Sunday, August 04, 2013

கண்ணூறுபட்ட காதல்..! (ஈழத்துக் குட்டிக்கதை.)

வசந்த் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். வதனியிடம் காதலைச் சொல்லிவிட்ட பின் நடக்க இருக்கும் முதல் சந்திப்பை எண்ணி எண்ணி அவன் மனம் பூரித்துப் போயிருந்தான்.

இருக்கத்தானே செய்யும்.. இந்தக் காதலைச் சொல்ல அவன் பட்ட பாடு. அவளை பின் தொடர்ந்த நாட்கள்.. நாளிகைகளுக்கு கணக்கே இல்லையே. அவளைக் காண..கோவில்கள்.. தெருக்கள். பள்ளிக்கூடங்கள் என்று அவன் அலையாத இடங்களும் இல்லை. சிங்கள இராணுவத்தின் அந்த பொம்பர் அடிக்குள்ளும்.. ஷெல் அடிக்குள்ளும் அவன் அவளைத் தேடிப் போன நாளிகைகள்.. அந்த நாளிகைகளில் மனம் கொண்டிருந்த அசாத்திய துணிச்சல்களை அவன் கண்டு வியந்திருக்கிறான். புலிப் போராளிகளுக்கும் இப்படித்தான் மண்ணின் மீது காதல் இருக்குமோ. அதனால் தான் சாவை எண்ணாது.. எதிரியைத் தேடிச் சென்றனரோ.. என்று அவன் தனக்குள் கேட்டுக் கொள்வதும் உண்டு.

தம்பி வசந்த்.. கம்பஸ் முடிச்சு வரேக்க சந்தைக்கு போயிட்டு வாறீயே. தாயின் குரல் கேட்டு.. மெளனமானவன்.. ஐயையோ.. அம்மா இன்றைக்கென்று இதைச் சொல்லுறாவே.. என்று மனதுக்குள் எண்ணியும் கொண்டான். சிறிய தயகத்தின் பின் தாயின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டவனாய்.. ஓ. கே அம்மா. அந்த லிஸ்டை மேசையில வையுங்க. கம்பஸ் போறப்போ எடுத்துக் கொண்டு போறன்..!

சரியடா தம்பி.

அன்றைய பொழுது முழுவதுமே வதனியின் நினைவுடனையே கழிந்து கொண்டிருந்தது வசந்துக்கு. கம்பஸ் போனவன்.. பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் நினைவுகள் வந்து அவனைப் புரட்டிப் போட்டன. என் தேவதை இன்று என்ன நிற சேலையில் வருவாள்.. என்ன பேசுவாள்.. எத்துணை அழகான அவளை எப்படி வர்ணிப்பேன்.. மிருதுவான அவள் கைபிடித்து ஊரை ஒருக்கா உலா வரனும்.. என்றெல்லாம் மனம் இடைவிடாது.. பலவாறு கற்பனை செய்து கொண்டே இருந்தது.

கம்பஸும் அன்று ஒரு வேளை பாடத்தோடு முடிய.. தாய் சொன்னபடி திருநெல்வேலி சந்தையை நோக்கி தன்னுடைய லுமாலா சைக்கிளை செலுத்தினான் வசந்த்.

அப்போது.. வானில்.. சிங்கள விமானப்படையின்.. பிரித்தானிய தயாரிப்பு..இரண்டு அவ்ரோக்கள்.. தோன்றின. அவை யாழ் நகரை நோக்கி சென்று வட்டமிட ஆரம்பித்தன. ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கறுப்புப் கறுப்புப் பொட்டலங்களாக விமானத்தில் இருந்து விழுவது தெரிந்து மக்கள் அன்னார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வசந்தும் சைக்கிளை வேலி ஓரமாக நிறுத்தி விட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கறுப்புப் பொட்டலங்கள் ஆடி ஆடி நிலத்தில் வீழ்ந்ததும் பெரும் வெடியோசைகள் எழுந்தன..

