Tuesday, April 03, 2012

டைகர் (Tiger)

Posted Image

அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..!

அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்..

திறந்து பார்... அப்பா கட்டளையிட..

ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல.....

விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்டார்.

பெட்டிக்குள் எட்டிப்பார்த்த எனக்கு.. ரெம்ப ஆச்சரியம்... அதுக்குள்ள ஒரு கியூட் பப்பி..! எப்படிப்பா.. இதைக் கொண்டு வந்தீங்க.. பெட்டியை திறந்ததும்.. அதுவும்.. பெட்டியை விட்டு துள்ளிப் பாய்ந்து வெளிய வர துடித்தது. நான் பெட்டியை சரிச்சு விட்டதும்.. அது வெளியே வந்து..சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. உடம்பை நீட்டி.. முறிவெடுத்தெட்டு.. ஏதோ ரெம்பப் பழகிய இடம்போல.. ஓடித் திரிந்திட்டு.. சுச்சா போயிட்டு.. என்னோட விளையாட ஆரம்பிச்சுது.

நானும்.. பதிலுக்கு அதுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன்.. அதன் துடிப்பான விளையாட்டில்.. அதன் களைப்பு.. தெரிந்தது.

அதுக்கு கொஞ்சம் தண்ணி வை. வாற வழியில.. பிஸ்கட்டும் தண்ணியும் கொடுத்தனான் தான்.. இருந்தாலும்... இந்த வெக்கைக்கு.. களைச்சுப் போயிருக்கும்.... அப்பா கூறி முடிப்பதற்குள்ளேயே..

தண்ணியோடு வந்து நின்றன்.

அதுவும் தண்ணியை நக்கி குடிச்சிட்டு.. புது தெம்பு வந்தவராக.. ஓடி.. தூரம் போய்.. மறுபடி ஓடி வந்து என் பாதம் தொட்டு.. திரும்ப ஓடி.. தூரம் போய்.. இப்படி திரும்ப திரும்ப செய்து.. தன் மகிழ்ச்சியை இனங்காட்டிக் கொண்டிருந்தது.

இடையில ஏதோ ஒரு சிந்தனை எழ.. அப்பா.. எனி.. இது அதுன்ர தாயட்ட எப்படிப் போகும்..??!

அதுக்கு அவர்... அது அதின்ர தாய் நாயை விட்டு கன நாளைக்கு முன்னமே பிரிஞ்சிட்டுது. அது இப்ப தானே சாப்பிடும்... பால் வைச்சா குடிக்கும்.. நீ.. அதுக்காக கவலைப்படாத...

குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. போய் கை கால் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடடா. ஸ்கூல் தொடங்கப் போகுது... அவனுக்கு நாய்க்குட்டி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தா.. அவன் எப்படிப் படிப்பான். ஏற்கனவே கோழிக்குஞ்சு.. கன்றுக்குட்டி.. ஆட்டுக்குட்டி என்று தூக்கிக் கொஞ்சிக்கிட்டு திரியுறான்..! புத்தகம் கையில எடுக்கிறான் இல்ல. அதுபோக.. போளும் கிரிக்கெட் பற்றும் தான்...
அப்பா இல்லாத நேரம்.. நான் செய்த குழப்படிகள் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சேர்த்து.. அம்மா முறையா பத்த வைச்சுக் கொண்டிருந்தா.

அப்பா.. நான்.. இந்த முறை முதலாம் பிள்ளை. கூட்டுத்தொகை 710 எட்டுப் பாடங்களுக்கு. இப்ப லீவு தானேப்பா.. இப்ப விளையாடாமல் எப்ப விளையாடுறது.. நான் பதிலுக்கு எந்தரப்பு நியாயத்தை முன் வைக்க..

அப்பா இடையில்... துணைவிக்கும்.. மகனுக்கும் இடையில்.. மாட்டிக் கொண்டாலும்.... சாதுரியமா என்னைக் கூப்பிட்டு அணைத்தபடி.. பதில் அளித்தார். அவன் முதலாம் பிள்ளையா வந்திருக்கிறான் தானே.. விளையாடுற வயசில விளையாடத்தானே வேணும். அதுக்காக ஒரே விளையாட்டா இருக்கப்படாது.. லீவு தாறது.. அடுத்த தவணைக்கு தயார்ப்படுத்திறத்துக்கும் தான். ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் படிக்கனும்.. சரியே..!

