Thursday, May 10, 2012

அம்மாளாச்சியும் யேசுவும்.. லண்டனும் டென்மார்க்கும்..!

Posted Image

அம்மாளாச்சி.. என்ர மகளுக்கு கெதியா விசா கிடைக்கச் செய்..! அவளுக்கு இப்ப கலியாணப் பலனாம்.. நல்ல மாப்பிள்ளை கிடைக்கச் செய் தாயே. அப்படி செய்திட்டி எண்டா.. உனக்கு வடை மாலையும் சாத்தி, அடுத்த முறை அவள் டென்மார்க்கில இருந்து காசனுப்பினா தங்கத்தில ஒரு பொட்டும் செய்து தாறன். என்ர அம்மாளாச்சியெல்லே..!

ஒரு முறை விழுந்து கும்பிடுற தெய்வத்தை.. வாசலுக்கு வாசல் விழுந்து கும்பிட்டுக் கொண்டு.. மீனாட்சியம்மா.. தன்ர குடும்பக் கடவுளான அம்மாளாச்சியிடம் வைச்ச வேண்டுதலை கோவிலில் இருந்து வீதி வரைக்கும் உச்சரிச்சுக் கொண்டே.. வீட்டை நோக்கி நடக்கலானா..!

வீட்ட போனவா.. கேற்றடியில கிடந்த லெற்றரை எடுத்து.. விலாசத்தைப் பார்த்தா. மகள் டென்மார்க்கில இருந்து எழுதி இருந்ததால.. பெரிய எதிர்ப்பார்ப்போடே.. அம்மாளாச்சி.. தாயே.. இப்ப தான் உன்னக் கும்பிட்டிட்டு வந்தன். கையோடவே கடிதமும் வந்து கிடக்குது. என்ர பிள்ளைக்கு எல்லாம் சரியா அமைய வேணும்.. என்று வாய்க்குள்ள முணு முணுத்தபடி கடிதத்தைப் பிரிச்சுப் படிச்சா.

அதில..

அன்புள்ள அம்மா மற்றும் சகோதரிகளுக்கு..

நான் நலம். நீங்கள் நலமே இருக்க.. அம்மாளாச்சியை வேண்டுகிறேன்.

எனக்கு டென்மார்க்கில இருக்க விசா தந்திட்டாங்கள். எனி நான் வேணும் எண்டால் இலங்கைக்கு வந்து உங்களை எல்லாம் பார்க்க முடியும். எனவே எனிக் கவலைப்படாதேங்கோ.

தங்கச்சிட ஏ எல் ரிசல்ட் சரியில்லை என்ற கடிதம் படிச்சன். அவளைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கோ. முடிஞ்சா.. இலங்கையில இருந்து மிணக்கடுறதை விட்டிட்டு.. ரஷ்சியா பக்கம் போய் மெடிசின் படிக்கச் சொல்லுங்கோ. காசு உதவி செய்யுறன்.

வேற என்ன அம்மா. உங்களுக்கு இப்ப காலுளைவு எப்படி. எனக்கும் இங்க குளிருக்க கை மூட்டுகளில சின்னச் சின்ன நோ. நான் அதைச் சாமாளிச்சிடுவன். நீங்கள் யோசிக்காதேங்கோ.

வேற.. என்ன.. ஒன்று உங்களட்ட சொல்ல வேணும் அம்மா. எங்கட கதிரேசன் மாமாட மகனைக் கண்டனான். அவருக்கு ஒரு பிரண்டாம். நல்ல ஆளாம். எங்கட ஊர் தானாம். இப்ப இங்க டென்மார்க்கில தானாம் இருக்கிறார்.சம்பந்தம் பேசட்டோ என்று கேட்டார். நான் அம்மாட்ட எழுதிக் கேட்டிட்டு சொல்லுறன் என்று சொல்லி இருக்கிறன். அவர் என்னை இங்க எங்கையோ கண்டவராம். பிடிச்சிருக்கென்று சொன்னவராம். ஒரு நாள் கதிரேசன் மாமாட மகனோட இங்க வந்தவர். ஆள் பறுவாயில்லை. எங்களுக்கும் தூரத்துச் சொந்தமாம். எனி உங்கட விருப்பம்.

