Monday, March 16, 2009

சிறீலங்காவின் சன நாய் அகம்.சிறீலங்கா எனும் சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத தேசம் தமிழ் மற்றும் தனது சொந்தச் சிங்கள சனங்களை நாய்களை விடக் கேவலமாக நடத்தி அங்கு சன நாய் அக ஆட்சி நடத்தி வருவதையே அங்கு நடக்கும் அண்மைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அமெரிக்க சனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம், மக்களின் கருத்துரிமைச் சுதந்திரம், சொந்த தேசத்தில் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம், சொந்த மண்ணில் விரும்பிய இடத்தில் வாழும் சுதந்திரம் இவை அனைத்தும் மக்களுக்கு அவர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யும் அரசுகளால் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இவை பல நாடுகளில் (அமெரிக்கா உட்பட) பகுதியாகவே மக்களால் அனுபவிக்கப்படுகின்றன என்பது உண்மையாக இருக்க சிங்களப் பேரினவாத கொடிய பயங்கரவாத தேசமான சிறீலங்காவிலோ இவை எதுவும் பகுதியாகக் கூட தமிழ் மக்களுக்கு இல்லை.

அண்மையில் சுடரொளி மற்றும் உதயன் (யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஓரளவு நடுநிலைத்தன்மையுள்ள ஒரே பத்திரிகை) பத்திரிகைகளின் உரிமையாளர் பத்திரிகையாளர் வித்தியாதரன் சிறீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலராக இருக்கும் சிறீலங்கா சிங்கள பெளத்த சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியும் அமெரிக்க கிரீன் காட் பிரஜையுமான கோத்தபாய ராஜபக்சவின் அடியாட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலைக்கு கொண்டு போகப்பட்டார். கடத்தியவர்கள் அவரை கொலை செய்வதற்கிடையில் உறவினர்கள் மேற்குலக ராஜதந்திரிகளின் உதவியை மற்றும் பிறரின் உதவிகளை நாடி சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்த நிலையில் கடத்தப்பட்டவர் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படடது சிறீலங்கா பயங்கரவாத அரசு.கோத்தபாய கொலை வெறியுடன் வித்தியாதரன் பற்றி அவுஸ்திரேலிய எஸ் பி எஸ் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய போது.

இப்போ அவரே (வித்தியாதரன்) கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் விடுதலைப்புலிகள் அண்மையில் மேற்கொண்ட கரும்புலி விமானத்தாக்குதல்களை திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடத்தினார் என்று கோத்தபாயவினால் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயன்,சுடரொளி பத்திரிகைகள் பல தடவைகள் சிறீலங்கா பேரினவாதப் படைகளினதும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஈபிடிபி போன்ற சிறீலங்கா அரசின் ஆயுதங்களை தரித்திருக்கும் ஆயுத - சன நாய் அகக் கொலை வெறி அரசியல் கும்பல்களின் அச்சுறுத்தல்களுக்கு இலக்கானதுடன் அவற்றின் பத்திரிகையாளர்கள் 6 பேரையும் அரச பயங்கரவாத வன்முறைக்கு இழந்துள்ளன.

மேலும் அண்மையில் வெளியான தமிழகத்தில் இருந்து வெளி வரும் ஆனந்த விகடன் வார இதழில் வான் புலிகள் பற்றிய கட்டுரை ஒன்று தொடர்பாக அந்த விகடன் உட்பட ஆனந்த விகடன் இதழ்களை கடந்த 30 வருடங்களாக சிறீலங்காவில் விநியோக உரிமை பெற்று விநியோகித்து வருபவருமான ஈழத்தமிழ் புத்தக உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைக் கொண்டுள்ள பூபாலசிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் சிறீதரசிங் சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் ஆனந்த விகடன் வார இதழை விநியோகிக்கவோ விற்கவோ சிறீலங்காவில் தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பத்திரிகைகள் சஞ்சிகைகள் மீதுதான் இவ்வாறான சனநாயக விரோத போக்கென்றால் போர் பிராந்தியத்தில் இருந்து காயப்பட்டு சிகிச்சைக்கு சர்வதேசச் செஞ்சிலைவைச் சங்கத்தால் எடுத்து வரப்படும் தமிழ் மக்கள் கூட சிறீலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டு அவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு சொல்லெனா துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்ற விடயங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசின் படைகளை நம்பி அவர்களிடம் சரணடைந்த அப்பாவித் தமிழ் மக்களை நீண்ட கால அளவில் முட்கம்பி வேலிகளால் எல்லையிடப்பட்ட செயற்கையான வாழிடங்களுக்குள் அடைத்து வைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ள அதேவேளை உலகில் சனநாயகத்துக்காக உழைப்பதாகக் கூறும் நாடுகளும் ஐநா போன்ற அமைப்புக்களும் அந்த முகாம்களுக்குள் போதிய வசதி வாய்ப்பு இருக்கா இல்லையா என்று கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றனவே தவிர குறிப்பிட்ட மக்களை அந்தச் சிறையில் இருந்து மீட்க முயற்சிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

