Friday, December 26, 2008

கூத்தடித்த கடலே விடை கொடு..!



கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
“சுனாமி” அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!

படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்…!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டுகள் நான்குமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்…!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி…???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்…!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ…??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன….
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி…
தீருமோ அது…???!
கூத்தடித்த கடலே விடை கொடு…!

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:37 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க