Tuesday, November 18, 2008

எதிரொலி.



என்னங்க இன்றைக்கு அம்மா ஊரில இருந்து போனில கதைச்சாங்க.

என்னவாம். காசு கேட்டா போல.

இல்லைங்க.. தங்கச்சிக்கு கனடாவில இருந்து ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்காம். அதுதான் விசாரிச்சுப் பார்க்கச் சொல்லிச் சொன்னா.

நல்ல விசயம் தானே. விசாரிச்சாப் போச்சுது.

உங்கட ஆக்கள் தானே கனடாவில புழுத்துப் போய் இருக்கினம். ஒருக்கா சொல்லி விசாரிக்கச் சொல்லுங்களன்.

அதென்ன உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்று பிரித்துப் பேசிறீர். உம்மைக் கட்டினது துவக்கம் நான் எப்பவாவது உங்கட எங்கட என்று பிரிச்சுப் பார்த்திருக்கிறனே.

இல்லையப்பா.. சும்மா சொன்னன். அப்படிச் சொன்னா தான் செய்வியள் என்று. அதுக்கேன் கோவிக்கிறியள்.

சரி சரி.. இப்ப நான் வேலைக்குப் போகப் போறன். இரவு வந்து கனடாவில இருக்கிற எங்கட மூத்த அக்காண்ட காதில சங்கதியைப் போட்டு வைப்பம். எதற்கும் மாப்பிள்ளையின்ர கனடா விபரங்களை அம்மாட்ட வாங்கி வையும்.

ஓமங்க. அதுக்கு அம்மாக்கு போன் பண்ண.. காட் வாங்கனும்.

நேற்றுத்தானே உமக்கு சம்பளம் போட்டதாச் சொன்னீர்.

சம்பளம் போட்டிட்டாங்க. கல்யாணி நகைக்கடை சீட்டுக்கும், சுந்தரம் காஞ்சிபுரம் கடை சீட்டுக்கும், ஜிபி அன்னலட்சிமின்ர மகளோட போடுற 3000 பவுண் சீட்டுக்கும் கட்டின காசு போக 5 பவுண் தாங்க மிஞ்சிக் கிடக்குது.

அப்படியே சங்கதி. உந்த 3000 பவுண் சீட்டில என்ன செய்யப் போறீர். எமக்குத்தான் கலியாணம் கட்டி ஐஞ்சு ஆறு வருசமாகியும் பிள்ளையும் இல்ல குட்டியும் இல்ல. அதுவுமில்லாம நான் தானே வீட்டு மோட்கேஜ்.. காருக்கு இன்சூரன்ஸ்.. லைவ் இன்சூரன்ஸ்.. வீட்டு இன்சூரன்ஸ்.. வீட்டு வரி.. கரண்ட் பில்.. தண்ணி பில்.. காஸ் பில்.. கிரடிட் காட் மிச்சம் மீதி எல்லாம் கட்டுறன்.

இல்லைங்க.. ஊரில அம்மா ஆக்கள் இன்னும் அந்த வாடகை வீட்டில தானே இருக்கினம். தம்பியைக் கனடாவுக்கு அனுப்ப வீடுவளவை வித்தெல்லோ போட்டினம். வயசான காலத்தில அவைக்கு இருக்க ஒரு இடம் வேணாமே.அதுதான் கொஞ்சம் பணம் சேர்த்து வீடொன்று வாங்குவம் என்று பார்க்கிறன்.

ஏன் அவையை இங்க கூப்பிட்டு வைச்சிருக்கிறது தானே.

உங்களுக்கு என்ன விசரே. இங்க கூப்பிட்டு யார் கூட வைச்சிருக்கிறது. நானும் வேலைக்குப் போறனான். நீங்களும் வேலைக்குப் போறது. அவைக்கு உதவிக்கு யார் இருக்கினம். அதெல்லாம் தொந்தரவு.

