Saturday, August 14, 2010

வெள்ளைப் பயங்கரவாதி.



இன்றைக்கு ஒரு கை பார்க்கிறது தான்... என்று காலையில் நித்திரையால எழும்பினது முதலே ஏதேதோ எண்ண அலைகள் எழுந்து என்னுள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சரி அது இப்போதைக்கு கிடக்கட்டும்.. என்று ரீவியை ஆன் செய்து மனதின் எண்ண ஓட்டத்தை கஸ்ரப்பட்டு மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தேன்.

ஆப்கான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் கிராமத்தில் அமெரிக்க றோன் (ஆளில்லா விமானம்) நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி என்று பிபிசி மணத்தியாலத்துக்கு ஒரு தடவை முக்கிக் கொண்டிருந்தது.

இவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஒருக்கா சொல்லுவாங்கள்.. பயங்கரவாதிகள் பலி என்று. பிறகு இரண்டு நாள் கழிச்சு.. சொல்லுவாங்கள் சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் பலி என்று. பிறகு சொல்லுவாங்கள்.. தவறுதலாக நடந்த அந்த தாக்குதலிற்கு அமெரிக்க படை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றனர் என்று. இவங்கள் இப்படியே தவறு விட்டு விட்டு மன்னிப்புக் கேட்டுக் கேட்டே அரைவாசி ஆப்கானிஸ்தானையும் பாலைவனமாக்கிட்டுத்தான் வெளிக்கிடுவாங்கள் போலக் கிடக்கு.. என்று என் மனசு தனக்குள் பேசிக் கறுவிக் கொண்டது.

மவனே போன கிழமை தானே வெட்டிப் போட்டன்.. இந்த வெள்ளைப் பயங்கரவாதியை...! ஒருத்தனை வெட்டினா... ஆயிரமா முளைப்பாங்க இந்தப் பயங்கரவாதிகள் என்று சொல்லுறவை.. உண்மையா இருக்குமோ..!

கண்ணாடித் திரையில் விழுந்ததை உற்றுப் பார்த்துக் கொண்டே தேடுதல் வேட்டையை தொடங்கினேன். ஒரு வெள்ளைப் பயங்கரவாதியையும் இந்தக் கறுப்புக் காட்டுக்குள்ள இருக்க அனுமதிக்க கூடாது. உவங்கள் இருந்தால் அது எங்களுக்கு அவமானம். எனி ஒருத்தனையும் விடக் கூடாது. ஒருத்தனும் இல்லாமல் வேரோட புடுங்கி எறிய வேணும்.. என்ற முடிவோடு. என்னாலான முயற்சிகளை எடுக்கலானேன். ஆனால் அவை வெற்றி பெறுவதாக தெரியவில்லை. சலிப்பே மிஞ்சியது.

எங்கட புலிகளைக் கூட வெள்ளைக்காரன் பயங்கரவாதிகள் லிஸ்டில போட்டு படம் காட்டிறான். ஏதோ வெள்ளை என்றால் இந்த உலகை ஆட்டிப் படைக்கிற.. ஆளும் தரப்பு.. எல்லா நியாயமும் அவைக்குத் தான் தெரியும் என்ற கணக்கு. மற்றவை அவைக்கு அடி பணியும் தரப்பு.. இவை சொல்லுறதை கேட்டு நடக்கிற மக்குக் கூட்டங்கள்..! இன்றைக்கு படிப்பிக்கிறண்டா.. இந்த வெள்ளை பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம்.

உந்த வெள்ளைப் பயங்கரவாதிகளை எனியும் விடக் கூடாது. கூண்டோடு அழிக்க வேணும். விட்டு வைச்சு வேடிக்கை பார்த்த்தால் ஆபத்துத் தான்.... பெருகிக் கொண்டே போய் எல்லா இடமும் ஆக்கிரமிச்சிடுவாங்கள் போலக் கிடக்கு. ஆகக் கூடிப் போனா.. கெமில் வெப்பன் பாவித்தாவது அழிக்கிறது தான்.. என்ற முடிவோடு.. வெள்ளைப் பயங்கரவாதிகளை அழிக்க.. அண்டை அயல் எல்லாம் உதவி கேட்டுப் பார்த்தேன்.

