Wednesday, April 28, 2010

புலிகள் மீதான இந்திய - அமெரிக்க பயங்கரவாதப் பூச்சாண்டி நாடு கடந்த தமிழீழ அரசையும் அச்சுறுத்துமா..!!



//2005 இல் சர்வதேசத்தின் மத்தியதியஸ்தோடு விடுதலைப்புலிகள் வகுத்திருந்த தமிழீழத்திற்கான தற்காலிக எல்லைக்கோடுகள்.//

உலகில் பல நாடுகள் ஆயுதப் போராட்டம் மூலமும் அதனோடு இணைந்த அரசியல் - இராஜதந்திர நகர்வுகள் ரீதியாகவும் மக்களின் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளன.

தென்னாபிரிக்காவில் இருந்து செச்னியா வரை உலகின் அணுகுமுறைகள் பல வகையில் வேறுபடுகின்றன. இன்றைய உலகில் அமெரிக்காவின் ஆயுத பலமே உலகின் போக்கை தீர்மானிக்கின்றன. அமெரிக்காவின் கண்களுக்கு தனக்கு சாதகமல்லாத அனைத்து வன்முறைகளும் பயங்கரவாதமாகும். அமெரிக்காவின் முத்திரையிடல்களை மற்றவர்கள் அச்சுப் பிசகாது பின்பற்றும் ஒரு மந்தையாட்டு இராஜதந்திரமே இன்று உலகில் நிலவுகிறது.

மனித உரிமைகள் கூட அமெரிக்காவின் ஆயுதப் பிரயோகத்தேவைகளுக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.

எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும்.. தமிழ் மக்களிற்கு இலங்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதை உலகம் அங்கீகரிக்கச் செய்திருக்கிறது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பிற இனங்களுக்கு சமனாக உரிமை பெற்று வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் உலகம் சொல்லச் செய்திருக்கிறது. இது எமது ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே சொல்லலாம். குறிப்பாக இதனை அமெரிக்க சார்பு உலகம் சொல்கிறது. ஆனால் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய விடயம்.. ஐக்கிய இலங்கை என்பதுதான்.

இந்த ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சம உரிமை பெறப்பட முடியாது என்பதையும் அதனை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும். அதைச் செய்யாமல்.. சம்பந்தனும்.. இதர ஒட்டுக்குழுக்களும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்திசைய கருத்துச் சொல்லி வருவது சர்வதேசத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களின் விருப்புக்கு அப்பால் மையம் கொண்டிருக்கவே வகை செய்யும்.

எமது ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி அதன் கட்டுக்கோப்பு, தலைமைத்துவம் கண்டு உலகம் அஞ்சியது. அது தனது கொள்கைகளுக்கு சவாலாகி வருவதை உணர்ந்து கொண்டது. அதனாலேயே அதனை பயங்கரவாதமாக்கி சர்வதேச ஆதரவைத் திரட்டி அடக்கிக் கொண்டது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமோ என்ற அச்சமும் இந்த உலகிடம் இன்னும் இருக்கிறது. அப்படி ஒன்று இருந்தே ஆக வேண்டும். இன்றேல் இந்த உலகம் எம்மை அடித்து உதைத்துப் பந்தாடுமே அன்றி எமக்கு உரிமை பெற்றுத்தராது.

நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டதாக இந்த உலகிற்கு காட்டிக் கொள்வதும் ஆபத்தானது. ஆயுதங்களை மெளனிக்க வைத்திருப்பது என்பதற்கும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. நாம் இன்றைய தருணத்தில் இந்த உலகிற்கு சொல்ல வேண்டியது.. நாம் ஆயுதங்களை மெளனிக்க வைத்துவிட்டு.. ஜனநாயக வழியில் எமது உரிமைகள் பெற விரும்பி நிற்கிறோம் என்பதையே. அத்தோடு எமது உரிமைகள் என்னென்ன அதனை அடைய நாம் விரும்பும் தீர்வுகள் என்ன அதற்கான நியாயங்கள் என்னென்ன என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர.. அதுவும் ஏகோபித்த குரலில் சொல்ல வேண்டுமே தவிர.. உலகம் பயங்கரவாதம் என்று அடையாளம் தந்துவிட்டது என்று அதனை ஏற்றுக் கொண்டு வாழாதிருப்பின் அமெரிக்காவின் மற்றும் பிராந்திய வல்லரசுகளின் எளிமையான அந்த குள்ளநரி இராஜதந்திரத்திற்கு நாம் பலியானதாகவே முடியும்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் பயங்கரவாதியாக முத்திரையிடப்பட்ட நெல்சன் மண்டேலாவிற்குத்தான் நோபல் பரிசும் அளித்து வெள்ளைமாளிகையில் விருந்தும் அளித்து லண்டனில் வெண்கலச் சிலையும் வைத்துள்ளனர்.

