Saturday, May 23, 2009

புலிகள் தோல்வி அடைந்து விட்டனரா..?! - இல்லவே இல்லை.



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது சிறீலங்கா (முன்னாள் இலங்கை) எனும் தீவில் தமிழர்களின் இருப்பைக் கூட இந்த உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை. ஏன் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்களுக்கே சிறீலங்காவில் அரசியல் உரிமையிழந்து, சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தமிழர்கள் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.

அதுமட்டுமன்றி 1974 இற்கு முன்னும் சரி அதன் பின்னரும் சரி ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி பயங்கரவாத அரசுகள் பல தடவைகள் இன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. உலகுக்குத் தெரியத்தக்கதாக 1983 இல் ஒரு பெரிய இனக்கலவரமே நடந்து முடிந்திருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். ஆனால் அந்த மனித உயிர்களுக்காக இந்த உலகம் பரிந்து பேசவோ மனித உரிமை பாராட்டவோ அப்போது முன்வரவில்லை.

அதேபோல் 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் ஈழத்துக்கு வந்த இந்தியப் படைகள் அங்கு மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களைச் செய்தன. யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் புகுந்து 50 ற்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள், பணியாளர்களைச் சுட்டுக் கொன்றது. வல்வெட்டித்துறை படுகொலையை நிகழ்த்தி நூறுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றது. இப்படியான படுகொலைகள் தொடர்பில் இந்த உலகம் மனித உரிமைகள் பற்றி மூச்சும் விடவில்லை. ஏன் இப்படியான இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மீது ஏவிய படுகொலைகள் பற்றிய செய்திகள் அண்டையில் உள்ள தமிழக உறவுகள் பலருக்கே தெரியாது. அந்தளவுக்கு அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன.

அதன் பின் 1995 இல் யாழ்ப்பாண தமிழ் மக்களை கொன்றொழிக்க சந்திக்கா குமார ரணத்துங்க - அனுரத்த ரத்வத்த கூட்டணி சிங்களப் படை நடைவடிக்கையை ஆரம்பித்து 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை இடம்பெயர வைத்தது. அந்த வேளையில் அப்போதைய சிறீலங்காவின் வெளிவிவகார மந்திரி கதிர்காமர் குறிப்பிட்ட இடம்பெயர்வு பற்றி கருத்து வெளியிட்ட ஐநா மன்றத் தலைவர் பூட்டோஸ் பூட்டோஸ் காலி (Boutros Boutros-Ghali) அவர்களின் கருத்துக்களையே அடியோடு நிராகரித்ததோடு ஐநா மன்றம் சிறீலங்காவில் நுளம்புக்கு மருந்தடிப்பதோடு அதன் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அத்தோடு ஐநாவும் அடங்கிப் போய்விட்டது. அந்த அளவுக்கு இருந்தது இந்த உலகின் கரிசணை தமிழர்கள் மீது.

அதுவே பின் யாழ்ப்பாண செம்மணியில் நூற்றுக் கணக்கான தமிழர்களைக் கொன்று புதைக்க வழி செய்தது. அதனை இந்த உலகம் நேரில் கண்டு ரசித்ததோடு நிறுத்திக் கொண்டு விட்டது.

இன்று வரை தமிழ் மக்கள் மீது சிறீலங்கா மற்றும் இந்திய இராணுவங்களை ஏவி அந்தந்த நாட்டுத் தலைமைகள் புரிந்த படுகொலைகளுக்காக குறிப்பிட்ட நாட்டுத் தலைமைகள் இந்த உலகால் நீதி வழங்கித் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்படி படுகொலைகள் நிகழ்ந்த காலங்களில் எல்லாம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகட்டும் தமிழக தமிழ் மக்களாகட்டும் ஈழத்தமிழ் மக்களின் துயரை செய்தியாக அறிந்து கொண்டு வருந்திக் கிடந்ததும் கறுப்புக்கொடி அசைத்ததும் தான் அதிகமாகச் செய்யதும்.. செய்யக் கூடியதாகவும் இருந்தது.