அப்ப உம்மட தம்பிட்ட கனடாவுக்கு அனுப்பி வைச்சால் என்ன. அம்மாவும் தங்கச்சியும் தானே ஊரில இருக்கினம். தங்கச்சியும் கலியாணம் கட்டி கனடாவுக்குப் போயிட்டா பிறகென்ன அம்மா மட்டும் தானே.

தம்பி பாவங்க. அவன் இப்பதான் கனடா போய் கஸ்டப்பட்டு முன்னேறிக் கொண்டு வாறான். அதற்குள்ள அம்மாவை அங்க அனுப்ப ஏலுமே. எனி நாங்களும் கொலிடே அதுஇதென்று போகேக்க நிற்க ஒரு இடம் வேணாமே. இப்ப கொழும்பில ஒரு வீடு வாங்கிறது எண்டால் முடியாது. பேய் விலை விற்குது பிளாட் எல்லாம். அதுதான் வவுனியாவிலேயே வீடு ஒன்றை வாங்குவம் என்று அம்மாட்டச் சொல்லி இருக்கிறன்.

அட இவ்வளவு திட்டத்தோடதான் செயற்படுறீர்.ம்ம் கெட்டிக்காரிதான்.

எப்படியோ எங்கள பெத்து வளர்த்து ஆளாக்கினது எங்கட அம்மாவும் அப்பாவும் தானே. அப்பா காட் அட்ராக்கில இறந்த போது எனக்கு 15 வயசு. அம்மா எவ்வளவு கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தா என்று உங்களுக்குத் தெரியுமே.

அப்படியே... உங்கட அம்மா மட்டுமே கஸ்டப்பட்டு வளர்த்தா. எங்கட அம்மாவும் தான் ஏன் உலகத்தில உள்ள அம்மாக்கள் எல்லாம் தான் அப்படி கஸ்டப்பட்டு வளர்த்திச்சினம்.. இன்னும் வளர்க்கினம். பிள்ளையைப் பெத்தா அவைதானே வளர்க்கனும். ஊரில ரோட்டில போறவன் வாறவன் வளர்ப்பானே.

உங்களோட கதைக்க முடியாது. உடன விதண்டாவதம் செய்யப் போடுவியள். ஆனால் நீங்கள் மட்டும் உங்கட அம்மா என்றா உருகி வழிவியள்.

எங்கட அம்மா என்று நான் உருகி வழியிறதில்ல. தாய்க்கு பெற்றோருக்கு அவங்கட முதுமைக்காலத்தில் கடமை செய்ய வேண்டியது பிள்ளையளின்ர பொறுப்பு. நான் உம்மைக் கவனிக்காம.. குடும்பத்தைக் கவனிக்காம அம்மாவில உருகி வழியிறதையே செய்யுறன்.

இப்ப என்ன சொல்ல வாறியள். நான் உங்களைக் கவனிக்கிறதில்ல.. குடும்பத்தைக் கவனிக்கிறதில்ல அம்மா அம்மா என்று உருகி வழியுறன் என்றா சொல்ல வாறியள்.

ஏன் நீர் அப்படி நினைக்கிறீர்.

இல்ல உங்கட பேச்சு அப்படி நினைக்க வைக்குது.

ஏன் நினைக்கிறத நல்லதா நினைக்கக் கூடாதா. அப்படி நினைச்சா உந்தக் கேள்வியை தவிர்த்திருக்கலாமே. நான் சொன்னேனா நீர் என்னைக் கவனிக்கல்ல என்று அல்லது குடும்பத்தைக் கவனிக்கல்ல என்று. நான் அம்மாவுக்கு கடமை செய்யுறது பிள்ளைகளின் பொறுப்பு என்று தானே சொன்னேன்.

இல்ல உங்கட பேச்சு ஒரு மாதிரியா இருந்திச்சு அதுதான்.

என்ன ஒரு மாதிரி என்றீர்...??!

நான் ஏதோ என்ர உழைப்பை எல்லாம் அம்மாவுக்கு வீடு வாங்க சீட்டுப் போட்டு சேமிக்கிறன்.. நீங்கள் தான் இங்க குடும்பச் செலவைக் கவனிக்கிறியள் என்று குத்திக்காட்டிறது போல இருந்திச்சு.