வேற என்ன. இன்னும் இந்த மாதச் சம்பளம் வரேல்ல. வந்த உடன கொஞ்சக் காசு அனுப்பி விடுறன்.

சரி அம்மா. எல்லாரட்டையும் சுகம் கேட்டதாச் சொல்லுங்கோ... (அப்பாவிடமும்)

விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்த்து முடிக்கிறன்.

பிற்குறிப்பு: ஊருக்குப் போன் அடிக்க கனக்க காசு செலவாகுது. அதுதான் கடிதம் போடுறன். நீங்களும் கடிதம் போடுங்கோ.

அன்பு மகள்
ரோகினி.

கடிதத்தை மூச்சு விடாமல் படிச்சு முடிச்ச மீனாட்சியம்மா.. பெருமூச்செறிந்து கொண்டு.. கடவுளே.. என் பிள்ளைக்கு விசா கொடுத்திட்டா. எனி என்ர குடும்பம் நிமிர்ந்திடும். ஐந்து பெட்டையளப் பெத்திட்டு நான் இந்த சரியான உழைப்புப் பிழைப்பு இல்லாத ஒரு சொல்வழியும் கேளாத.. குடும்பத்தைப் பற்றிய ஒரு சொட்டுக் கவலையே இல்லாத மனிசனையும் வைச்சுக் கொண்டு பட்ட பாட்டுக்கு.. என்ர பிள்ளை ஒரு விடிவை தந்திடுவாள்.

அதுசரி.. உவன் கதிரேசன்ர பெடிக்கு ஏன் உந்தத் தேவையில்லாத வேலை. அவங்கள் ஆர் ஆக்களோ தெரியாது. என்ர பிள்ளையைக் கொண்டு போய் எங்கையன் கவுத்துவிடப் போறானே. எதுக்கும் மகளோட ஒருக்கா போன் கதைச்சிட்டு வருவம்... என்று யோசிச்ச மீனாட்சியம்மா..

ஓட்டமும் நடையுமா.. கட்டின சீலையோட.. வீட்டுக்கு அருகில் இருந்த சந்திக் கடையில போன் கதைக்கப் போனா. போன வேகத்திலேயே.. தம்பி ஒரு பொ(f)ரின் கோல் எடுக்கிறன் என்றிட்டு.. அவசர அவசரமா நம்பரை டயல் செய்து.... ரிசிவரை தூக்கி காதில வைச்சுக் கொண்டு கன நேரம் ரிங் போக..பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தா.

"கலோ.. கலோ.. யார் பேசுறீங்க. இது நான் ரமேஷ் பேசுறன்..." எண்ட புதுக் குரலைக் கேட்டு.. அதிர்ச்சி அடைந்தாலும்.. தன்னை சுதாகரித்துக் கொண்ட மீனாட்சியம்மா..

கலோ... தம்பி..... நீங்கள் யார். உங்க ரோகினி நிக்குதோ.. நான் ரோகினிட அம்மா கதைக்கிறன்.

ஓம்.. ரோகினி.. நிற்கிறா. கிச்சனில. கூப்பிடட்டோ மாமி.

என்ன.. மாமியோ.. நீங்கள் யார் தம்பி.....??

ரோகினி சொல்லேல்லையா.. மாமி. எனக்கும் ரோகினிக்கும் போன கிழமை இங்க சேர்ச்சில கலியாணம் நடந்தது. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தான் செய்திருக்கிறம்.

என்ன கலியாணமோ... என்று கேட்ட மீனாட்சியம்மா.... வாயடைச்சுப் போய்.. கோபத்தில்.. ரிசிவரைத் தூக்கி போனில அடிச்சு வைச்சிட்டு.. போனைக் கட் பண்ணிட்டு.. எவ்வளவு தம்பி.. ஆச்சுது.. என்று கடைக்கார முதலாளியிடம் 100 ரூபா தாளை கையில் நடுக்கத்தோட நீட்டிட்டு.. அவசர அவசரமாக மிச்சத்தையும் வாங்கிக் கொண்டு... ஓட்டமும் நடையுமாக போன வேகத்திலேயே மீண்டும் வீட்டை நோக்கி நடந்தா.