அமெரிக்கா உலகில் தனது ஆயுத பலத்தின் மூலம் சன நாய் அகத்தை திணித்து வருவதைப் போல சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசும் அதையே செய்ய மேற்குறிப்பிட்ட நாடுகளும் சனநாயக விரோத போக்குடைய அரசுகளும் சர்வதேச அமைப்புக்களும் சிறீலங்காவின் செயலுக்கு முண்டு கொடுத்து வரும் செயலைச் செய்கின்றன.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் போர்க்குற்றம் இழைக்கும் செயலில் சிறீலங்கா அரசும் சிறீலங்கா அரசின் அறிக்கைகளை மையமாக வைத்து விடுதலைப்புலிகளும் ஈடுபட்டுள்ளதாக ஐநா அறிக்கைவிட்டுள்ளது. சிறீலங்கா இவ்வறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு அது எந்த ஆதார அடிப்படையும் அற்றது என்று ஐநா மீது பழிகூறி இருக்கிறது.

சிறீலங்கா அரசு சனநாயக விரோதமாக நடப்பது இன்று நேற்றல்ல. தமிழர் தேசத்தின் இன்றைய நிலையே சிறீலங்கா பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் இன்று அது மிகவும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் பாதிப்புக்களை சிங்கள மக்களும் உணராமல் இல்லை. அதற்கு சாட்சியாக சன்டே லீடர் என்ற சிங்கள தேச ஆங்கிலப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்க அண்மையில் கோத்தபாயவின் கூலிக் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டமை அமைந்திருக்கிறது.

இத்தனை சனநாயக விரோத செயல்களில் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு ஈடுபட்டு வரினும் அமெரிக்க மற்றும் சனநாயக சார்புள்ள அமைப்புக்களான ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் சிறீலங்கா மீது காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முன்மொழிந்ததும் இல்லை அவை குறித்து ஐநா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கக் கூட முன் வந்ததில்லை. ஆனால் வெறும் காகித அறிக்கைகளை விட்டு தாம் சனநாயகப் பற்றுள்ளோர், மனித உரிமைகள் மீது அக்கறையுள்ளோர் என்ற ஒரு போலித்தோற்றப்பாட்டை மட்டும் உலகுக்கும் உலக மக்களுக்கும் காட்டி வருகின்றன.

ஆனால் அதேவேளை சிறீலங்கா போன்று கடும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடாத ஆனால் மத்திம அளவில் ஈடுபட்டு வரும் சீனா, மியாண்மார், சூடான் மற்றும் சிம்பாபே அரசுகள் மீது ஐநாவும் அமெரிக்க சார்பு அரசுகளும் அமைப்புக்களும் கங்கணம் கட்டிக் கொண்டு சன நாய் அகம், மனித உரிமைகள் காப்பதில் முண்டியடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இஸ்ரேல், சிறீலங்கா போன்ற நாடுகள் மீது இவை எந்த காத்திரமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

இந்த நிலையில் தான் இந்த உலகில் சனநாயகம் பேசும் சக்திகளால் சிறீலங்காவும் அதன் சன நாய் அகமும் நன்கு வன்முறைத் தீனி போட்டு தமிழர்களின் குருதி ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. இது முழு உலகுக்குமே ஆபத்தானதாகும். ஜனநாயகப் பண்புகளை உண்மையில் மதிக்கும் உலக மக்களுக்கு இது மிகவும் அபாயகரமான செய்தியையே காவி வருகின்றது.

சிறீலங்காவில் உள்ள சன நாய் அகத்தில் ஜனநாயக பண்புகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை இவ்விணைப்பில் அழுத்திக் காணுங்கள். ( அவுஸ்திரேலிய SBS செய்திச் சேவைக்குச் சொந்தமானது)

கோத்தபாயவின் பத்திரிகையாளர் வித்தியாதரன் மீதான சீறல்கள்.


படங்கள்: யாழ் இணையம்,tamilnet.com

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:30 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க