வெள்ளையனே வெளியேறு என்று பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடிய காந்தியை விரட்டி அடித்த பிரிட்டிஷ்காரர்கள் தான் இன்று பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் தோறும் காந்தி சிலையை நிறுவி அழகு பார்க்கிறார்கள்.

பயங்கரவாதம் என்ற உலகின் கணிப்பை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதுவும் இன்று எமது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பயம் எம்மவருக்கு அவசியமில்லை. இன்றைய தேவை இந்த உலகை நோக்கி எமது கோரிக்கைகளின் நியாயத்தையும் அதன் பின்னால் அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டுள்ளனர் என்பதைச் சொல்வதுமே ஆகும். அதற்கு நாடு கடந்த அரசு என்ற புதிய அணுகுமுறையை ஒரு பரீட்சார்த்த அம்சமாக கொண்டு செல்ல முயல்வது அவசியமும் கூட. நாம் எமது போராட்டத்தில் ஆயுதங்களை மெளனிக்க வேண்டிய நிலைக்கு உலகின் போக்கு மாறி இருக்கும் நிலையில் பிறிதொரு strategy யின் கீழ் தான் எமது உரிமையை நாம் விரும்பும் வடிவில் வெல்ல நகர்த்திச் செல்ல வேண்டும். உலகம் தனது strategy ஐ மாற்றும் போது நாமும் அதற்கு ஏற்ப எமது strategy ஐ மாற்றாவிட்டால் எம்மால் எமது நீண்ட கால இலக்கை வெற்றி கொள்ள முடியாது போகும்.

மற்றும்படி இந்தப் பயங்கரவாத பூச்சாண்டிக்கு எனி நாம் பயப்பிட எம்மிடம் எதுவும் இல்லை. இருப்பது எமது உரிமைக்கான தேவை ஒன்றே. அதனை இந்த உலகம் அங்கீகரிக்கும் வடிவில் நின்று முன்வைத்துப் பார்க்கும் அதேவேளை இந்த உலகம் எம்மை ஏமாற்றாமல் இருக்க இந்த உலகிடம் எமக்கு மீண்டும் ஆயுதம் தூக்கவும் வழி தெரியும் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதனை நிராகரிக்கவே கூடாது. நாம் முற்றாக பலவீனமானவர்களாக ஆக்கப்பட்டால் எமது நியாயமான கோரிக்கைகளையும் இந்த உலகம் புறக்கணித்து தனது கொள்கை வெற்றியையே முதன்மைப்படுத்திப் பார்க்க விளையும்.

அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொள்கை அளவில் தோற்று நிற்கிறது. ஆனால் அதற்கு ஒரு ஆறுதலாக இலங்கை மாறி வரும் நிலையில்.. அது அதனை தனது கொள்கை வெற்றியாக்கிக் காட்டவே முனையும். பஞ்சாப்பில் சீக்கியர்களின் போராட்டத்தை அடக்கி கொள்கை வெற்றிகண்ட அதேவகையில் தான் இந்தியா எம்மையும் அடக்கிக் காட்ட முனைகிறது. நாம் இந்தக் கொள்கை வெற்றிகளுக்கு இடமளிப்போமாக இருந்தால் அது எமது அடிப்படை உரிமைகளையே ஆளும் வல்லாதிக்க.. பிராந்திய.. பேரினவாத சக்திகள் நிராகரித்து நிற்கவே வகை செய்யும்.

நாம்.. எந்த வடிவிலும் போராட்டத்தில் இருந்து ஓயக்கூடாது. அதேவேளை உலகின் கொள்கை வெற்றி இறுமாப்பை தகர்க்கக் கூடியதும்.. எமது உரிமைகளை உலகிற்கு சொல்லக் கூடியதுமான strategy யை வகுத்து அதன் படி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் புதிய strategy இன் ஆரம்ப செயல்வடிவம் என்று கொள்ளலாம் என்றே நினைக்கிறோம். அதற்குள் உலகின் பயங்கரவாத பூச்சாண்டியை காட்டி பயங்காட்டுவதை நிறுத்தி எல்லா தமிழ் மக்களும் ஒருமித்து இயங்கும் குரல்கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும். அதுவே அவசியம்.

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தோடு இருப்பின்... அது எம்மை இந்த உலகம் பலவீனப்படுத்தி.. பிரித்தாண்டு.. எமது உரிமைக்குரலை வெற்றிகரமாக அடக்கி அதை தமது கொள்கை வெற்றியாகக் காட்டி இறுமாந்து நிற்கவே வகை செய்யும்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:18 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க