Wednesday, July 18, 2012

ஈழத்தீவில் மீண்டும் ஆயுதப் போராட்டம் சாத்தியமா..??! - ஒரு கண்ணோட்டம்


2009 மே யில் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை போராட்டம் எனியும் ஆயுதப் போராட்டமாக நீளக் கூடாது என்ற முடிவில் இருந்திருக்கக் கூடும். ஏலவே இது பற்றி புலிகள் சொல்லிக் கொண்டு தான் இருந்தவர்கள். எனி வரப்போவது தோற்றாலும் வென்றாலும் இறுதி யுத்தமே என்று.

35 வருட போராட்டமும்.. மக்கள் அவலமும்.. சாரை சாரையான வெளிநாட்டு இடம்பெயர்வுகளும்.. போராட்டக் களத்தைப் பலவீனமாக்கிக் கொண்டிருப்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்தார்கள். இதனை 1990 களிலேயே உணரவும் செய்து தான்.. சில குடிபெயர்வுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தார்கள்.

மக்கள் இல்லாமல் நிலங்களுக்காகப் போராடி என்ன பயன்.. என்ற ஒரு மனோநிலை புலிகள் மத்தியிலும் ஒரு கட்டத்தில் வந்திருக்கிறது..!

நிச்சயமா.. உலகிலேயே 4 வது பெரிய இராணுவத்திற்கு எதிராக ஒரு கெரில்லா படையை நடத்திய தேசிய தலைவருக்கு.. சிறீலங்கா படைகளுக்கு எதிரான மரபு வழி அமைப்பை கெரில்லா அமைப்பாக மாற்றிக் கொள்ள அதிக நேரமோ.. வளமோ தேவைப்பட்டிருக்காது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. காரணம்.... ஆயுதப் போராட்டச் சுமைகளை எனியும் மக்கள் தாங்க முடியுமோ.. இந்த ஆயுதப் போராட்டம் உலகின் கண்களில் இருந்து எமது போராட்ட நியாயத்தை மறைத்து.. பயங்கரவாதமாகவே நிலை பெற்றிருமோ என்ற பயம் கூட அங்கு அவர்களின் அந்த முடிவுக்கும் தங்களையே அதற்கு ஆகுதி ஆக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கலாம்.

நிச்சயமா.. சண்டைக்களங்களில் இருந்து படையணிகளை விலக்கும் போது தலைவர் உணர்ந்தே இருப்பார். சுற்றிவர கிட்டத்தட்ட 60 ஆயிரம் சிங்களப் படைகள் மத்தியில் நிற்கிறோம்.. அதன் சுடுவலு.. எவ்வளவோ மடங்கு எங்களை விட அதிகம்.. இந்த நிலையில்.. ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் போராட்ட இயங்கு தளத்தைக் கொண்டு செல்வது என்பது தற்கொலைக்குச் சமன் என்று..! சில நம்பிக்கைகள்.. உத்தரவாதங்களின் அடிப்படையில் கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும்.. தலைவர் அவற்றை எல்லாம் உடனடியாக நம்பக் கூடிய ஒருவரும் அல்ல..!

மக்களை.. கடைநிலை.. இடைநிலை.. மற்றும் காயப்பட்ட போராளிகளை எப்படியாவது உயிரோடு மீட்டுக் கொடுத்திட வேண்டும் என்ற ஒரு நிலை தான்.. வன்னிப் போரில் இறுதியில் தலைவருக்குத் தோன்றி இருக்கும். புலிகளாப் போய் ஒரு பொறியில் சிக்கிக் கொண்டது என்பது.. புரியாத புதிராக இருந்தாலும்.. ஆயுதப் போராட்ட சுமையை மக்கள் எனியும் சுமக்க முடியாது என்பதும்.. ஆயுதப் போராட்டம் மக்களின் விடுதலை நியாயத்தை உலகம் புரிந்து கொள்ளச் செய்வதில் ஏற்படுத்திய கால தாமதமும்.. அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இதற்கு எமது போராட்ட களம் சார் புவியியலும் முக்கியம். நாம் 3 பக்கமும் கடலால் சூழ்ந்த இலகுவில் விண்ணில் இருந்து கண்காணிக்கப்படக் கூடிய இன்றைய அதிநவீன இராணுவ உளவு உலகில்.. இருந்து போராடிக் கொண்டிருந்ததும்.. ஒரு காரணம்.

உலகின் வலுமிக்க.. நேட்டாவால்.. ஆப்கானிஸ்தானில்.. 10 வருடங்களுக்கு மேலாகப் போராடி.. தலிபான்களை அழிக்க முடியவில்லை. அதேபோல்.. மேற்குப் பாகிஸ்தான்.. பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை.

