Sunday, December 28, 2008

சகோதரனின் குருதியில் பன்னீர் தெளிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள்.



ஈழத்தில் இருந்து அகதிகளாக மேற்குலக நாடுகளுக்கு வந்து செற்றிலாகி விட்ட தமிழர்களின் வார்த்தையில் தான் என்னவோ, ஈழம் பற்றிய உச்சரிப்பு இருக்கிறதே தவிர, உளத்தளவில் அவர்கள் எல்லா உரிமைகளும் பெற்ற மக்களாக எங்கேயோ சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஈழத்தில் குறிப்பாக வன்னியில் இடைவிடாது குண்டு மழை பொழிகிறது. தினமும் அப்பாவி மக்களும் போராளிகளும் தாய் மண்ணைக் காக்க இரத்தம் சிந்தி உயிரையும் கொடுக்கின்றனர்.
மக்கள் உள்ளூரிலேயே அகதிகளாகி படுத்து உறங்க ஒரு இடமின்றி அலைகின்றனர். உலகமே அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் கண்ணீர் சிந்துகிறது.

ஆனால்..

அவர்களின் இரத்த உறவுகளோ அவர்களை காட்டிப் புலம்பெயர்ந்துவிட்டு குதூகலாமாக புத்தாண்டை வரவேற்கப் புறப்பட்டு விட்டனர்.

சிறீலங்கா அரசோ 2009 ஐ தமிழர்களை வெல்லும் இராணுவ ஆண்டாக அறிவித்து யுத்தத்தை தீவிரப்படுத்தி முன்னெடுக்க உறுதுபூண்டுள்ள நிலையில்.. களியாட்ட நிகழ்ச்சித் திட்டங்களை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொள்வதும் அதற்கு தமிழ் தேசியத்துக்காக உழைப்பதாகச் சொல்லும் ஊடகங்கள் விளம்பரம் போடுவதும், அருகே மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதும்.. உறுத்தலான காட்சியகாளாக மனதைக் குத்திக் கிழிக்கின்றன.

ஒரு பக்கம்.. யுத்த அழிவுகள்.. இன்னொரு பக்கம்.. அனுதாபமும் ஆதரவும் தேடும் ஊர்வலங்கள்.. கவனயீர்ப்புக்கள்.. அதையடுத்து.. குதூகலக் கொண்டாட்டங்கள்..??!

இப்படிப் போனால் நிச்சயம் புலம்பெயர் தமிழர்களின் கருத்தை உலகம் ஏற்கவே செய்யும்..???!

இப்பதிவைப் பார்த்துவிட்டு.. சிலர் கேள்வி கேட்க முனையலாம்.. வன்னியில் இழப்பு என்பதற்காக எல்லோரும் அவரவரின் தனிப்பட அல்லது குழுநிலைச் சந்தோசகங்களை தாரை வார்த்திட்டு கட்டிப்பிடித்து ஒப்பாரியா வைக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள் என்று.

நாம் அதை வலியுறுத்தவில்லை..

இவ்வகையான களியாட்ட நிகழ்வுகளை நடத்துவது.. கீழ்க்காணும் விளைவிக்க வல்லன என்பதைச் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம்.

1. சர்வதேசத்துக்கு, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இந்த யுத்தத்தில் சிறீலங்கா அரசு தமிழர் நிலங்களை பேரழிவுகளோடு கபளீகரம் செய்வதையிட்டு உண்மையில் அக்கறை செய்யவில்லை. அவர்கள் வழமை போலவே வாழ்கின்றனர் என்று காட்டும்.

2. ஈழத்தமிழர்களில் ஒரு சிறு குழுவினரே (சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும் இதையே சொல்லி வருகிறார்) பிரிவினைக்கு ஆதரவளிக்கின்றனர். ஏனையோர் பிரிவினையில் அக்கறையின்றி எப்படியாவது சிங்களவர்களுடன் சந்தோசமாக வாழலாம் என்ற நிலையில் இருக்கின்றனர் என்று சிறீலங்கா அரசு மற்றும் அமெரிக்க அரசுகள் சர்வதேசத்துக்கு சுட்டிக்காட்ட இது வலுவான சான்றாகும்.

3. விடுதலைப்புலிப் போராளிகளை சிறீலங்கா அரசு அழிப்பது பற்றி புலம்பெயர் தமிழர்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் சில தூண்டுதல்களின் பேரிலேயே சில ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றனர் என்று இவ்வாறான களியாட்டங்கள் இனங்காட்டுவது மட்டுமன்றி புலிகள் கூறுவது போல அவர்களுக்கு மக்களாதரவு இல்லை. அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தியே மக்கள் இப்போராட்டத்தை நடத்துவதாகக் கூறச் செய்கின்றனர்.ஆனால் உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகளே. அவர்கள் பயங்கரவாதத்தையே வளர்க்கின்றனர் என்று கூற இது வலுவான சான்றாக்கப்படும்.