ஆனால் 2000 ம் ஆண்டுக்குப் பின்னர் உருவான காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மக்களின் ஆயுதப் போராட்டத்தை பலப்படுத்தினார்களோ இல்லையோ மக்களின் சாத்வீகப் போராட்ட வடிவத்தைப் பலப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

அதில் "பொங்கு தமிழ்" என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் முன்முயற்சியில் எழுந்த ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக பொங்கும் மக்களின் உணர்வுகளை யாழ்ப்பாணத்தில் இருந்து மலையகம் வரை பொங்க வைத்தனர். ஈழத்தில் இருந்து கனடா வரை கூட பொங்க வைத்தனர். இதன் தாக்கம் விடுதலைப்புலிகள் நடத்திய 35 வருட ஆயுதப் போராட்டம் தந்ததை விடப் பலமடங்கு அதிகமாக இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் அன்று கண்டிருந்த வெற்றிகளே மக்களுக்கு அவ்வாறு பொங்கும் துணிவை ஊட்டி இருந்தது. அதை மறுக்க முடியாது.

அன்று தொடங்கி உலகெங்கும் பொங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான, தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டான.. மக்களின் உணர்வே இன்று மகிந்த ராஜபக்ச அரசு செய்த மனிதப் படுகொலைகளுக்கு அவரைத் தண்டிக்க உலகத்தை தூண்டியுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக மக்களும் உலகத்தமிழினமும் ஈழத்தமிழரின் துயருக்காக.. விடுதலைக்காக இன்று உலகெங்கும் உணர்வுகளால் பொங்கி தொடர்ச்சியாக குரல் கொடுப்பதனால் தான் 1974 இல் உலகம் அறியாது செத்துக் கொண்டு அடிமையாகிக் கிடந்த ஈழத் தமிழனை இன்று உலகம் ஏறெடுத்துப் பார்க்கச் செய்திருக்கிறது. இதற்கு விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்த உலகுக்குத் தந்த பாடங்களும் படிப்பினைகளும் உதவி இருக்கின்றன என்றால் அதுவும் மிகையல்ல.

இன்று தான் ஈழத்தமிழரின் துயர் உலகின் பார்வையில்.. மனித உரிமைகளின் பார்வையில் தமிழனை மனிதனாக இனங்காட்டி நிற்கிறது. இதற்காகக் கொடுத்த விலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொடுத்த விலைகள் மீளக் கூடியவையும் அல்ல. எல்லாம் உயிர் விலைகள்.

தற்போது முழு உலகமே அறிந்திருக்கிறது ஈழத்தமிழனுக்கு இலங்கையில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அங்கு அவன் சிங்கள அரசாங்கத்தால் அதன் படைகளால் அச்சுறுத்தப்பட்டு வாழ நிற்பந்திக்கப்படுகிறான். அங்கு திட்டமிட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் ஈழத்தில் கொடுத்த அந்த உயிர் விலைகளே.. தமிழ் மக்களுக்கு சம உரிமை, சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை கோர வேண்டிய நிலையை உருவாக்கித் தந்துள்ளது.

ஒருவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுத பலத்தால் சிங்களப் படைகளை அழித்து அல்லது விரட்டி தமிழீழ நிலப்பரப்புக்களை மீட்டிருப்பின் அதனை பயங்கரவாத தேசம் என்றே இந்த உலகம் அடையாளம் கண்டிருக்கும். அந்த விடுதலை கூட அர்த்தமற்ற ஒன்றாகவே தமிழர்களுக்கு அமைந்திருக்கும். அது தமிழர்களின் அழிவுகளை தடுக்காமல் ஆதிக்க சக்திகளை ஒரு போராளி அமைப்பு வெல்வதா என்ற ஒரு குரோத எண்ணப்பாட்டை வளர்த்து தமிழ் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளி சிங்கள அரசுடன் இணைந்து கொடூர யுத்தங்களை ஏவி இன்னும் இன்னும் தமிழ் மக்களை இந்த உலகம் கொன்று கொண்டிருக்க வழியே ஏற்பட்டிருக்கும். இதற்கு கியூபா, எரித்திரியா மற்றும் சோமாலியா போன்ற தேசங்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஆனால் இன்று விடுதலைப்புலிகள் என்ற போராட்ட அமைப்பு தனது துப்பாக்கிகளை சரியான நேரத்தில் மெளனிக்க வைத்தமை, சிங்களப் பேரினவாதிகள் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது செய்து வரும் இனப்படுகொலைக்கான தண்டனையை வழங்க சரியான சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. அதுமட்டுமன்றி...