குத்திக்காட்ட அங்கு ஒன்றுமில்ல. உண்மையை தானே சொல்லுறன். கிட்டத்தட்ட மாதம் 800 பவுண் சம்பளம் எடுக்கிற நீர்.. வீட்டுக்கு குடும்பத்துக்கு ஒரு செலவும் செய்யாமல் 5 பவுண் தான் மிச்சம் என்றிருக்கிறீர். அம்மா கூட போன் கதைக்க காட் வாங்கக் கூட காசில்லாமல் இருக்கிறீர். அப்படி இருக்கேக்க இரவும் பகலும் முறிஞ்சு 1300 பவுண் உழைக்கிற நான் தான் இந்த வீட்டு குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டி இருக்குது.

ஓஓ.. இவ்வளவையும் மனசுக்க வைச்சுக் கொண்டுதான் என் கூட கதைச்சனீங்கள் என்ன.

ஓம்.. நீர் உங்கட அம்மா தம்பி தங்கச்சி என்று வாழ நினைக்கிறீரே தவிர இங்க குடும்பத்தைப் பற்றி என்ன அக்கறை செய்யிறீர்.

ஏன் உங்களுக்கு தினமும் வடிச்சுக் கொட்டுறனே அது போதாதா. ஒரு பொம்பிளைக்கு அதுக்கு என்ன கூலி கொடுக்கிறீங்க.

இப்படிப் பேசாதையும். நீர் இங்க எங்க வடிச்சுக் கொட்டுறீர். புரோசின்பூட்டை மைக்குறோ வேவுக்க வைச்சு சூடுகாட்டி கோப்பையில போட்டுத் தாறதைத் தவிர நீர் என்ன செய்யுறீர். நாளையில இருந்து நானே அதைச் செய்து கொள்ளுறன். நீர் வடிக்கவும் தேவையில்ல கொட்டவும் தேவையில்ல. நான் கூலியும் கொடுக்கத் தேவையில்ல.

ஓம்.. ஓம்.. இப்ப அப்படித் தான் சொல்லுவியள். உங்கட அம்மாவுக்கு கொழும்பில பிளட் வாங்க இந்த வீட்டை லோனுக்கு விட்டு காசு அனுப்பினனீங்க தானே. அதுகளைப் பற்றி நான் ஏதாச்சும் சொல்லி இருக்கனா.

என்ன சொல்லுறீர். இது நான் உம்மைக் கலியாணம் கட்ட முதல் இரவு பகலா என்ர இளமைக் காலக் கனவுகளை எல்லாம் தொலைச்சுப் போட்டு உழை உழை என்று உழைச்சு வாங்கின வீடு. அதுமட்டுமில்லாம அம்மாவுக்கு கொடுத்த காசை என்ர சகோதரங்கள் எல்லாம் சேர்ந்து சேர்த்து தந்து கடனும் அடச்சுப் போட்டுத்தானே உம்மைக் கட்டினனான். என்னைக் கட்டேக்க மாப்பிள்ளைக்கு கடனோ.. வியாதியோ.. பொம்பிளைத் தொடர்போ என்று எத்தினை மாதங்கள் நீங்க யார் யாரையோ எல்லா விசாரிச்சியள் என்றதைச் சொன்னால் வெட்கம்.

பின்ன.. விசாரிக்காமல் பாழுங்கிணறுக்க போய் விழ ஏலுமே. அப்படி விசாரிச்சுச் செய்துமே இப்ப நான் உழைக்கிறதை நான் செலவு செய்ய கணக்குச் சொல்ல வேண்டி இருக்குது. விசாரிக்காமல் செய்திருந்தா என்னென்ன எல்லாம் நடந்திருக்குமோ.