4. புலம்பெயர் தமிழர்களிடையே போர்,தமிழீழ விடுதலை மற்றும் தாயகத்தமிழர் நலன் பேணுதலில் ஒற்றுமை இன்மையை தூலாம்பரமாக வெளிக்காட்டும்.

5. தமிழ் தேசிய ஊடகங்கள் வன்னி மக்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கின்றனவே தவிர அவர்களுக்குக் கூட அந்த மக்கள் மீது உண்மையான அக்கறையில்லை என்பதை இவ்வாறான குதூகலங்களை இன்றை சூழலில் விளம்பரப்பத்துவது ஏற்படுத்தும்.

6. யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா அரச கட்டுப்பாட்டில் வாழும் தமிழ் மக்களும் புத்தாண்டை குதூகலாமக் கழிக்கின்றனர், மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களும் புத்தாண்டை குதூகலமாக வரவேற்கின்றனர், கொழும்பில், மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடுகின்றனர், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் குதூகலமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். எனவே சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் போல உரிமைகளை அனுபவிக்கின்றனர். சிறீலங்காவில் இனப்பிரச்சனையோ அல்லது அடக்குமுறையோ கிடையாது. புலிப் பயங்கரவாதமே இருக்கிறது என்பதை சிறீலங்கா அரசு அழுத்திச் சொல்ல நிச்சயம் இது உதவும்.

7. புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் மற்றும் தமிழக உறவுகள் வன்னி மக்களுக்காக, ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்யும் குரல்களை, இவ்வாறான நிகழ்வுகளை இன்றைய பொழுதில் பெரும் விளம்பரங்களோடு ஆர்ப்பாட்டமாகச் செய்வது மலினப்படுத்துவது மட்டுமன்றி மிக மோசமாக பாதிக்கவும் செய்யும்.

மேற்படி விளம்பரத்தை இணைத்துள்ள இணையத்தளங்களாக.. சங்கதி.கொம் மற்றும் பதிவு.கொம் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கம் யாழ் இணையம் தனது உறுப்பினர்களை கூடிக்களிக்க தூண்டி வரும் நிலையில்.. இவை இவ்வாறான நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளன.

உண்மையில் இவைதானா இவர்களின் தூர நோக்குள்ள புலம்பெயர் தமிழர்கள் வளர்க்கும் தமிழ் தேசியம்..??! ஈழத்தில் வாழும் இவர்களின் உறவுகளின் துயர் துடைக்கும் கைங்கரியத்தின் பாங்கும் இதுதானா..??!

சிந்தியுங்கள் தியாகங்களைப் புரிந்து உரிமைக்காக வாழ்ந்து வரும் உங்கள் தாயக உறவுகளின் நலனை முன்னிறுத்த முனையுங்கள். அவர்களுக்கான போராடும் சக்திக்கு வலுவூட்டுங்கள்.

மனதெங்கும் குருதி வழிய உங்களின் பார்வைக்கு வரும்.. மக்கள் பார்வை.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:06 PM

5 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்ல தொரு பார்வை

Sun Dec 28, 10:13:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி அனானி

எவ்வகையில் இது நல்ல பார்வை என்று எழுதினீர்கள் என்றால் இன்னும் நல்லா இருக்கும்..!

குருவிகள்.

Mon Dec 29, 12:05:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் நீங்கள் சொல்வதில் இன்னோன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலாவதாக அங்கிருக்கும் மக்களிற்கும் விடுதலைப்போரட்டத்திற்கும் நிதி தேவை அதனை

Thu Jan 01, 01:31:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

பெற்றுக்கொள்வதிற்கு இதனை பாவிக்கின்றார்கள். மக்களிடம் ஏதாவது ஒருவழியில் நிதியை பெற
வேண்டிய தேவை இருக்கின்றது. ஜேர்மனியில் பங்களிக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவீதமானோரே
பங்களிப்பு செய்து வருகின்றார்கள். அவர்கள் தான் வருடப்பங்களிப்பும் ஒவ்வொரு மாதங்களில் நடை
பெறும் நிகழ்ச்சிப்பங்களிப்புக்கு பற்றுச்சீட்டுகளையும் வாங்குவார்கள். வானேலியிலும் கொடுப்பார்கள்.
அவர்களிடம் எவ்வளவு தரம் திரும்ப திரும்ப போய் பங்களிப்பை பெற்றுக்கொள்வது. அதற்காக
பங்களிப்பு செய்யாமலும் அத்துடன் பொழுபோக்கிற்கு செலவழிக்கும் மக்களையும் இளம்வயதினரையும்
இழுத்து அவர்களின் பொழுதுபோக்கையும் பூர்த்திசெய்து எடுக்கவேண்டியளவு தேவை இருக்கின்றது.