அட அதுக்குள்ள.. இவள் பெட்டை அவசரப்பட்டிட்டாளே. அவன் சேர்ச்சில கலியாணம் என்றான். ஒருவேளை கிறிஸ்ரியனோ..! என்ன கோதாரியோ.. என்று பல எண்ணங்கள் மூளை எங்கும் கட்டுக்கடங்காமல் சிதறி ஓட.. தீராத கவலை வேற பொங்க.. வீட்டுக்குள் வந்தவா.. வீட்டு போன் அடிக்க.. ஓடிப் போய் தூக்கினா...!

அம்மா.. இது நான் ரோகினி.. மன்னிச்சுக் கொள்ளுங்கம்மா. உங்களுக்கு எல்லாம் சொல்லிட்டு செய்யக் கூடிய நிலையில என்ர கலியாணம் இருக்கல்லையம்மா. நானும் அவரும்.. யேசு சீவிக்கிறார்.. பிரார்த்தனை செய்யுற இடத்தில.. சந்திச்சு.. ஒருத்தரை ஒருத்தர் விரும்பி செய்திட்டம் அம்மா. கதிரேசன் மாமாட மகன் சொன்ன அதே ஆள் தான் இவர்.

ஏன் பிள்ள இப்படிச் செய்தனி. எங்களை எல்லாம் ஒரு வார்த்தை கேட்டியே. எதுக்கு இப்ப போன் எடுக்கிறா. ஏதோ.. செய்திட்டா.. வாழ்ந்து தொலை. எனி எங்களோட கதைக்காத. நாங்கள் எனி ஒன்றுக்கும் உன்னட்ட வரமாட்டம்... என்று மன தைரியத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டு.. சொல்லிப் போட்டு ரிசிவரை அடிச்சு வைத்தா மீனாட்சியம்மா.. கண்களில் கண்ணீர் பெருகி வழிய..!

மீண்டும்.. 10 ஆண்டுகள் கழித்து...

வீட்டில் இருந்த மிகுதி 4 பொம்பிளப் பிள்ளைகளில் இருவர் அகதிகள் என்று சொல்லி.. வெளிநாட்டுக்குப் போய் செற்றிலாகி விட்ட நிலையில்.. கொடும் நோய்க்கு.. கணவனை இழந்திருந்தா மீனாட்சியம்மா.

போன் அடிக்க.. போன் லண்டனில மகளட்ட இருந்து வருகுதென்று நினைச்சுக் கொண்டு போனைத் தூக்கினா. ஆனால் போன்.. டென்மார்க்கில் இருந்த மகளிடம் இருந்து வந்திருந்தது.

அம்மா.. நான் ரோகினி.. கதைக்கிறன். என்னோட கோவிக்காதேங்கோம்மா. நான் சொல்லுறதை தயவுசெய்து கேளுங்கோம்மா. அம்மம்மாவைப் பார்க்க இஞ்ச என்ர பிள்ளையள் ஆசைப்படுகுதுகள். விசா எடுத்துத் தாறன்.. ஒருக்கா வந்திட்டு போங்களன்.

ஆரம்பத்தில் டென்மார்க் மகளின் போன் என்றதும்.. ஆத்திரமும் கோபமும் மீனாட்சியம்மாவை ஆட்கொண்டிருந்தாலும்.. அதை அடக்கிக் கொண்டு.. பொறுமை காத்த அவா.... மகளின் கெஞ்சலில்.. நீண்ட நாட்களின் பின் கேட்ட அவரின் குரலில் கலந்திருந்த ஏக்கத்தைப் புரிந்து கொண்டவராக சொன்னா.. "ஏதோ செய் பிள்ள.. . எனக்கு அங்க வருறது விருப்பமில்ல. இருந்தாலும்.. அந்தப் பிள்ளைகளுக்காக வாறன்."

அன்று தொடங்கிய உறவாடல்.. மீனாட்சியம்மா.. டென்மார்க் வந்து அப்படியே களவா லண்டனுக்குள்ள நுழைஞ்சு செற்றிலாகும் வரை தொடர்ந்தது.

இன்று... ரோகினியின் மகளும் வளர்ந்து 19 வயது அழகு வாளைக் குமரி ஆகியும் விட்டா.