அங்கும் தோல்வியே முஞ்சியது. எனிச் சரி வராது.. என்று இறுதி முடிவுக்கு வந்த நான்.. வெள்ளைப் பயங்கரவாதிகள் மீது கெமிக்கல் ஆயுதங்களைப் பிரயோகிக்க தயாரானேன். என்ன கெமிக்கலை அடிப்பம்.. என்று யோசித்த நான்.. கொஞ்சம் கலர் கலரா வாற மாதிரி அடிப்பம்.. என்ற முடிவோடு.. வெள்ளை முடி இருந்த இடங்களெல்லாம் டை தடவி விட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் காத்திருந்தேன்.

என்னங்க.. இப்ப வெள்ளை முடியள் தெரியுதாண்டு ஒருக்கா வந்து பாருங்கப்பா.. இந்த வெள்ளைக்காரங்கட குளிர் நாட்டுக்கு வந்து சுடு தண்ணில முழுகிறதோ இல்ல சம்பூ கெமிக்கலோ.. கெண்டிசனரோ தெரியல்ல.. வயசு போக முதலே முடியெல்லாம் நரைச்சிடுது. இது பெரிய தொல்லையா வேற கிடக்கு நமக்கு. ஊரில உந்தச் சிங்களத்திகள்.. ஆத்துத் தண்ணில குளிச்சுக் குளிச்சு.. கூந்தல் எல்லாம் கண்ணங் கரேல் என்றிருக்கு. எங்களுக்கு பொம்பிளையளுக்கே.. முன் பக்கத்தால மொட்டையும் விழுந்து.. மயிரும் நரைச்சிட்டுது.
எங்கையப்பா நிக்கிறியள்.. மணித்தியாலக் கணக்கா.. கூப்பிடுறன் எல்லே... இவள் பிள்ளையின்ர.. பேரன்ஸ் மீற்றிங்குக்குப் போகனுமெல்லே. ஞாபகம் இருக்கோ. நான் இந்த வெள்ளை மயிரோட மாரடிக்கிறன். நீங்கள் என்னப்பா செய்யுறியள்.

இந்தா வந்திட்டனப்பா. நல்லா இருக்குதப்பா.. உம்மட தலை. ஒரே செம்பட்டையா அடிச்சிருக்கிறீர். உந்தக் கொழும்பில கண்டில... வெள்ளைக்கார நாடோடிகள் வந்து றோட்டில கிடக்குங்கள். அதுகளின்ர தலை மாதிரி இருக்கப்பா உம்மட தலை.

சும்மா கிடவுங்கோப்பா.. இண்டைக்கு ஒரு நாளைக்கு இந்தப் பேரன்ஸ் மீற்றிங் முடியும் வரைக்கும் தானே அப்பா. அங்க வெள்ளைக்கார ரீச்சர்மார் நாங்கள் உந்த வெள்ளை மயிரோட போனா.. என்ன நினைப்பினம். அவளைவ வாற ஸ்ரைலுக்கு நாங்களும் அப்படி இப்படி போனா தானே எங்கட பிள்ளையளை வகுப்பில மதிப்பாளவ.

ம்ம்.. நீர் சொல்லுறதும் சரிதான். அதுக்காக.. இந்தக் கலரிலையே அடிக்கிறது.

சும்மா கிடவுங்கோப்பா. அப்படியாவது கிடந்தால் தான் ஒரு மொடென் ஆள் என்று மதிப்பு இருக்கும். இல்ல.. சுஜிட அம்மான்ர தலைல கிரே மயிர் என்று என்ர பிள்ளைய அவளின்ர boy பிரண்ட்ஸ் பகிடி பண்ணுவினம். அது அவளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் சொல்லுங்கோ.

உண்மை தாண்டியப்பா. சரி அப்படியே கண்ணாடியோட ஒட்டிக் கொண்டு கிடக்காமல்.. கெதியா முழுகிட்டு.. போய் வெளிக்கிடு... நேரமாகுது.

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:49 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க