Thursday, September 05, 2013

தாரணி Vs நந்தினி.. யார் திறமைசாலி..??!

100527_FM_ClassStories_edu.jpg

புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு.

10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது.

ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர.. பரீட்சையில் தோற்றி சித்தியும் அடைந்தாள் தாரணி. மிகுந்த மகிழ்ச்சியோடு.. அதனைக் கொண்டாடிய தாரணி.. பள்ளியில் சேரும் நாளும் வர.. அதில் சேர்வதற்காக.. பெற்றோருடன் பேரூந்தில் ஏறி.. நகருக்கு போனாள். பள்ளியில்.. பிள்ளையின் விபரங்களை எல்லாம்.. எடுத்துவிட்டு.. பிள்ளையைச் சேர்க்க நன்கொடையாக.. ஒரு சிறு தொகையைக் கட்டச் சொல்கின்றனர். பாடசாலை அபிவிருத்திக்கு அந்தப் பணம் என்று சொன்னதால் பெற்றோரும் மறுக்காமல்.. கடன உடன வாங்கி அதனைக் கட்டி விட்டு மகளை நகரில்.. பிரபல்ய பாடசாலையில் படிக்கவிட்ட பெருமிதத்தோடு வீடு திரும்புகின்றனர்.

தாரணியுமோ.. மிக்க மகிழ்ச்சியோடு.. முதல் நாள் வகுப்பிற்குப் போகிறாள். எல்லாம்.. புதிய முகங்கள். தான் ஒருத்தியே தங்களின் சொந்த ஊரில் இருந்து வந்திருக்கிறவள் என்ற இறுமாப்பு வேறு அவள் மனதில். ஆனாலும்.. அது அதிக நேரம் நீடிக்கவில்லை. கடைசி வாங்கில் ஒருத்தி. அவளின் முகம் மட்டும் நல்ல பரீட்சயமானதாக இருந்தது. உற்றுப் பார்க்கிறாள். அட நம்ம நந்தினி. இவள் எப்படி இங்க. புலமைப் பரீட்சையிலும் பெயில்.. தேர்வுப் பரீட்சையிலும் பெயிலாச்சே..!

சரி.. இடைவேளையின் போது.. கதைச்சுப் பாப்பம் என்றிட்டு.. தாரணி வகுப்பில் கவனம் செலுத்த முயல்கிறாள். ஆனால் நந்தினியின் வரவை அறியாமல் அவளால் வகுப்பில் கவனம் செலுத்தவே முடியவில்லை. எப்படா இடைவேளை மணி அடிக்கும் என்றே காத்திருந்தாள்.

மணியும்.. கால ஓட்டத்தோடு  ஓடிய கடிகார முட்களுக்கு கட்டுப்பட்டு.. அடிக்க.. ஓடிச் சென்று நந்தினியின் அருகில் அமர்ந்து கொண்டாள் தாரணி. எப்படிடி.. நீ இங்க..??! ஆதங்கம் கலந்த தொனியில்.. எந்த நலன் விசாரிப்புக்களுக்கும் இடமில்லாத வகையில் கேள்விகளைத் தொடுத்தாள் தாரணி.

நந்தினி அமைதியாக.. ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. எந்தப் பதட்டமும் இல்லாமல்.. பதில் சொன்னாள். எங்க அப்பா 10,000 ரூபா டொனேசன் கட்டினார் அட்மிசன் கிடைச்சிட்டுது என்றாள்.

தாரணி.. பதில் ஏதேம் பேசமலே எழுந்து நடையைக் கட்டினாள்.

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:57 AM

1 மறுமொழி:

Anonymous தமிழ்த்தோட்டம் செப்பியவை...

அருமை

Fri Sep 06, 09:55:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க