வழமையாக பீப்பாய் குண்டுகளை பெரிய சகடை விமானத்தில் (மாற்றியமைப்பட்ட எயர்லங்கா எயார் பஸ்) கொண்டு வந்து கொட்டும் சிங்களப் படை இன்று அவ்ரோவில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தது. குண்டுகள் அங்கும் இங்குமாக யாழ் நகரை அண்டி மக்கள் வாழும் பகுதிகள் எங்கும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.

சிறிது நேர குண்டு மழையின் பின் அவ்ரோக்கள் வந்த வழி திரும்பிப் போக... சனம் சாரை சாரையாக சைக்கிள்களில் யாழ் நகரை நோக்கி விரைந்தது. வசந்தும் சந்தைக்குப் போய் கடுகதியில் வாங்க வேண்டியவற்றை வாங்கிவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.

விரைந்தவன்... திகைத்து நின்றான். வீட்டின் முன்பக்கக் கண்ணாடிகள் எல்லாம் நொருங்கிப் போயிருந்தன. போட்டிகோ தூண் இடிந்து  விழுந்து.. சரிந்து கிடந்தது. சைக்கிளைப் போட்டு விட்டு.. ஐயோ அம்மா என்று பதறி அடித்துக் கொண்டு தாயைத் தேடினான். மகனின் கதறல் கேட்டு.. நான் இஞ்ச இருக்கிறன் தம்பி.. என்று தாய் பங்கருக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.

மகனைக் கண்டுவிட்டு வெளியே வந்த தாய்.. அடே தம்பி நீ கம்பஸுக்கு போக.. பிளேன் வந்து பீப்பா குண்டை இதுக்குள்ள தட்டிவிட்டிட்டாங்களடா. பங்கரே குலுங்கிற அளவுக்கு அது விழுந்து வெடிச்சிச்சு என்றால் பாரன். கிட்டத்தான் எங்கையோ விழுந்திருக்கு. வெளில போய் பாரப்பு என்ன நடந்தது என்று... பதட்டம் தொனியில் தெறிக்க.. அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

வசந்தும் தாய் சொன்னபடி.. வெளியில் வந்து வீதியில் கூடி நின்ற மக்களிடம் விசாரித்தான். அவன் கேட்ட செய்தி அவனை ஒரு கணம் உறைய வைத்தது. பீப்பாய் குண்டு.. வதனி வீட்டின் மீது தான் வீழ்ந்ததாம். மகளும்.. தகப்பனும் இறந்து விட்டார்களாம். தாய் வெளியில் போயிருந்ததால் தப்பி விட்டதாக சொன்னார்கள்.

மனது நிறைந்த காதலோடு.. வதனியை சந்திக்க நினைத்தவன்... காத்திருந்தவன்.. செய்தி கேட்டு..சோகம் நிறைந்த மனதோடு அவளின் சிதைந்து போன.. உடலங்களைத் தேடி அவள் வீட்டை நோக்கி ஓடினான்..!

(இது ஒரு உண்மைச் சம்பவத்தின் மீட்டல்).

----------------------------------------------------------------------------
 
கதையில் வரும் அவ்ரோ விமானம் இத்தகைய ஒன்று தான். இவற்றில் இரண்டை 1995 இல் விடுதலைப்புலிகள் பலாலிக்கு அண்மையில் வைத்து சுட்டு வீழ்த்தி இருந்தனர். இத்தகை விமானங்கள்.. 1990 கோட்டை முற்றுகையின் போது தமிழ் மக்களின் வாழ்விடங்கள்.. போராளிகளின் மறைவிடங்கள் மீது.. பீப்பாய் குண்டுகள் வீசுவதிலும் மலக் குண்டுகள் வீசுவதிலும் கோட்டைக்குள் இருந்த சிங்களப் படையினருக்கு சாப்பாடு போடுவதிலும் முக்கிய பங்காற்றின..!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:30 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

உண்மையில் இவ்வாறான விடையங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். நன்றி மிகவும் நல்ல கதை, வாழ்த்துக்கள்.💐

Sun Oct 02, 10:53:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க