மீண்டும் போன் கோல்... அம்மா.. இது நான் ரோகினி கதைக்கிறன். மகளுக்கு கலியாணம் பி(f)க்ஸ் பண்ணிட்டம். அவளுக்கு இங்க யுனிவேர்சிட்டியில மெடிசின் கிடைக்கல்ல. அதனால வேற நாட்டுக்குப் போய் படிக்க இருக்கிறா. அங்க அவளைத் தனிய விட ஏலாது. அதனால.. அந்த ஊரிலையே யுனிவேர்சிட்டியில படிக்கிற எங்கட யேசு சீவிக்கிறார்.. அமைப்பில உள்ள பொடியனை பார்த்து கட்டி வைக்க முடிவு செய்திட்டம். அவரும் அங்க தான் யுனிவேர்சிட்டியில படிக்கிறார். இன்னும் வேலைக்குப் போகத் தொடங்கல்ல. நீங்கள் விரும்புறீங்களோ இல்லையோ.. நான் முடிவு செய்திட்டன் அம்மா. அவளுக்கும் நல்ல விருப்பம். நான் ஒரு நாள் மகளுக்கு யுனிவேர்சிட்டி கிடைக்கல்ல என்ற வருத்தத்தில படுத்திருக்க.. கனவில கடவுள் வந்து சொன்னவர்.. இந்த வீட்டுப் பொடியனைத் தான் செய்ய வேணும். அப்பதான் அவளின் வாழ்க்கையும் படிப்பும்.. நல்லா இருக்கும் என்று. நான் என்ர கடவுளை நம்பிறனான். அதன்படி தான் நடப்பன்.... என்று மீனாட்சியம்மா மறுபேசுப் பேச இடமளிக்காமல் சொல்லி முடித்தார் மகள்.

ஏதோ பிள்ள.. உன்ர கலியாணம் போலவே இதிலும் திடீர் என்று முடிவெடுக்கிறா. எதுக்கு அவளுக்கு இவ்வளவு கெதியா கலியாணம் செய்யுறீங்களோ தெரியல்ல. அவளுக்கு படிக்கிற வயசு. அதுவும் இல்லாமல் அந்தப் பொடியனும் படிக்குது. வேலைக்கும் போறதில்ல. இந்த நிலையில ஏன் இவ்வளவு அவசரம்..! மற்றும்படி உங்கட விருப்பத்திற்கு நான் தடையா இருக்க விரும்பல்ல. ஆனால்.. நான் நீங்கள் கூப்பிட்டாலும்.. உந்தக் கலியாணத்துக்கு வரமாட்டன்.

நீங்கள் வராட்டி விடுங்கோம்மா. அது பறுவாயில்ல. நான் யேசு கனவில சொன்னபடி தான் செய்வன். நீங்கள் விரும்பினா வாங்கோ. இல்லாட்டி விடுங்கோ. நாங்கள் முடிவு செய்திட்டம் அம்மா. என்ர மருமகன் வேலைக்குப் போகாட்டிலும்.. அதுகள் இஞ்ச பிறந்த பிள்ளையள்.. அரசாங்க உதவி எடுத்து என்றாலும் வாழுங்கள். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லையம்மா. அப்ப நான் வைக்கிறன்.. போனை.

சரி பிள்ள. ஏதோ செய்.. என்று ரிசிவரை போனில வைச்சிட்டு.. மீனாட்சியம்மா மீண்டும்.. பெருமூச்செறிந்தார்..! அம்மாளாச்சி.. நீ தான் அந்தப் பிள்ளைக்கு அருள செய்ய வேணும். என்ர பேத்தி எங்கையாவது போய் நல்லா இருந்தாச் சரி..! ஆனால் எனக்கு உந்தப் பிள்ளையளின்ர நடத்தையே பிடிக்கல்ல. ஏதோ சீவன் போற நேரத்தில கூட உதுகளை எல்லாம் கேட்க வேணும் எண்ட விதி எனக்கு. அந்த மனிசன் ஒரு கரைச்சலும் இல்லாமல் போய் சேர்ந்திட்டுது. எல்லாம் என்ர தலைவிதி.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டவர்.. போய் படுக்கையில் சற்று ஆறுதலுக்காக படுத்தார். லண்டனில் இப்ப வெதரும் சரியில்ல.. என்ர நேரமும் சரியில்ல என்று நினைத்தபடி..!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:09 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க