Tuesday, January 10, 2012

ரங்கா-மணி.



தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம்.

கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது. ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக...

வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின பிக்கப் வந்து எங்கட சடைச்ச செவ்வரத்தை ஒன்று மதிலோட நின்றது அதுக்குள்ள மறைப்புத் தேடி நின்று கொண்டிருந்தது.

கலிபர் வந்து கொஞ்ச நேரமில்ல.. இரண்டு பெல் ஹெலிகள் பலாலில இருந்து வர.. பிக் அப் வெளிக்கிட்டு.. நாவலர் வீதிப் பக்கமாக போக.. வந்த ஹெலிகள்.. வேட்டுக்களை தீர்த்தபடி.. யாழ் நகரில இருந்த சிங்களப் படை முகாமான கோட்டையைச் சுற்றி வட்டமிட ஒன்று திடீர் என்று கோட்டைக்குள்ள இறங்கி மெளனமாக மற்றது அதுக்கு பாதுகாப்புக் கொடுக்க வட்ட மடிச்சு.. சுட்டுக் கொண்டே நின்றது.

சிறிது நேர வான வேடிக்கைக்குப் பின்னர் இறங்கின ஹெலி கிளம்பி மண்டைதீவுக் கடல்பக்கம் போய்.. மீண்டும் யாழ் நகர் திரும்ப.. மற்றது.. அதனை பின் தொடர.. நாவலர் வீதிப் பக்கம் வந்த போது புலி அண்ணாமாரின் கலிபர் சில வேட்டுக்களை தீர்க்க.. ஹெலிகள் இரண்டும்.. பதில் சொல்லாமலே.. அவசர அவசரமா போய் விட்டன.

ஏன் போற ஹெலிக்கு சும்மா சுடுகினம் என்று நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்க.. மீட்புக்கு வந்த ஹெலிகள்.. பதில் தாக்குதலில் மிணக்கட முடியாது திரும்பிப் போறதை கிட்டு மாமா அனுபவத்தால உணர்ந்திட்டு.. மீண்டும் கலிபரை எங்க வீட்டடிப் பக்கம் கொண்டு வந்து நிறுத்திட்டு தானும் மோட்டார் சைக்கிளில வந்து நின்று கொண்டார்.

அப்ப தான்.. ரங்காவும் மணியும் எங்களோட கூட்டாகினவை. ரங்காவுக்கும் மணிக்கும் பிஸ்ரல் எல்லாம் பிடிக்கத் தெரியும். கிட்டு மாமா பழக்கி இருப்பார் போல..!

உவங்கள் அறுவாங்கள்.. சொறிஞ்சு போட்டு.. கலிபரை உதுக்குள்ள நிப்பாட்டி வைச்சிருங்காங்கள்.. போனவன் திரும்பி வந்து முழங்கப் போறான் என்று பக்கத்து வீட்டு அன்ரி.. மதிலுக்கால.. எங்கட அம்மாவைக் கூப்பிட்டு கத்தினதை.. கிட்டு மாமாவும் கேட்டுக் கொண்டு தான் நிண்டவர்.

எங்களுக்கெண்டால்.. கிட்டு மாமா கூப்பிட்டு திட்டப் போறாரோ என்ற பயம். ஆனால் அவரோ.. கூலா.. நின்று கொண்டிருந்தார். ரங்காவும் மணியும் அவர் கூட..! பிக்கப்பில ஏறிறதும் இறங்கிறதுமா அவை தங்கட விளையாட்டைக் காட்டிக் கொண்டு நிற்க.. நான் இரண்டு வாழைப்பழங்களை வீட்டுக்குள்ள போய் எடுத்துக் கொண்டு வந்து.. ரங்கா.. மணியிட்ட நீட்டினன். அவையோ வாங்கல்ல. கிட்டு மாமா.. எங்களைப் பார்த்து சிரிச்சுப் போட்டு.. ரங்கா மணிக்கு தலை அசைக்க அவையும் பாய்ந்து வந்து பழங்களைப் பறிச்சுக் கொண்டு போய்.. கிட்டு மாமாட வயிற்றை கட்டிப் பிடிச்சுக் கொண்டு.. பறிச்சுக் கொண்டு போன வாழைப்பழங்களை சாப்பிட்டிச்சினம்.

கிட்டு மாமாண்ட புலி அண்ணாக்கள்.. மட்டுமல்ல.. அவரின்ர செல்லப் பிராணிகளும்.. எவ்வளவு ஒழுக்கமா இருக்கினம். மாமா தலையாட்டும் வரைக்கும்.. வாழைப்பழத்தைக் கூட அந்த ரங்கா.. மணி குரங்குக் குட்டிகள் வாங்கல்லையே... என்ற வியப்பு எங்களுக்க.. கலந்திருக்க.. கொஞ்சம் நேரம் .. அவையோட விளையாட்டுக் காட்டிப் போட்டு.. நாங்கள் போய் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டம்.

எனி ஹெலி வந்தா கலிபர் சண்டை பார்க்கலாம்.. கலிபர் வெற்றுக் கோதுகள் பொறுக்கலாம்.. என்று காத்திருந்த நமக்கோ.. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. போன ஹெலிகள்.. காத்திருந்த கலிபர்களுக்கு விடை சொல்ல வரவில்லை. கலிபரும்.. ரங்கா.. மணியும்.. கிட்டு மாமாவும் போராளிகளும் கன நேரம் காத்திருந்திட்டு.. யாழ் நகர் பக்கமா போய் மறைஞ்சிட்டினம். கோட்டை பக்கமும் தொடர் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு.. ஒரே நிசப்தமே.. பதிலானது.

அடுத்த நாள்.. பள்ளிக்குப் போற வழியில.. அப்பையா கடைச் சந்தியில.. சாப்பாட்டுக் கடையில.. தொங்கிக் கொண்டிருந்த உதயனில் கண்ணோட்டம் ஒன்று விட்டம். அதில.. கோட்டையில் இருந்து படை நகர்வு முயற்சி; புலிகள் முறியடிப்பு என்ற செய்தி தலைப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆக்கம்: நெடுக்ஸ்

நன்றி யாழ்.இணையம்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:43 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க