ஓம்.. அப்பா... அப்பாவின் கன்னங்களில்.. முத்தம் தந்துவிட்டு.. அவரின் அன்பின் பிணைப்பில் இருந்து வெளிவந்த நான்.. மீண்டும் நாய்க்குட்டியோடு..

அழகான பிறவுண் கலர் நாய்க்குட்டி. வாலின் நுனியிலும்.. கால் பாதங்களிலும்.. கழுத்தின் கீழும் வெள்ளை நிறம். காதின் நுனியில்.. கறுப்பு. எனக்கு ரெம்பவே அதைப் பிடிச்சிருந்தது. அப்பா அப்பா.. இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்....

நீயே ஒன்றைச் சொல்லன் பார்ப்பம்..

ஜிம்மி....

அது இங்க எல்லா இடமும் வைக்கிற பெயர் தானே. அது வேண்டாம்... வேற...

நீங்களே சொல்லுங்கப்பா...

டைகர்.. என்று வை...!

அப்ப எல்லாம் டைகர் (Tiger) என்று சொல்லுறதே பெருமைக்குரிய விசயமாக இருந்திச்சு. ஏன்னா விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பும்.. அவங்க மக்களோட பழகிற முறையில் இருந்த டிசிப்பிளினும் தான். நாங்க அங்க இருக்கும் வரை.. கடைசி வரை.. அவங்க அந்தப் பெயரை காத்திருந்தாங்க.. பல அவதூறுகளும்.. திட்டமிட்ட பழிப்புக்களுக்கும்.. பழி சுமத்தல்களுக்கும் மத்தியில..!

என் ரைகரும்.. வளர்ந்து 6 மாதம் இருக்கும்.. வீதியைக் கடக்க முயலேக்க.. ஒரு தனியார் பஸ் அடிச்சு இறந்திட்டுது..! மிகவும் கவலையாக கழிந்தன சில நாட்கள். அடிச்ச அந்த பஸ்ஸைக் காணும் போதெல்லாம்.. எமன் வருகுது என்று தான் அழைப்பேன்.

இறந்து போன டைகரை..எலும்மிச்சைக்க புதைக்கனும் என்று அம்மம்மா சொன்னாங்க.. நான் விடாமல்.. அதுக்கென்று ஞாபகம் வைக்கக் கூடிய ஒரு இடத்தில் புதைக்கச் சொன்னன்..

இறுதில... அப்பா என்ர விருப்பத்திற்கு.. புதைச்சு.. அந்த இடத்தில நாய் உருவம் பொதிச்ச கல்லும் வைச்சவர்.

அப்புறம்.. நாங்க இருந்த வீட்டையும்.... சிங்கள ஆக்கிரமிப்பில.. ஆமிக்காரங்கள்.. தங்கட தற்காலிக மினி முகாமிற்கு பாதுக்காப்பு வேணும் என்று.... 1995 இல் குண்டு வைச்சு தகர்த்திட்டாங்க. அதில சில வீடுகள் காட்டிக் கொடுக்கப்பட்டு தெரிஞ்சு உடைக்கப்பட்டிருந்தன. அப்படி உடைச்ச வீடுகளின் உடைஞ்ச கல்லுகளைக் கூட.. விற்று காசாக்கிட்டாங்க.. ஈபிடிபி ஆட்கள்..! என் ரைகருக்கு வைச்ச கல்லும்.. அதில விற்கப்பட்டிருக்குமோ.. என்னமோ..???! ஆனால் அம்மம்மா வைச்ச எலுமிச்சை மட்டும் இப்பவும்.. ஆக்கிரமிப்புக்கள்.. காட்டிக்கொடுப்புகள்.. குண்டுகள்.. கொள்ளையடிப்புக்களை எல்லாம் தாங்கி நிற்குதாம்..! அது இப்பவும் டைகரை நினைவு கூற வைக்குது..!

(இது ஒரு உண்மையின் தளவாடி விம்பம்..!)

நன்றி: யாழில் நெடுக்காலபோவான். 

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:10 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க