......................................................................................................................................
இன்னும் எழுத விருப்பம்...... அவர்கள் செய்வது சரியேன்று சொல்லவில்லை. நியாயப்படுத்தவும் விரும்ப
வில்லை ஆனால் இதனையும் சொல்லவிரும்புகின்றேன்.

Thu Jan 01, 01:32:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் அனானி.

உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

புலம்பெயர்ந்த தேசத்தில் முக்கியமாக 4 தரப்பினர் வாழ்கின்றனர்.

1. வளர்ந்து பெரியவர்களாகி இடம்பெயர்ந்து வந்தவர்கள்.

2. சிறுவர்கள் அல்லது சிறுமிகளாக பெற்றோரோடு இடம்பெயர்ந்து வந்தவர்கள்.

3. இடம்பெயர்ந்தோரில் அல்லது குடிபெயர்ந்தோரின் ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய தேசத்தில் பிறந்த பிள்ளைகள்.

4. அரசியல் அல்லது ஈழத்துப் பிரச்சனை சார்ந்தல்லாது வேறு காரணங்களுடன் காலத்துக்கு காலம் குடிபெயர்ந்தவர்கள்.

இந்த 4 தரப்புக்களில்.. முதல் 2 தரப்புக்களும்.. 4ம் தரப்பும் தாயகம் நோக்கியுள்ள பிரச்சனைகளின் தார்ப்பரியத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பைக் கொண்டவர்கள்.

3ம் தரப்பினருக்கு அவ்வாய்ப்பு வெகுகுறைவு.

அவர்களை நோக்கியதாக உங்கள் கருத்து அமையின் அது யதார்த்தமானது.

ஆனால் மற்றைய 3 தரப்பினர்களிலும் கணிசமான தொகையினர் வீண் செலவீனங்களோடு புகலிடத்தில் வாழ முனைகின்றனர். அதையும் நாம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடப்பாட்டை சொல்லியாக வேண்டி இருக்கிறது.

அவ்வாறு சொல்லாது விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் இவை எமது தாயகம் நோக்கிய எவ்வித அக்கறையும் இன்றி வடிவமைக்கப்படக் கூடிய நிலைக்குப் போகலாம். அதை இயன்ற வரை தவிர்ப்பது நல்லதல்லவா. அதேவேளை இங்கிருக்கும் இளைய சந்ததியின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் அதனூடும் தாயகம் பற்றிய அவலங்களைச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதை தட்டிக்கழிப்பது சரியல்ல.

உதாரணத்துக்கு மேற்குறிப்பிட்ட விளம்பரத்தில் புத்தாண்டை குதூகலமாக வரவேற்பது என்பதற்குப் பதிலாக.. ஈழத்திம் துயர் களைய வருக புத்தாண்டே என்று குறிப்பிடலாம்.

புகலிடத்தில் பிறந்தவர்களுக்கும் உலக அறிவு இருக்கிறது. நிச்சயம் இருக்க வேண்டும். அவர்களும் எமது தாயகம் பற்றி அறிந்திருப்பது அவசியம். வெறுமனவே கேளிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிராமல்.. அவர்களைக் கவரத்தக்க வகையில் தெரிந்தெடுத்த கேளிக்கை கலந்த தாயக அறிவூட்டல் அம்சங்கள் நிறைந்த படைப்புக்களையும் அவற்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லா மனிதனுக்கு அறிவைப் பெறுவதில் ஆர்வம் இருக்கும். அதற்கு மேற்குறிப்பிட்ட 4 வகையினரும் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறுமுறைகளில் அணுகப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கிடையே உள்ள பொதுமைப்பாடுகளையும் பயன்படுத்தி அவர்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்கவும் வேண்டும்.

அப்போதுதான் தாயகம் பற்றிய விபரங்கள் சந்ததிகளுக்கும் போய் சேரும். யூதர்கள் இனப்பற்றை வளர்த்துக் கொள்வது போன்று. முஸ்லீம்கள் மதப்பற்றை வளர்த்துக் கொள்வது போன்று..! ஆனால் அடக்குமுறையோ.. திணிப்போ கூடாது..! சுதந்திரமா எமது பிரச்சனைகள் பற்றி சிந்திக்க.. அறிய எல்லோரையும் எப்போதும் வழிப்படுத்த முயல வேண்டும்.

நன்றி குருவிகள்.

Thu Jan 01, 07:27:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க