காரணம்... அவர்களின் போராட்டக் கள புவியியல் தோற்றம் அவர்களுக்கு அங்கு கைகொடுக்கிறது. இதே ஆப்கானிஸ்தானில்.. உலகின் இன்னொரு வல்லரசான.. சோவியத் யூனியனும் தோற்று ஓடியது..! மரபு யுத்தத்தில் ஆயுதப் பலமும் ஆட்பலமும்.. புவியியல் அமைப்பும் அதிகம் செல்வாக்குச் செய்கின்ற நிலையில்.. பலவீனமான தலிபான்கள் கெரில்லா போர் முறையையே அதிகம் தெரிவு செய்து வருகின்றனர். அதுவே அவர்களின் போராட்ட நீட்சிக்கு உதவியும் வருகிறது. அவர்கள் நடத்துவது மண்மீட்டு விடுதலைப் போராட்டமல்ல. ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். அவர்களுக்கு கெரில்லா போர்முறை கூட அதைச் செய்ய உதவும்.

ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை.. கெரில்லாப் போர் முறையில் தொடர்ந்து நின்று கொண்டிருப்பது சொந்த மக்களை மண்ணை.. நிரந்தரமாக இழக்கும் நிலைக்கே கொண்டு செல்லும் என்ற நிலையில் நிலம் மீட்பு என்பது கட்டாயமாகியது. நிலம் மீட்புக்கும்.. பாதுகாப்பிற்கும் மரபுவழி இராணுவம் அவசியம். புலிகளால் குறைந்தளவு ஆளணியை அதற்கு ஏற்ப கண்டுபிடிக்க முடிந்த போதிலும்.. அவர்களால் கனரக இராணுவ வளமற்ற.. மனித உடல்களை கவசமாக்கிய.. மென் மரபுவழி இராணுவமாகவே இருக்க முடிந்தது.

புலிகளிடம் மரபு வழி இராணுவத்திற்கு அவசியமான போதிய அளவு.. கனரக வாகனங்கள் கிடையா. வலுவான விமான எதிர்ப்பு படைக்கலம் இருக்கவில்லை. வலுவான விமானப்படை இருக்கவில்லை. கனரக ஆயுதங்கள் போதியளவு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக.. துல்லியமாக எதிரியின் நடமாட்டங்களைக் கண்டறிந்து தகவல் வழங்கும் சர்வதேச.. உளவு உதவி அவர்களுக்கு இருக்கவில்லை.

ஈழப்போர் 4 இல்.. சற்றலைட்டுக்களும்.. ஆளற்ற உளவு வானூர்திகளுமே போரின்.. வெற்றியை தீர்மானித்தன. புலிகளின் போராட்டக் களம்.. இவற்றின் கண்காணிப்புக்குள் இலகுவாக வர முடிந்ததும்.. போராட்டம் பின்னடைவை சந்திக்க முக்கிய காரணமாகும்.

ஆப்கானிஸ்தானின் மலைக்குன்றுகள்.. இந்த உளவுகளின் தேவைகளுக்கு குறுக்காக உள்ளன. கொலம்பிய கடும் காடுகள்.. அங்கும் கிளர்ச்சியாளர்களைக் காத்து நிற்கின்றன. ஆனால்.. மரபுவழி இராணுவமாகி.. வெட்டை வெளிகளில்.. நிலை கொண்டிருந்த புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் நகர்வுகள் வெளிப்படையாக ஒரு பலம் பொருந்திய தேசம் செய்வது போன்றிருந்தமை.. எதிரிக்கு வெற்றியை சாதகமாக்கியது.  புலிகள் மரபுவழி இராணுவமாக இயங்கியமை.. மிக இலகுவாக சர்வதேசத்தால் அவர்கள் இலக்கு வைக்கப்படச் செய்தது.

இதே புலிகள் கெரில்லா போர்முறைக்கு மீண்டும் போயிருந்தால்.. நிச்சயம் ஆயுதப் போராட்டம் இன்றும் நீடித்திருக்கும். பிடித்த நிலங்களை இழந்து.. தொடர்ந்து ஒரு தலைமறைவு ஆயுதப் போராட்டம் என்பது மக்களுக்கு நில விடுதலை சார்ந்த தமிழீழ விடுதலை சாத்தியமில்லை என்பதையே தெளிவாகச் சொல்லியும் இருக்கும்.

இந்த நிலையில்.. அந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து மக்களை.. மண்ணை.. மண்ணின் வளத்தை பறிக்கவே உதவும்.. என்ற நிலையில்.. புலிகள் ஆயுதப் போராட்டத்திற்கு முடிவு கட்ட எண்ணி இருக்கக் கூடும்.

