிருந்த அந்த டயறியின் வரிகளைப் படிக்கப்படிக்க.. என் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் துளிகள் வடிந்து வீழ்ந்து பக்கங்களைக் கனதிப்படுத்தி இருந்தன. அதன் ஈரலிப்பை என் கரங்களும் உணரச் செய்தன. எல்லாம் முடிய.. இறுதில் ஒரு மூலையில்.. கண்டேன்.

"நான்.. ஒரு கவிஞன்.. என்று வாழ ஆசைப்பட்டேன். என் கவிதை என்பது.. தமிழீழ தேசிய கீதமாய் அமைய வேண்டும் என்று விரும்பினேன்.." என்ற அந்த டயறிக்குரியவரின் கடைக்குறிப்புக்களை. அந்தக் கடைக்குறிப்புக்கள் என் மனதில் ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்க.. அவற்றைக் கொண்டே அந்த டயறிக்கு "ஒரு கவிஞனின் டயறி" என்று பெயரிட்டு, அதனை என் மன அறையில் பக்குவப்படுத்திக் கொண்டு முள்ளிவாய்க்கால் மணற்தரையில் இருந்து விடை பெற ஆரம்பித்தேன்.

அப்போது.. நான் அமர்ந்திருந்த அந்தக் இரத்தக் கறை படிந்திருந்த சட்டையும் என் உடல் பாரத்தால் ஒட்டிக் கொண்டோ என்னவோ அதுவும்.. என் கூடவே வந்தது. அதற்கும் என்னோடு உறவாட ஆசை போலும்.. அதன் சொந்தக்காரியின் சோகங்களைப் பரிமாறுவான் என்ற நோக்கம் போலும். அதனையும் டயறியோடு காவியபடி.. இறுதியாய் ஒரு தடவை.. முள்ளிவாய்க்காலை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தேன்..!

அப்போ.. நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரே இரண்டு வெள்ளைச் சோடிகளும் ஒரு இந்தியச் சோடியும்.. தமக்குள் பேசிக் கொள்கின்றனர்.. இதுதான் புலிகளை அழித்த முள்ளிவாய்கால். கவாய் போல.. மெரீனா போல... அழகான பீச்சா இருக்கே. அடுத்த முறையும் விடுமுறைக்கு இங்கேயே வரலாம். பயங்கரவாதிகள் இங்கு நல்லாத்தான் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் போல.

இதைக் கேட்ட எனக்கு.. பெரு மூச்செறிவதை விட.. வேறெதனையும்.. செய்ய முடியவில்லை. முழத்துக்கு முழம்.. துப்பாக்கிகளோடு சிங்களச் சிப்பாய்களும்.. முள்ளிவாய்க்காலின்.. கடற்காற்றில் உப்புக் குடித்தபடி.. எதையோ காப்பதாய் கற்பனை செய்தபடி.. காதலிகளின் நினைவுகளோடு.. அங்கு காய்ந்து கொண்டு இருந்தனர். அவர்களை கடக்க... மெளனமே பாதுகாப்பான பாஸ்போட் என்பதால் மெளனத்தை முதன்மைப்படுத்தி.. விடை பெற்றேன்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:13 AM

2 மறுமொழி:

Blogger குடிகாரன் செப்பியவை...

அழுவதற்கு கண்களில் ஈரம் இல்லை

Sun Aug 30, 08:17:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உண்மை தான். ஆனால் எமது துன்பியல் வரலாறுகள் பதியபட வேண்டியவை..! சந்ததிகள் படிக்க வேண்டியவை. எமது இனத்தின் விடுதலையை இப்போ உள்ளோரும் எனி வருவோரும் உணர வேண்டும். விடுதலையற்ற ஒரு இனத்தின் கதி இது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். !!

Sun Aug 30, 10:51:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க