ஏன் நான் உழைக்கிறதுக்கு நீர் கணக்குப் பார்க்கேக்க.. நான் சொல்லுறனானே அது கூடாது என்று இல்லைத் தானே. ஏன் நான் உம்மட உழைப்பை கணக்குப் பார்த்தா மட்டும் தப்பென்று நினைக்கிறீர். உதுதான் உந்தப் பொம்பிளையளின்ர குணம். தங்கட விசயம் வெளில தெரிஞ்சா இன்னும் நாலு விசயத்தை இழுத்து வைச்சுப் பேசி முன்னையதை மறைச்சுப் போட்டிடலாம் என்று நினைக்கிறது.. அது எப்பவும் சாத்தியப்படுற விசயமே.

ஓம்.. பொம்பிளையளைப் பற்றி இவ்வளவும் தெரிஞ்சு வைச்சிருக்கிற நீங்கள். ஏன் கலியாணம் கட்டினியள்.

நீர் ஏன் கட்டினனீர். அதே காரணம் தான் எனக்கும்.

உங்களோட கதைச்சா விசர் தான் வரும். நேரம் போயிட்டுது வெளிக்கிட்டு கெதியா வேலைக்கு போங்கோ.

ஒரு மாதிரி வேலைக்கு கலைச்சு விட்டிட்டா நிம்மதியா இருக்கலாம் என்று முடிவு கட்டிட்டீர். திருத்த ஏலாது உங்களை.

நீங்கள் ஒன்றும் எங்களைத் திருத்தத் தேவையில்ல. எங்களுக்கு தெரியும் எங்கட வேலையைப் பார்க்க.

ம்ம்.. பார்க்கத் தெரியுது. அதுதான் போன் காட் வாங்கவும் காசில்லாமல் இருக்கிறீர்.
சரி சரி.. சண்டை போட்டது காணும்.. இந்தாரும் 20 பவுண். போய் போன் காட்டை வாங்கி முதலில அந்த தங்கச்சியின்ர அலுவலைப் பாரும். எதுக்கும் கலியாணம் கட்ட முதல் அவளுக்கு நான் சில புத்திமதி சொல்லிக் கொடுக்க வேணும். அக்கா போல வாய் காட்டாமல்.. புருசனை புரிஞ்சு நடக்கச் சொல்லி.

ஆமா. இவரை நான் புரிஞ்சு நடக்காமல் தான் 6 வருசமா குப்பை கொட்டிறனாக்கும். சும்மா கதை விடாமல் போங்கோ.

சரியடியப்பா. உன்னோட கதைச்சு வெல்ல முடியுமே. சந்தோசமா இரு. அதுபோதும் எனக்கு. உன்ர சந்தோசம் தானேடி எனக்கு வாழ்க்கை.

ஆமா. பேசும் போது உதை நினைக்காயள். பேசி முடிய சொல்லுவியள் இனிப்பா நாலு வார்த்தை. உதுதான் ஆம்பிளையளின்ர குணமே.

பேசிறதில்லையடிப்பா உங்களுக்கு சில விசயங்களை புரிய வைக்கிறது கஸ்டம் என்றதால சந்தர்ப்பம் வரேக்க சொல்லுறதுதான்.

எங்களுக்கு நேர சொன்னாப் புரியும். இப்படியும் அப்படியும் குத்திக் காட்டத் தேவையில்ல.

மறுபடியும் தொடங்குது. அப்ப நான் போட்டு வரட்டே.

ஓகே. போங்க. அந்த 20 பவுணை தந்திட்டுப் போங்களன்.

என்னை விட்டாலும் அதை விடாயே.

ஆமா. பாய். போயிட்டு வாங்க மிச்சம் இரவுக்கு வைச்சுக்கிறன்.

-----------------------

(யாவும் உண்மை கலந்த கற்பனை)

நன்றி யாழ் இணையம்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:46 PM

2 மறுமொழி:

Blogger துளசி கோபால் செப்பியவை...

அருமையான ஃப்ளோ இருக்கு கதையில் ..

வீட்டுக்கு வீடு வாசப்படி:-)))))

Wed Nov 19, 11:28:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் கோபால் உங்கள் கருத்துப் பகிர்வுக்கு.

உங்கள் வீட்டிலும்.. இதுதான் கதியா..??! :))

Thu Nov 20, 10:03:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க