Friday, October 11, 2013

விக்னேஸ்வரனின் வெற்றி அவரது அல்ல. தேசிய தலைமை உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்ந்தது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கீழான விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்வி குறித்தும் அவை தொடர்பான பின்னணிகள் குறித்தும் மக்களுக்கு அதிகம் தெரிகிறது. ஆனால் சிலர்... எரிக்சொல்கைம் போன்ற கையாலாகாதவர்களின் நிலையில் நின்று புலிகளை பார்க்கக்.. காட்ட நினைப்பது தான் கேவலமாகத் தெரிகிறது..!மேலும்.. தேசிய தலைவர் அடையாளப்படுத்திய கூட்டமைப்பையும்.. அங்கத்தவர்களையும் மக்கள் அன்று தேர்ந்தெடுத்தார்கள். இன்று புலிகள் அடையாளப்படுத்தாமலே.. புலிகள் கொண்ட அதே நம்பிக்கையை.. கொள்கையை.. உறுதியைக் கொண்ட உண்மையாக மக்களுக்காக உழைக்கக் கூடியவர்களை கூட்டமைப்பு என்ற அதே தேசிய தலைவரின் அடையாளத்துக்குள்.. மக்கள் தெரிவு செய்யத் தயங்குவதில்லை. இதற்குக் காரணம்.. புலிகளால் தான்.. உண்மையில்.. சிங்கள.. இராணுவ மற்றும் ஒட்டுக்குழு அடக்குமுறைகளுக்குள் இருந்து தம்மை அரசியல் சமூக ரீதியில் விடுவிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் இருப்பது தான்.

கூட்டமைப்பு என்ற அந்த தேசிய தலைவரின் அடையாளத்துக்கு வெளியில் போய்.. முன்னாள் புலிகள் நின்றால் கூடத் தோற்பார்கள். காரணம்.. தேசிய தலைவர் அவர்களையோ வேறு ஆட்களையோ அதற்கு வெளியில் தேர்தல் அரசியலில் அடையாளம் காட்டவில்லை. தேசிய தலைவர் சிங்கள தேசத்தின் தேர்தல் அரசியலில்.. தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்றால் தவிர வேறு வழியில்.. தமது பலத்தை காட்ட முடியாது என்று நம்பித்தான்... தமிழ் தேசியக்  கூட்டமைப்பு என்ற அந்த எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுத்தார். ஒரு காலத்தில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட.. தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியைக் கூட தேசிய தலைவர் உயிர்ப்பிக்க விரும்பி இருக்கவில்லை..!

மக்கள் அதனையே இப்போதும்.. எப்போதும் விரும்புகிறார்கள். கஜேந்திரன் என்ற தனி வேட்பாளர் தோற்கவில்லை. அவர் தேசிய தலைமையின் அடையாளத்தை விட்டு வெளியில போனது தான் தோல்விக்குக் காரணம். அதேபோல்.. சுரேஸோ.. சித்தார்த்தனோ.. மாவையோ.. சம்பந்தனோ.. கூட்டமைப்பை  விட்டு வெளியில் போய் வென்று காட்ட நினைத்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். இந்த சுரேஸ்.. சித்தார்த்தன்.. சங்கரி எல்லாம் தனிய நின்று தோற்றுப் போன பின் தான் தேசிய தலைவர் மக்களுக்கு அடையாளப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்து மக்கள் முன் வர முடிந்தது..!

கஜேந்திரன் மட்டுமல்ல.. கூட்டமைப்பை விட்டு வெளியே போய் தோற்ற சிவாஜிலிங்கம்.. மீண்டும் கூட்டமைப்புக்குள் நின்று வெற்றி பெற்றுள்ளமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.மக்கள்.. தேசிய தலைமையின் அத்தனை நகர்வுகளிலும் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். அதன் இராணுவத் தோல்வி என்பதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்வதோடு.. அது தலைமையின் சக்திக்கு மீறிய சர்வதேச சதிகளால்.. பலத்தால் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதையும் உணர்கிறார்கள். இருந்தும்.. தேசிய தலைமையின் இலட்சியத்தின் பால் மக்கள் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். தேசிய தலைவரும் புலிகளும்.. எமது மக்களுக்கு அடையாளப்படுத்திய.. சுயநிர்ணய உரிமை... தாயகக் கோடுபாடு.. சுயாட்சி.. சமஸ்டி.. சிங்கள ஆக்கிரமிப்பை அகற்றல்.. என்ற அந்த மக்கள் உரிமைக்கான.. பதங்களைச் சொல்லித்தான் விக்னேஸ்வரன் கூட வாக்குக் கேட்க முடிந்தது..!