எனவே வெறுமனவே இராணுவ பரிமானத்தில் மட்டும் வைச்சு.. புலிகளின் தோல்வியை எடைபோடக் கூடாது. புலிகளால் ஒரு வல்லாதிக்க இராணுவத்தை கெரில்லா போர்முறையில் எதிர்கொள்ள முடிந்தது என்றால் அதை அவர்களால்.. சிறீலங்காப் படைகளுக்கு எதிராக மேற்கொள்வதில்.. பெரிய இடர்பாடு இருக்க வாய்ப்பில்லை..!

வன்னி இறுதிப் போரில்... சிங்களம் இறுதிவரை காடுகளை முற்றாக  கைப்பற்றவும் இல்லை..! கைப்பற்றவும் முடியாது. ஆனால் வழங்கல்களை கட்டுப்படுத்தலாம்.

மரபுவழி ஆளணியாக இருந்த புலிகள்.. கெரில்லாவிற்கு ஒரே இரவில் மாறவும் முடியாது. காரணம்.. ஆளணி.. அதற்கு தேவையான வளம்.. வழங்கல்.. அவற்றின் பரம்பல்.. என்று எத்தனையோ பிரச்சனைகளின் மத்தியில் தான் புலிகளின் தீர்மானங்கள் வந்திருக்கும்.

1987 இல் புலிகளின் ஆளணி.. கெரில்லா போர்முறைக்கு ஏற்ப சிறிதளவாக இருந்தது. 2009 இல் ஆளணி மரபு வழிக்கு ஏற்ப இருந்தது. ஆனால்.. படைக்கலம்.. எதிரியின் சுடுவலுவை எதிர்கொள்ளப் போதிய படைக்கல வலு.. அல்லது வளம் கொண்டதாக இருக்கவில்லை. தொடர் வழங்கல்களும் இருக்கவில்லை.

அதுமட்டுமன்றி.. புவியியல் அமைப்பு எதிரிக்கும் அவனுக்கு உளவு பார்ப்பவர்களுக்கும் அதிக வசதியாக அமைந்தது. இந்த நிலையில்.. புலிகளிடம் இருந்த தெரிவு... செய் அல்லது செத்து மடி தான்..! புலிகளின் மரபு வழி போர்முறை பற்றி ஒப்பீடு செய்யும் போது அவர்களின் இயங்கு தள புவியியல் சார்ந்தும்.. இன்றைய அதிநவீன போரியல் முறை குறித்தும்...நோக்கப்பட வேண்டும். பாகிஸ்தான்.. ஆப்கானிஸ்தான்... புவியியல் அமைப்பும்.. ஈழத்தீவின் புவியியல் அமைப்பும் அதிநவீன இராணுவ வளங்களின் முன் ஒன்றல்ல..!

எமது புவியியல்.. இன்றைய அதிநவீன இராணுவ வளங்களின் முன் கெரில்லா போர்முறைக்கு உகந்ததே அன்றி... மரபுவழியாக செயற்பட நாம்.. பெரும் படைக்கல.. மற்றும் இராணுவ உதவிகளை தொடர்ந்து பெறும் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இன்னொரு வலுவான நாட்டின் உதவி தேவை. ஆனால் அது 2009 இல் எமக்கு இருக்கவில்லை. அதை எமக்கு யாரும் சும்மா தரவும் மாட்டார்கள்..!

இப்போதும் எமக்கு கெரில்லா போர் முறை உகந்ததாக உள்ளது. ஆனால்.. இதன் மூலம் மண் மீட்புக்கான உத்தரவாதங்களை அதனை நோக்கி உலக ஆதரவை பெறவோ.. வழங்கவோ முடியாது. இன்னொரு கெரில்லா போர் மூலம்.. மக்கள் மீது மீண்டும் மீண்டும் இராணுவ அழுத்தங்கள் தான் கூடுமே தவிர... விடுதலை சாத்தியமாகாது.

அந்த வகையில்.. நாம்... இன்றைய உலகின் அதிநவீன இராணுவ வள பரிமானத்தின் முன் நின்று நோக்கினால்.. இன்றை நிலையில் எமக்கு உகந்தது.. உலக அங்கீகாரத்துடன் கூடிய எமது நியாயத்தை உலகம் புரிந்து கொள்ளச் செய்யக் கூடிய ஒரு போராட்ட முறைமையே.

அதன் பால் 2009 மேக்குப் பின் ஈழத்தீவில்.. தமிழர்களின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். எனி நாம் ஜனநாயக வழியில் போராடித் தான் எமது இலக்கை  இந்த உலகில் எட்ட முடியும். குறிப்பாக.. இராணுவ தொழில்நுட்ப பரினாம வளர்ச்சியில் நாம் முன்னேறாத வரை.. அதுவே எமக்கு உகந்ததும் கூட..! :icon_idea:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:44 AM

1 மறுமொழி:

Blogger ஒசை செப்பியவை...

This comment has been removed by the author.

Thu Jul 19, 07:13:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க