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை ஆதாரங்கள் சகிதம் தேடும் நிலைக்கு இந்த உலகம் வந்திருக்கிறது. தமிழர்களைக் கொன்றதால் மற்றும் கொல்வதால் தனக்கு இந்த உலகம் தூக்குக் கயிறு தந்திடுமோ என்று இதுவரை காலமும் எந்தச் சிங்களத் தலைமையும் பதறியதில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச பயந்து நடுங்கி உளறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் தமிழ் மக்கள் தம்மை அழித்த சிங்களத் தலைமைகளை ஆயுதப் போராட்டத்தால் தண்டித்த போதெல்லாம் அதனை பயங்கரவாதமாக்கி அதில் குளிர்காய்ந்த சிங்களத் தலைமைகள் இன்று முதற் தடவையாக தமிழ் மக்களை அழித்ததற்காய் உலகால் தண்டிக்கப்படும் சூழல் எழுந்திருக்கிறது. இது இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு உலகம் அளித்து வந்த தமிழினப் படுகொலைக்கான அங்கீகாரத்தை அது மீளப் பெறும் நிலையை உருவாக்கித் தந்துள்ளது. இந்த நிலை ஈழத் தமிழ் மக்கள் அவர்களின் துயரை நிரந்தரமாக களைந்து உலக அங்கீகாரமுள்ள வகைக்கு ஒரு விடுதலையைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமும் தமிழ் மக்கள் உலகெங்கும் இன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கும் சாத்வீகப் போராட்டங்களுமே முக்கிய காரணம். இதற்குள் வேறு பல சர்வதேச நலன்களும் இருக்கின்றன என்பது எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதப் போராட்டம் இன்றைய சூழலில் செய்யத் தக்க தாக்கத்தை விட உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் சாத்வீகப் போராட்டமே அதிக வலுவான தாக்கத்தை செய்யும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. ஒரு வகையில் இது கடந்த கால ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி தான். இருந்தாலும்.. இன்றைய நிலையில் தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டியது தமது மக்களின் துயர் சொல்லும் சாத்வீகப் போராட்டங்களும் தமது விடுதலைக்கான தேவைப்பாட்டின் நியாயங்களையுமே.


இன்று இந்த உலகின் அனுதாபப் பார்வை தமிழ் மக்கள் மீது விழுந்திருக்கிறது. உலகம் சிறீலங்காவில் தமிழ் மக்கள் சம உரிமை கொண்டு வாழ முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் மீது மனித உரிமைகள் திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன.. படுகொலைகள் கட்டவிழ்ந்து விடப்படுகின்றன என்பதை எல்லாம் இப்போ உலகம் தெளிவாக உணர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையை உலகத் தமிழ் மக்கள் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு சாத்வீக மற்றும் இராஜதந்திர வழிகளினூடு தமது போராட்டங்களை முன்னகர்த்தி தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான சான்றுகளை தொடர்ந்து கையளித்து ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்து கொடுப்பதே ஈழத்தில் தமிழ் மக்களும் போராளிகளும் செய்த தியாகங்களுக்கு பிரதிபலனாக அமையும்.


தமிழீழ விடுதலைப்புலிகளும் சரி அவர்களின் போராட்ட வடிவங்களும் சரி தோற்கவில்லை. மாறாக இந்த உலகின் கண்களை அகல விரித்திருக்கின்றன. இதனை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தவறின் அதுவே தோல்வியாக மாறும். அந்த நிலையை தமிழ் மக்கள் ஒரு போதும் எனி ஏற்படுத்தக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடின் அது தமிழீழக் கனவோடு மாண்டு போன மாவீரர்களுக்கும் மக்களுக்கும் இரத்தத்தில் குளித்த தாய் மண்ணுக்கும் செய்யும் முழுத் துரோகமாகவே அமையும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:56 AM

1 மறுமொழி:

Blogger ARIVUMANI, LISBON செப்பியவை...

what i write here?? No words..

Tue Jun 02, 12:33:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க