தேசிய தலைவரின் மதிநுட்பமான.. தீர்க்கதரிசனம் மிக்க ஒரு வழிகாட்டலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு... என்ற சிந்தனை மக்களிடம் ஆழப் பதிந்துள்ளது. அதனை மீறி.. எவர் நின்றாலும் அவர்கள் தோற்பார்கள்..! அதேபோல்.. கூட்டமைப்பை தேசிய தலைமை விரும்பியதற்கு மாறாக.. தவறாக வழி நடத்த எவர் முனைந்தாலும் அப்போது கூட்டமைப்பும் தோற்கலாம்.. அதை மக்கள் செய்வார்கள். அதனை இன்று கூட்டமைப்புக்குள் இருந்து பதவி மோகம் பிடித்து அலைவோர்.. எதேச்சதிகாரம் பிரயோகிப்போர் புரிந்து கொள்ளத் தவறினால் மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தேசிய தலைமை தமக்குக் காட்டிய ஒரு வலுவான ஜனநாயக நிறுவமைப்பாகவே நோக்குகிறார்கள். அதை சிதைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது.. இன்று அதன் முதன்மைப் பொறுப்புக்களில் உள்ள.. முன்னாள் இன்னாள் ஒட்டுக்குழு ஆட்களும்.. மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோரும்.. சட்டம் படித்த.. படித்த மேதைகள் என்போரும்.

இவர்களின் இந்த சுய அடையாளங்களுக்காக அல்ல.. கூட்டமைப்பை தலைவர் ஸ்தாபிக்கும் எண்ணக்கருவை விதைத்தார். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலமாக தமிழ் தேசிய அடையாளம் தன் வலிமையை கொள்கைகளை உலகிற்கும் சிங்களத்திற்கும் காட்டவே அதனை அவர் உருவாக்கினார். அந்த எண்ணகருவின் வெற்றிக்காக உழைத்தோர் பலர். அவர்களை மக்கள் இப்போதும் கெளரவிக்கவே விளைகின்றனர். அதேநேரம் சிதைப்போருக்கு.. சிதைக்க நினைப்போருக்கு நல்ல பாடமும் கற்பிக்கவே செய்கின்றனர்..!


சிறீலங்காவின் தேர்தல் அரசியலில் தேசிய தலைமையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் எனி ஒரு அரசியல் என்பதை தமிழ் மக்கள் விரும்பப் போவதில்லை..! அதனை சிங்களக் கட்சிகள் தமிழ் மக்களால் நிராகரிப்பட்டது மட்டுமன்றி... ஈபிடிபி.. பிள்ளையான் குழு.. கருணா குழு.. புளொட் போன்ற அடாவடி.. ஆயுத அரசியல் ஒட்டுக்குழுக்கள்..கண்ட படுதோல்விகள் மூலமும் காட்டி நின்ற்கின்றனர்.

இந்தக் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்.. புலிகள் இல்லாததால்.. மக்கள் ஒட்டுக்குழுக்களுக்கு வாக்களிக்கின்றனர் ஒட்டுக்குழு அரசியலை வரவேற்கிறார்கள்.. என்று ஒரு மாயைப் படம் காட்ட முனைந்தால்..அதற்கும்.. மக்கள் பதில் சொல்வார்கள்..! ஏலவே 1987 இலும் இப்படியான ஒரு மாயைக்கு மக்கள் முடிவு கட்டி இருந்தனர்.

எனவே இன்று சிலர் மேற்படி.. ஒட்டுக்குழுக்கள் சார்ந்த ஒரு.. சித்து விளையாட்டு கருத்தியலை விதைக்க வெளிக்கிட்டுள்ளனர். கள யதார்த்தத்தை சரியாக விளங்கிக் கொண்டு மக்கள் உணர்வுகளை தாயகத்திலும் புகலிடத்திலும் உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் பலத்தை இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்யும். மாறாக.. ஒட்டுக்குழுக்களின் அராஜக பாசிச அரசியலுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பதாக காட்ட முனையக் கூடாது. அது அவர்களை மீண்டும் மீண்டும் தவறாகவே வழிநடத்தும். மக்கள் சிந்தனையில் இருந்து அவர்கள் தூரப் போய் துரோகிகள் ஆகும் நிலையே தொடரும்..!

Labels: , , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:50 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க